சிறுகதை

சிறுகதை – கேமராக்கள்…. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

மெரினா கடற்கரையில் இருக்கும் தலைவர்களின் நினைவிடங்களில் குவிந்திருந்தார்கள் மக்கள்.

அது விடுமுறை நாள் என்பதால் வழக்கத்திற்கு அதிகமான கூட்டம் நிரம்பியிருந்தது. உள்ளூர் வெளியூரில் இருந்து வந்திருந்த கணக்கற்ற மனிதர்கள் செல்பி எடுத்துக் கொண்டார்கள், சிலர் உடன் வந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்தப் பகுதி முழுக்க தங்கள் விருப்பங்களை எண்ணங்களைப் புகைப்படங்களாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள் மக்கள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார் கேசவன். அவரும் அவருக்குத் தேவையான இடங்களில் செல்பி எடுத்துக் கொள்வதும் தேவைப்பட்டால் அங்கு வந்திருப்பவர் யாராவது ஒருவரைப் பிடித்து போட்டோ எடுத்துக் கொள்வதுமாக இருந்தார். உடனே பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து அவ்வளவு பூரித்துக் கொண்டார்.

‘நாமளும் நல்லா தான் இருக்கோம். கண்ணாடியில பாக்குறதுக்கும் போட்டோல பாக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ‘

என்று தனக்குத்தானே தன்னைப் பார்த்து மெச்சிக் கொண்டார் கேசவன்.

அங்கு வந்திருந்த மொத்த மனிதர்களும் தங்கள் கையில் செல்போன் வைத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பதும் செல்பி எடுப்பதுமாய் இருப்பதை கவனித்துக் கொண்டே வந்தவருக்கு ஒன்று உரைத்தது.

‘ ஐயோ பாவம். இவர் வாழ்க்கையத் தான் இந்த விஞ்ஞானம் கெடுத்துருச்சு. இவருக்கு இனி எப்படி வாழ்க்கை வரும்? இதை நம்பி இவரால் வாழ முடியுமா? யார் இவரிடம் அணுகுவார்கள்?’

என்று எத்தனையோ கேள்விகள் வர கேசவன் அங்கு அமர்ந்திருந்தவரைப் பார்த்து வருத்தத்தோடு அவர் அருகில் சென்றார் .

“சார், தப்பா நினைக்காதீங்க. இப்போ எல்லாம் உங்க தொழில் நல்லாப் போகுதா?”

என்று கேட்க

அந்த நபர் பதில் சொல்லாமல்

” இல்லை”

என்று தலையை மட்டுமே ஆட்டினார்.

” பெறகு எதுக்கு இத நம்பி உட்கார்ந்து இருக்கிறீங்க? இப்ப எல்லாம் யாரும் உங்ககிட்ட போட்டோ எடுக்குறது இல்ல. அவங்க செல்போன்லயே எடுத்துட்டு போயிடுறாங்க .அப்படி இருக்கும்போது எதை நம்பி ஒரு நாள் முழுவதும் இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கிங்க. எனக்கு தெரிஞ்சு நீங்க மட்டும்தான் போட்டோ எடுக்காம ஒக்காந்துட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். மத்த எல்லாரும் போட்டோ எடுத்துட்டு இருக்காங்க”

என்று கேசவன் வருத்தப்பட்டு அந்தப் புகைப்படக் கலைஞரிடம் சொல்ல

” என்ன செய்றது சார். விஞ்ஞானம் ஒரு வகையில நல்லது செஞ்சிருக்கு. ஆனா, அது நிறைய பேருக்கு நன்மை செஞ்சாலும் சில பேருக்கு தீமையத்தான் செஞ்சிருக்கு . செல்போன் வர்றதுக்கு முன்னாடி எல்லாம் நாங்க தான் போட்டோ எடுத்து கொடுப்போம் . எம்ஜிஆர் சமாதி, அண்ணா சமாதி இப்படி நிறைய சமாதிகள்ல எத்தனையோ போட்டோகிராபர்கள் இருப்பாங்க. அவங்களுக்கு நிறைய வாழ்க்கை இருந்தது .இப்போ செல்போன் வந்ததுனால யாரும் எங்க கிட்ட போட்டோ எடுக்கிறது இல்ல சார்”

என்று வருத்தத்தோடு சொன்னார் அந்தப் புகைப்படக்காரர். அதை ஆமோதித்த கேசவன்

“நீங்க சொல்றது உண்மைதான். நீங்க ஒருத்தராவது ஒரு போட்டோகிராபர். சினிமாவுல ஃபிலிம் போயி டிஜிட்டல் வந்ததால எத்தனையோ ஃபிலிம் லேப்பை மூடிட்டாங்க . அதுல வேலை செஞ்ச ஆளுக எல்லாம் என்ன வேலை செய்றாங்கன்னு கூட தெரியல. விஞ்ஞானம் வளர்ந்திருக்கு. வளர்ச்சி அடைஞ்சிருக்கு. ஆனா, சில பேரு வாழ்க்கைய அது அழிச்சிட்டிருக்கு. இது ஒரு வகையில அழிக்கப்பட்ட வளர்ச்சின்னே சொல்லலாம்”

என்றார் அந்தப் புகைப்படக்காரர்

” எனக்கு கொஞ்சம் போட்டோ எடுத்து தாரீங்களா?

என்று அந்தப் புகைப்படக்காரரிடம் கேசவன் கேட்க

“தாராளமா எடுத்து தாரேன் சார்”

என்று சொன்னவர் கேசவனை அழகழகாகப் படம் எடுத்தார் .

சிறிது நேரத்திற்கெல்லாம் பிரிண்ட் போட்டு கேசவன் கையில் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த கேசவன் ஆச்சரியம் கொண்டார்

” ஒரு தொழில நேர்த்தியா கத்துக்கிட்டுச் செய்றவங்க அத சரியா செய்வாங்கன்னு சொல்லுவாங்க .செல்போன் வச்சிருக்கவங்க எல்லாம் இப்போ ஸ்டுடியோ , சேனல் வைக்கிறதா நினைச்சுக்கிறாங்க . கண்டதெல்லாம் எடுத்து , கண்டதெல்லாம் பதிவு செய்றாங்க. அவங்களுக்கு அது தப்புன்னு தெரியாது. போட்டோ எடுக்கிற தொழிலச் சரியா கத்துக்கிட்டு ,அது என்ன லைட்டிங்ல . என்ன ஆங்கிள்ல எடுக்கணும்னு போட்டோ எடுக்கிறவங்களுக்கு தான் தெரியும். நீங்க சரியா எடுத்து இருக்கீங்க. நான் எடுத்ததெல்லாம் படங்கள் நீங்க. எடுத்ததுதான் புகைப்படங்கள் “

என்று அந்தப் போட்டோகிராபருக்கு பணத்தைக் கொடுத்து பிரிண்ட் செய்யப்பட்ட போட்டோக்களை வாங்கிச் சென்றார் கேசவன்.

” இப்படி கொஞ்சம் தள்ளி நில்லுங்க .நான் ஒரு செல்பி எடுத்துக்கட்டுமா ?இந்த இடம் ரொம்ப நல்லா இருக்குல்ல “

என்று மக்கள் பேசிக் கொண்டே அவரவர் செல்போன்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *