புதுவருடத்திற்கு முதல் நாள் இரவு, ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. திரும்பும் திசையெங்கும் தீபாவளியைத் திரும்பக் கொண்டு வந்தது போன்று பட்டாசு, மத்தாப்புகள் வெடித்துக் கொண்டாடினர், ஊர் மக்கள்
” ஹேப்பி நியூ இயர்..!”
” இனிய புத்தண்டு நல் வாழ்த்துகள் “
என்று கண்ணில் படுபவர்களுக்கு எல்லாம் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஊரில் நான்கு தெருவையும் இணைக்கும் இடத்திலிருந்தது ஒரு தேவாலயம். ஜாதி, மதம், இனம் அத்தனையும் கடந்து அந்தத் தேவாலயத்திற்குச் சென்று வருவார்கள் மக்கள், ஒவ்வொரு புது வருடமும் தேவாலயத்தில் தான் அந்த ஊர்க்காரர்களுக்குப் பிறக்கும் வெள்ளையடிக்கப்பட்டு, நிலை, கதவு, ஜன்னல்களுக்கு வண்ணம் பூசப்பட்டு ரொம்பவே நேர்த்தியாக இருந்தது, அந்தத் தேவாலயம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேவ வசனங்களை ஒலிபரப்பும் தேவாலயத்தின் உச்சியில் இருக்கும் ஒலிபெருக்கி. தேவ வசனங்களைச் சொல்லி, அதற்கான விளக்கத்தையும் அந்த ஒலிபெருக்கி ஒப்பித்துக் கொண்டே இருக்கும் .எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் தேவ வசனங்கள் வரும்போது, அமைதியாகக் கேட்ட பிறகு தான் மற்ற வேலைகளைச் செய்ய ஆயத்தமாவார்கள் அந்தத் தெரு மக்கள் .
அந்தத் தெருவில் சமத்துவம் எப்போதும் நிரம்பி வழியும். ஒவ்வொரு வருடப் புத்தாண்டின் போதும் , தேவாலயத்தில் கொடிச்சீலை ஏற்றுவது வழக்கம். அந்த வருடத்தின் நம்பர், சிலுவையைத் துணியில் பொறித்து, அந்தக் கொடிச்சீலையை ஊரெல்லாம் சுற்றிக் கடைசியில் தேவாலயத்தின் உச்சியில் கட்டி வைப்பது தான், கொடிச்சீலைத் திருவிழா. இப்படித் தான் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் அந்த ஊரில் ஒவ்வொரு புத்தாண்டும்.
அந்த புதுவருடக் கொடிச்சீலைத் திருவிழா துரைராஜ் வீட்டுக்கு வந்தது. இந்துவாகப் பிறந்து, இந்துவாக வாழ்ந்து கொண்டிருக்கும் துரைராஜின் குடும்பத்தார்கள் தான் அந்த வருடக் கொடிச்சீலைக்கு உபயதாரர்கள்.
” ஏ… கழுத ….! இந்த வருசம் கொடிச்சீல திருவிழாவ நாம சிறப்பா நடத்தணும். நம்ம பிள்ளைகள் எல்லாரும் வந்தாச்சா? “
என்று மனைவி மூக்கம்மாளிடம் சொன்னார், துரைராஜ் .
“எல்லாம் வந்திட்டாங்க”
என்று மூக்கம்மாள் சொல்ல
” ஆமா, கழுத , பெறக்கிற புதுவருசம், இந்த ஊரு, ஒலகத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்லதக் கொண்டு வரணும். நம்ம புள்ள குட்டிக, பேரன், பேத்திகள் எல்லாம் , நல்லா இருக்கணும் “
” ம்… ஆமா “
என்று துரைராஜும் மூக்கம்மாவும் பேசிக் கொண்டார்கள்.
” கண்ணுங்களா ,நம்ம தேவாலயத்துக்கு இந்த வருசம் நாம தான் காெடிச் சீலை எடுக்கிறோம். எந்தச் சண்ட சத்தமும் வந்திரக் கூடாது எல்லாரும் ஒத்துமையா இருந்து நல்ல முறையில கொண்டாடணும்”
என்று துரைராஜ் சொல்ல, எல்லோரும் ஆமோதித்தார்கள்.
அந்த வருடத்தினுடைய கடைசி நாள். டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு தேவாலயத்தில் எல்லோரும் கூடினார்கள் . வெள்ளை உடை அணிந்த போதகர்கள் முடிந்து போன ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் பிறக்கப் போகும் ஆண்டின் பெருமைகளையும் அந்த இரவுப் பொழுதில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். முழுக்க முழுக்கக் கிறிஸ்தவர்கள் மட்டுமே கூடும் அந்தத் தேவாலயத்தில் இந்துக்கள் ,முஸ்லிம்கள் என்று அத்தனை பேரும் வரும் புத்தாண்டை விமர்சையாகக் கொண்டாடக் கூடினார்கள்.
” ஆங்கில வருடப் பிறப்பு அப்படிங்கிறது கிமு ,கிபி ன்னு தான் ஆரம்பிக்கிறாங்க. நீங்க எந்த மதத்தை சேர்ந்தவங்களா இருந்தாலும் கிறிஸ்து பிறந்து 2025 வருஷத்துல நாம வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிங்கறது தான் இன்றைய கணக்கு. நாம பார்க்கிற தேதி, சம்பளம் வாங்குறத தேதி எல்லாமே இயேசு பிறந்த வருஷத்த தான் குறிக்குது. பிறக்கப் போகும் இந்த வருடம் எல்லாருக்கும் நன்மை பயக்கணும் “
என்று ஆங்கில வருடத்தின் பெருமையை , உண்மையைச் சொல்லிக் கொண்டிருந்தார், போதகர்.
“
இந்த வருசம் துரைராஜ் வீட்டுல கொடிச்சீலை எடுக்குறாங்க. அவங்களுக்கான ஒரு சிறப்பு பிரார்த்தனையைப் பண்ணலாம்”
என்று போதகர் சொல்ல ,பைபிளை எடுத்து அதில் இருக்கும் வசனங்களைப் படித்தார்கள்.
பைபிளின் வசனம் என்னவென்று தெரியாத மூக்கம்மாள்
“ஆமென்”
என்று மட்டும் சொன்னார். பரிசுத்த ஏசு இவர்களுக்குப் பூரணமான ஆயுள், குறையாத செல்வத்தை வழங்க வேண்டும் “
என்று அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒருமித்த கருத்தோடு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.
இது எதுவும் தெரியாத துரைராஜ், மூக்கம்மாள் குடும்பத்தார்கள்
“ஆமென்”
என்று சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வசனங்கள் எதுவும் தெரியவில்லை.
மறுநாள் காலை ,பிறந்தது புத்தாண்டு, காெடிச் சீலையைத் தயார் செய்து துரைராஜ் வீட்டுக்குக் கொண்டு வந்திருந்தார், அந்த ஊர்த் தையல்காரர் .
வெள்ளைத்துணியில் சிலுவையும் பிறக்கப் போகும் ஆண்டும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது .
“ரொம்ப நல்லா இருக்கு. இந்த வருசம் உங்களுக்கு ஓஹோன்னு எல்லாமே சிறப்பா நடக்கும் “
என்று வாழ்த்திய தையல்காரர் துரைராஜிடமிருந்து அவருக்கான கூலியை வாங்கிச் சென்றார் ,
“சரி ஊர்வலத்தை ஆரம்பிக்கலாமா?”
என்று செபஸ்தியார் கேட்க
“ஆரம்பிச்சிரலாம் ” என்று துரைராஜ் சொல்ல, பச்சை மூங்கிலின் நுனியில் கட்டப்பட்டது, அந்த வருடத்திற்கான காெடிச்சீலை
“சரி, ஊர்வலம் போகலாமா ? “
” சரி”
என்று எல்லோரும் ஆமோதிக்க , மூங்கிலின் நுனியில் கட்டப்பட்ட கொடிச்சீலையைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு, துரைராஜ் வீட்டை விட்டு வெறியேறினார், செபஸ்தியார்.
அந்தத் தெருவில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் கொண்டு போகப் பட்டது, காெடிச்சீலை. மாலைகள், பூக்கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
செபஸ்தியார் தூக்கிப் போன கொடிச்சீலையின் மூங்கிலின் அடிப்பாகத்தில் வீட்டுக்கு வீடு தண்ணீர் ஊற்றினார்கள். அந்தத் தண்ணியில் குளிப்பதற்காகவே கொடி மரத்தின் கீழே குவிந்து கிடப்பார்கள் , சிறுவர்கள்.
” டேய்…. கொஞ்சம் தள்ளி நில்லுங்கடா. கொஞ்சம் தள்ளிப் போங்க”
என்று செபஸ்தியார் கத்தினாலும், சிறுவர்கள் கொடிச்சீலையில் குளிப்பதை விட மாட்டார்கள். ஊரெல்லாம் சுற்றி வந்த கொடிச்சீலை
இறுதியில் தேவாலயத்திற்கு வந்து சேர்ந்த போது, ஊர் மக்கள் எல்லாம் அங்கு கூடியிருந்தார்கள்.
” ஏசுவே…. இந்த வருடம் , எல்லாருக்கும் நல்லபடியா இருக்கணும். எல்லாரும் அவங்க அவங்க துறையில ஜெயிச்சு முன்னேறணும் “
என்று ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தார்கள். பைபிள் வசனங்கள் ஒலிக்க,
கோயிலின் உச்சியில் ஏற்றப்பட்டது காெடிச் சீலை. அந்த வருடத்தின் நம்பர் , சிலுவையைத் தாங்கிய அந்தக் கொடிச்சீலை காற்றில் அசைந்து கொண்டிருந்தது .
” இந்த வருசம், இந்துவான துரைராஜ் கொடிச்சீலைய எடுத்தாரு. அடுத்த வருஷத்துக்கான கொடிச்சீலைய யாரு எடுக்கிறது ?
என்று அங்கிருந்த போதகர் கேட்ட போது,
” அடுத்த வருசம் நம்ம நாராயணன் தான் கொடிச்சீலைய எடுக்கிறாரு”
என்று அங்கிருந்தவர்கள் சொல்ல, அத்தனை பேரும் அதை ஆமோதித்தார்கள். , சாதி, மதம், இனம்,மொழி கடந்து அந்த ஊர்த் தேவாலயத்தின் உச்சியில் பறந்து கொண்டிருந்தது, சமத்துவக் கொடிச்சீலை.
![]()





