சினிமா

சிறுகதை … சாமி படங்கள்..! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

நகரின் பிரதான இடத்தில் ஒரு போட்டோ ஃபிரேம் கடை இருந்தது. அந்தக் கடை முழுவதும் சாமி படங்கள். போட்டோ ஃபிரேம் போட்டு வைத்திருந்தார் அழகிரி. விதவிதமான சாமி படங்கள் விதவிதமான வண்ணங்களில் அழகான சட்டங்கள், அடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன.

இதுதான் விலை. இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் எதை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். எந்தக் கடவுள் பிடிக்கிறதோ ?அந்தக் கடவுளை நீங்கள் எடுத்து செல்லலாம்”

என்று அத்தனையும் ஃபிரேம் போட்டு அடுக்கி வைத்திருந்தார் அழகிரி. மதங்களைக் கடந்து அங்கு எல்லா கடவுளர்களும் இருந்தார்கள். ஒரு சமத்துவ இடமாக அந்த இடம் இருந்தது. அழகிரிக்கு காலை, மாலை என்று இல்லாமல் எந்த நேரம் வேண்டுமானாலும் அங்கே தான் இருப்பார் .

தானே படங்களைத் தேர்வு செய்து தானே சட்டங்கள் அடித்து தானே அதைச் செய்து வைப்பார். இதனால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை என்று சொல்வார் அழகிரி. அந்தக் கடையை ஒரு கோவிலாக, ஒரு சர்ச் ஆக, ஒரு மசூதியாகவே நினைப்பார். காரணம் எல்லா கடவுள்களும் அந்தக் கடையில் இருப்பதால் அவருக்கு வேண்டுதல் அதுவாகத் தான் இருந்தது. நீண்ட வருடங்களாக அவர் எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதில்லை. தன்னுடைய கடையையே வழிபாட்டுத் தலமாக மாற்றி இருந்தார் அழகிரி. கோயிலில் சிலுவை இருக்காது. சிலுவை இருக்கும் இடத்தில் சூலம் இருக்காது. மசூதி இருக்கும் இடத்தில் சூலம் இருக்காது.ஆனால் எல்லா கடவுளர்களும் ஒரே இடத்தில் இருக்கும் என்னுடைய இந்தக் கடை தான் எனக்கு சமத்துவம் என்று தத்துவம் பேசுவார் .

அழகிரியின் குடும்பம் எல்லாம் வெளியூரில் இருந்தார்கள். பிழைப்புத் தேடி இங்கு வந்தவர்– வேறு வேலை கிடைக்காத காரணத்தால் இதையே பெருந் தொழிலாக எடுத்துக் கொண்டார். அதை ஒரு சேவையாகவும் சமத்துவமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் செய்து கொண்டிருந்தார் .காரணம் மூன்று மதத்துக்காரர்கள் சண்டையிடும் அந்த அவல நிலையைப் பார்த்து யாருக்கும் சாய்ந்து பேசுவதில்லை என்ற நல்ல எண்ணத்தில் தான் இதை வைத்திருந்தார். எந்தப் பக்கமும் சாயாமல் சமநிலையில் வாழ்வதுதான் சந்தோசமான வாழ்க்கை ” என்று அந்தக் கடையை நடத்திக் கொண்டிருந்தார் அழகிரி.

அந்தக் கடைக்குக் கூடச் சமத்துவ கடவுள் கடை என்றே வைத்திருந்தார். அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் கடவுளை வாங்கிப் போகும் போது அவருக்கு நிறைய சந்தோஷம். ஆனால் மொத்தக் கடவுள்களையும் மற்றவர்களுக்கு கொடுப்பதற்குத் தானே கடவுளை உருவாக்குபவன் என்று கர்வம் அவருக்குள் இருந்தது. இப்படியாகப் போய்க் கொண்டிருக்கும் அவரது அந்தச் சாமி படக் கடையில் ஒரு சமத்துவம் நிலவத்தான் செய்தது.

வழக்கம்போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்த ஒரு நாள், அவருக்கு ஏதோ உடம்பில் ஏற்பட்டது.

” என்ன உடம்பு ஒரு மாதிரியா இருக்கு “

என்று சட்டங்கள் பூட்டப்பட்டுக் கண்ணாடி மாட்டப்படாத சாமி படங்களின் மேல் தலையை வைத்துப் படுத்தார். அப்போது சாமி படம் கேட்டு வந்த ஒரு நபர் “ஐயா ஐயா , ஐயா… எனக்கு சாமி படம் வேணும்”

என்று குரல் கொடுக்க அசையாமல் கிடந்தார் அழகிரி. அருகில் சென்றவர், அவரைத் தொட்டு எழுப்ப முயற்சி செய்தார். அவர் உடம்பு சில்லிட்டது.

‘ ஐயா…ஐயா…” என்று கூப்பிட்டுப் பார்த்த அந்த வாடிக்கையாளர் அருகில் இருப்பவர்களிடம் சொல்ல. அருகில் இருந்த கடைக்காரர்கள் அழகிரியை எழுப்பிப் பார்த்தார்கள். அழகிரி எழும்பவே இல்லை. அவரின் உடம்பு ரொம்பவே சில்லிட்டது. அத்தனை கடவுள்களையும் ஒருசேர , ஒரே மனதோடு ஏற்றுக் கொண்டிருந்த அழகிரி அத்தனை கடவுள்களின் முன்னால் தன் உயிரை விட்டு விட்டார்.

“நல்ல மனுஷன் அழகிரி. எல்லா மனுசங்களும் ஒரே மதத்தில தான் இருப்பாங்க. ஆனா அத்தனை மதங்களும் தனக்கு சொந்தம்னு ” வாழ்ந்திட்டு இருக்கிற அழகிரி இன்னைக்கு செத்து போயிட்டாரு. உண்மையிலேயே எல்லா கடவுள்கள் சொல்ற தத்துவங்களுக்கும் இவருடைய ஆத்மாவுக்கு பொருந்தும். எல்லா கடவுள்களும் இவரோட ஆத்மாவ ஆதரிப்பாங்கன்னு நினைக்கிறேன்”

என்று பேசிக் கொண்டார்கள் அருகில் இருந்த கடைக்காரர்கள்.

அழகிரி இறந்த தகவல் தெரிந்து வந்த குடும்பத்தார்கள் அழகிரியை அடக்கம் செய்தார்கள். தன் அப்பா விட்டுச் சென்ற அந்தக் கடையை அழகிரியின் மகன் கிருபன் எடுத்து நடத்த தயாராக இருந்தான்.

அப்பா விட்டுச் சென்ற தத்துவத்தை அவன் உடைக்கவே இல்லை. அத்தனை கடவுள்களையும் விற்பனைக்கு வைத்திருந்தான். அவர் என்ன முறையில் விற்பனை செய்தாரோ? அதையே கடைப்பிடித்து வந்தான் கிருபன் .விலை நிர்ணயம் செய்யவில்லை. கறாராகப் பேசவில்லை. எந்தப் படத்தை யார் வேணாலும் எடுக்கலாம். அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க தோன்றுகிறதோ ? அதைக் கொடுத்துச் செல்லலாம்”

என்ற அப்பாவின் கோட்பாட்டை அப்படியே கடைபிடித்தான் கிருபன். எல்லா கடவுள்களும் அந்தக் கடையில் இருந்தார்கள். அழகிரியின் படமும் வைத்திருந்தான் கிருபன்.

கடைக்கு ஒரு பெரியவர் வந்தார் ” தம்பி எனக்கு கடவுள் படம் வேணும் ” என்றார்

“எந்த கடவுள் ? யார் வேணும்? ” என்று கிருபன் கேட்க

நேராகக் கை நீட்டினார் அந்தப் பெரியவர்.

“எந்தப் படம்? இயேசு படமா ?” என்று கேட்க

“இல்லை ” என்ற தலையாட்டினார் அந்தப் பெரியவர்,

” இந்தப் படமா? ” என்று கேட்க, அதற்கும் இல்லை என்ற தலையாட்டினார்,

” இந்த பெருமாள் படமா ? “

என்று கேட்க

அதற்கு இல்லை என்றே தலையாட்டினார் அந்தப் பெரியவர். நேராக உள்ளே நுழைந்தவர் அழகிரியின் படத்தைச் சுட்டிக் காட்டினார்.

” இந்தக் கடவுள் படம் வேணும்” என்றார்

” என்ன சொல்றீங்க. அவர் என்னோட அப்பா ” என்று கிருபன் சொல்ல

“உனக்கு வேணா அவர் அப்பாவா இருக்கலாம். இவரை நான் ரொம்ப நாளா பாத்திட்டு இருக்கேன்.இவர எனக்கு நல்லா தெரியும் .அடிக்கடி இந்தக் கடையில நான் சாமி படங்கள் வாங்கிட்டு போவேன். எனக்கு எந்த மதம்னு தனியா இல்ல. எல்லா சாமி படங்களையும் வாங்கிட்டு போயி வீட்டில மாட்டுவேன் .அழகிரி இறந்துட்டார்ன்னு தகவல் எனக்கு தெரிஞ்சது .அதான் வந்தேன். இந்த மாதிரி நல்ல மனுஷன நான் எங்கேயும் பார்த்ததில்லை. எல்லா கடவுளையும் ஒண்ணா வைக்கிறது மட்டும் இல்லாம, எதுக்கும் வேலை முடிவு செய்யாம, தாராள மனசோட இந்தச் சேவைய செஞ்சுட்டு இருந்தாரு உங்க அப்பா அழகிரி. அவர்தான்யா எனக்கு கடவுள்”என்றார் அந்தப் பெரியவர்.

அழகிரியின் படத்தை வாங்கிக் கொண்டு சென்ற அந்தப் பெரியவரை அழுகையோடு பார்த்தான் கிருபன். மூன்று மதக் கடவுள்களும் கிருபனுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *