தடபுடலான விருந்து ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சொந்த பந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பப்பட்டது. அமிர்தம் வீடு முழுவதும் அமர்க்களப் படுத்தப்பட்டிருந்தது .
ஒரு பக்கம் அசைவ உணவு வகைகள். இன்னொரு பக்கம் சைவம். இன்னொரு பக்கம் வேறு உணவுகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன .
“,வேணுங்கிறத வாங்கிச் சாப்பிடுங்க. கூச்சப்படாதீங்க. ஏன்னா இந்த விசேஷம் எங்களுக்கு வேறு விதமான ஒரு விசேஷம் “
என்று சந்தோஷமாகச் சொன்னார் அமிர்தம்.
“இதுக்கு செய்முறை எதுவும் செய்யணுமா? “
என்று ஒருவர் கேட்க
” செய்முறை எல்லாம் எதுவும் வேண்டாம். நீங்க நல்லா சாப்பிட்டுட்டு ,வேணும்னா வீட்டுக்கும் பார்சல் எடுத்துட்டுப் போங்க. இத நான் வந்து வேற மாதிரியான விழாவா பாக்கிறேன். அதனால யாரும் பத்து காசு செய்முறை செய்யக்கூடாது. அது எனக்கு பிடிக்காது .அதனால வந்தவங்க மனசு கோணாம நல்லா சாப்பிடுங்க. அதுக்கு தான் இந்த ஏற்பாடு ” என்று தன் மகன் ராம் கணேஷ அருகில் வைத்துக்கொண்டு அத்தனை பேருக்கும் அறுசுவை உணவு வழங்கிக் கொண்டிருந்தார் அமிர்தம்.
“தம்பி கேட்கிறவங்களுக்கு என்ன வேணும்னு கொடுப்பா? “
என்று தன் மகன் ராம் கணேஷிடம் சொல்ல
” சரிப்பா “
என்று அத்தனை பேருக்கும் அவனே விருந்து வைத்துக் கொண்டிருந்தான் .
விருந்து ஏற்பாட்டில் அமிர்தம் மனைவி காயத்ரியும் பங்கேற்று இருந்தாள்.
‘ அமிர்தம் எது செஞ்சாலும் ஏட்டிக்கு போட்டியா தான் செய்வார். அவர் ஒரு மாதிரியான ஆளு .ஆனா செய்றதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. இப்ப என்ன செய்றாருன்னு , இப்ப உனக்கு விளங்குதா ? ” என்று சொல்ல
“ஆமா நானும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட விஷயத்தை வருத்தப்படாம விருந்து வச்சுக் கொண்டாடுறாரு. எனக்கே ஒன்னும் புரியலப்பா ” என்று சாப்பிட்டுக் கொண்டே தலைசுற்றிப் பேசினர்,
சில மனிதர்கள் .
” சரி சாப்பிட்டு முடிச்சிட்டு அமிர்தம் கிட்ட இது எதுக்கு ? என்னன்னு கேப்போம் ? ” என்று ஒரு சாரார் பேசி கொண்டார்கள்.
வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்கிக் கொண்டிருந்த அமிர்தத்தை ஒருவர் கூப்பிட்டார்.
” ஏங்க, இந்த விருந்து ஏற்பாடெல்லாம் எதுக்கு? வித்தியாசமா இருக்கு ? நீங்க பண்றத யாருமே இதை செய்ய மாட்டாங்க “
என்று ஒருவர் நா தழுதழுக்க கேட்க
” கிட்டத்தட்ட இன்னைக்கு மூணு லட்ச ரூபாய்க்கு மேல செலவாயிருக்கும் .ஆனா, நான் அதப் பத்தி எல்லாம் வருத்தப்படல என் பையனோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம். அவன் சந்தோஷமா இருக்கிறத பாத்தியா? அவ மனசுல வேற எந்த வருத்தமும் வரக்கூடாது அப்படிங்கறதுக்காகத்தான் இத நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுக்காக இப்படியா செலவு பண்றது ? “
“பிறகு எதுக்கு செலவு பண்ண முடியும்? எல்லாமே என் பையனுக்காக தான் ” என்றார் அமிர்தம்.
“சரி உங்க மனசு என்ன சொல்லுதோ அதை செய்யுங்க “
என்று சொல்லிச் சென்றார்கள், சாப்பிட்டவர்கள்.
” தம்பி ராம் கனேஷ் வேற ஏதும் வருத்தம் இல்லையே ?
என்றாள் அம்மா காயத்ரி.
“வெளியில ஒன்னச் சொல்லிட்டு உள்ள ஒன்ன வைக்க கூடாதுய்யா..” என்று அம்மா காயத்ரி கேட்க
” நான் உண்மையைத்தான் சொல்றேன்மா. இப்ப நான் சந்தோஷமா இருக்கேன். ” என்று சொன்னான் ராம் கணேஷ்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நீ ஏன் தம்பிகிட்ட சும்மா பேசிகிட்டே இருக்க – அவன் எப்பவும் சந்தோஷமா தான் இருப்பான் “
என்று அவன் தோளோடு கட்டி அணைத்தார் அமிர்தம்.
“அப்பா நான் பண்ணது தப்பு . இது எப்படி ஆச்சுன்னு தெரியலப்பா “
என்று கண்ணீர் வழிய அப்பாவிடம் சொன்ன ராம் கணேஷை மேலும் இறுகக் கட்டி அணைத்த அமிர்தம்
“தம்பி பரீட்சையில தோத்திட்டதா நினைக்காத. அதெல்லாம் ஏட்டுச்சுரக்கா. நீ வாழ்க்கையில் ஜெயிப்படா .இந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்தல்ல பாஸாகி , அடுத்து படிச்ச, மாத சம்பளம் வாங்குறதுக்கு தான் போவ. நீ முதலாளியாகணும். படிச்சவனுக்கு வேலை கொடுக்குற இடத்துக்கு நீ வரணும். அப்ப ஐஏஎஸ் ஐபிஎஸ் படிச்சவங்க கூட உன் கிட்ட கைகட்டி நிப்பாங்கடா .பணம் தான் இங்க பிரதானம் “
என்று ராம் கணேஷ்க்கு ஆறுதலாக வார்த்தைகளைச் சொன்னார் அமிர்தம்
“அப்பா, நான் இனிமேல் தோல்விய அடைய மாட்டேன்ப்பா .அது படிப்பா இருந்தாலும் சரி தொழிலா இருந்தாலும் சரி . எனக்கே அசிங்கமா இருக்குப்பா”
என்று வெட்கித் தலை குனிந்தான் ராம் கணேஷ்.
” தொடக்கம் தோல்வி அடைந்தா தான், வெற்றி பெற முடியும் இத முதலா நினைச்சுக்க .எல்லாரும் பாஸ் பண்ணாத் தான் விருந்து வைப்பாங்க .நீ பெயில் ஆனதுக்கு நான் விருந்து வச்சிருக்கேன். இதுதாண்டா பாசிட்டிவான விஷயம் .எதைப் பத்தியும் கவலைப்படாத . ஓடு . எத வேணாலும் செய். ஜெயிச்சிரணும். அவ்வளவுதான் “
என்றார் அமிர்தம்.
அன்று இரவு அமிர்தத்திடம் கேட்டாள், காயத்ரி,
“என்னங்க, நம்ம பையன் பனிரென்டாவதில பெயில் ஆயிட்டானேன்னு கொஞ்சம் கூட உங்களுக்கு கவலை இல்லையா ? ” என்று கேட்க
” அடிப்பாவி என்ன பேச்சு பேசுற? எனக்கு இல்லாத கவலையா? எல்லாம் மனுசங்களும் கவலையை வேறு விதமாக காமிப்பாங்க. நான் என்னுடைய கவலையை விருந்து வச்சு காமிச்சிருக்கேன். நாம வருத்தப்பட்டு அவனக் கஷ்டப்படுத்தணும்னா ,திரும்ப கீழே தாண்டி அவன் போவான். இந்த வயசுல ஏதாவது தப்பு தண்டா பண்ணிட்டா, நம்ம புள்ள நமக்கு இல்லாம போயிருவான். அத மறச்ச தான் வேற விதமா நான் ட்ரீட் பண்ணினேன் . மூன்று லட்சம் தான செலவு ஆச்சு .ஆனா நான் பையன் மனசுல லட்சியம்ங்கிற விதைய விதைச்சிட்டேன்.இப்ப அது அவன் மனசில விதையாய் விழுந்துடுச்சு . இனி அவன் படிப்போ? தொழிலாே ? இனி தாேக்க மாட்டான்”
என்றார் அமிர்தம்.
” என்னங்க சொல்றிங்க. “
” ஆமா கண்டிப்பா பாரு . கண்டிப்பா நம்ம புள்ள ஐஏஎஸ் ஆகிவிடுவான் . இல்ல பெரிய தொழிலதிபர் ஆயிருவான், “
காயத்ரியின் கண்களில் கண்ணீர் பெருகியது
முன்பெல்லாம் புத்தகத்தை கையில் கூட தொடாத ராம் கணேஷ் இப்போது நடுநிசியைக் கடந்தும் படித்துக் கொண்டிருந்தான்
” பாத்தியா நான் சொன்னேன்ல கண்டிப்பா நம்ம புள்ள ஒசந்த இடத்துக்கு வருவான்னு “
என்று சொன்ன அமிர்தம் தோளில் ஆறுதலாகச் சாய்ந்தாள் காயத்ரி.