சிறுகதை

சிறுகதை … கூலிங்கிளாஸ்..! ….. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

கொளுத்தும் வெயிலில் கோடையைத் தணிப்பதற்காக ஏதோ வழிகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தார்கள் மக்கள் .

பெரியசாமி நெடுஞ்சாலையில் கூலிங்கிளாஸ் கண்ணாடிகளை விற்றுக் கொண்டிருந்தார். அதிகாலையில் ஒரு மரத்தடியில் வந்து அமரும் பெரியசாமி பெரிய பலகையை வைத்து, அதில் கம்பியைக் கட்டி விதவிதமான கலர்கலரான ஸ்டைலான கண்ணாடிகளை அடுக்கி வைத்திருந்தார். இருபக்கம் செல்லும் வாகனங்கள் அமைந்த தார்ச்சாலை என்பதால் பெரியசாமியின் கண்ணாடிக் கடையைக் கடந்து யாரும் செல்ல முடியாது .அவரின் இந்தக் கடைக்குச் சிலர் வந்தார்கள். கண்ணாடி வாங்கினார்கள். எப்படியும் இந்தக் கோடை காலத்தை கண்ணாடி விற்பதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் தன் வறுமையை போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார் பெரியசாமி. அவர் வயது எண்பதை கடந்திருக்கும் பெரியவர்.

இந்த வயதிற்கு மேல் வேறு தொழில் செய்ய முடியாது என்று அந்தத் தார்ச்சாலையின் திட்டில் கீழே அமர்ந்து கொண்டு கண்ணாடி விற்பதை மட்டுமே அவரால் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தார். முன்பெல்லாம் ஓடியாடித் தெருத்தெருவாகக் கண்ணாடிகளை விற்றுக் கொண்டிருந்தவர் ,வயது முதிர்வின் காரணமாக இந்த முடிவை எடுத்திருந்தார். அவரிடம் கண்ணாடி வாங்கிக் கொண்டு பேரம் பேசும் மனிதர்கள் நிறைய பேர் இருந்தார்கள். தொண்டைத் தண்ணி வத்த வத்தக் கத்தி ஒரு கண்ணாடி விற்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்று ஆகிவிடும்.

‘ என்ன பொழப்பு இது? நானும் கல்யாணம் பண்ணிப் புள்ள குட்டிகளப் பெத்து அதுக கடமைகளையும் முடிச்ச வச்சிட்டேன். பொண்டாட்டியும் செத்துப் போயிட்டா. பிள்ளைகள் கிட்ட போறதுக்கு அவமானமா இருக்கு .வேற வழி இல்ல. இந்தக் கண்ணாடி வித்துத் தான் காலத்தை தள்ளணும் போல. நமக்கும் சுயமரியாத இருக்குல்ல ‘

என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார் பெரியசாமி .

“அந்தக் கண்ணாடி கடைக்கு அருகில் இளநீர் விற்றுக் கொண்டிருக்கும் ஒரு வயதான காளியம்மாள், பெரியசாமி கதையைக் கேட்டு

“அட நீங்க ஒன்னு. நானும் தாங்க கல்யாணம் காச்சி முடிச்சேன். உங்கள மாதிரி தான் கடமைகளையும் செஞ்சுட்டேன். உங்களுக்கு பொண்டாட்டியில்ல. எனக்கு புருஷன் இல்ல. எனக்கும் எழுவது வயசுக்கு மேல ஆகிப்போச்சு. பையன் , பொண்ணு என்ன ஏதுன்னு கேக்கல. இந்த இளநீர் கடைய வச்சுத தான் என் வாழ்க்கையே ஓடுது .என் புருஷன் வச்சிருந்த இளநீர் கடையில கூடவே நானும் இருப்பேன். இந்த இளநீர் வியாபாரம் தான், எனக்கு இப்ப பிரதானமாக போச்சு. நீங்களும் நானும் ஒன்னுதான் .கைவிடப்பட்ட மனுசங்க .ஆனா கௌரவத்தை விட்டுக் கொடுக்காத மனுசங்க. போறது வரைக்கும் போகட்டும். இந்த வாழ்க்கை புலம்பாம வேலையப் பாருங்க”

என்று காளியம்மாள் பெரியசாமிக்கு ஆறுதல் சொன்னாள்.

அப்போது ஒரு காரில் வந்து இறங்கிய நான்கு ஐந்து நபர்கள் பெரியசாமி கடையை நோக்கி வந்தார்கள்.

” என்ன பெரியசாமி ஐயா இன்னைக்கு உங்களுக்கு ஏவாரம் பயங்கரமா நடக்க போகுது “

என்று காளியம்மாள் சொல்ல, அவளுக்கு பதில் ஏதும் பேசாமல் நேராகப் பெரியசாமியின் கடைக்கு வந்தவர்கள்

” ஐயா கூலிங் கிளாஸ் வேணும்”

என்று கேட்க

“எத்தனை வேணும் ஐயா ? “

என்று ஒவ்வொரு கூலிங் கிளாஸையும் எடுத்துக்காட்டினார். அதற்குரிய விலைகள் அத்தனையும் சொன்னார்.

” இந்த மொத்த கூலிங் கிளாஸ்க்கும் எவ்வளவு விலை?”

என்று வந்த ஒருவர் கேட்க

” என்னையா எல்லாம் சேந்து அஞ்சாயிரம் ரூபாய் இருக்கும்; அவ்வளவுதான் “

என்ற பெரியசாமி சொல்ல

” சரி மொத்த கண்ணாடியும் கொடுங்க. நாங்க ஒருத்தங்களுக்கு கொடுக்கப் போறோம்”

என்று சொல்ல பூரித்துப் போன பெரியசாமி காளியம்மாளைப் பார்த்தார் .

“பெரிய வியாபாரம் தான் பெருசுக்கு “

என்று சைகை செய்தாள் காளியம்மாள்.

வந்தவர்கள் மொத்த கூலிங் கிளாஸையும் எடுத்த போது

“இல்ல …இல்ல… அப்படியே இருக்கட்டும் “

என்று சொல்ல அந்தப் பெரியவரிடம் வந்த ஆட்கள் ஐயாயிரம் ரூபாய் கையில் கொடுத்தார்கள்.

“ரொம்ப நன்றிங்க. இதெல்லாம் என்னைக்கு விக்கிறதுன்னு வருத்தப்பட்டுக் கவலைப்பட்டுக் கிட்டிருந்தேன் . நீங்க மொத்தமா வாங்கிட்டீங்க. ரொம்ப சந்தோஷம். இந்த மொத்தக் கண்ணாடி விக்கணும்னா மூணு மாசத்துக்கு மேல ஆகும் நீங்க வாங்குனதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு “

என்று கண்கள் கலங்கினார் பெரியசாமி. ஐயாயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

“ஐயா, கண்ணாடிய வாங்காம போறீங்களே?”

என்று கண்ணாடிகள் அடுக்கி வைக்கப்பட்ட பலகையைத் தூக்கிக் கொண்டு ஓடினார், பெரியசாமி.

அந்தப் பலகையை பெரியசாமி இடமே கொடுத்து

“ஐயா நான் ஒருத்தவங்களுக்கு கண்ணாடி வாங்கிக் கொடுக்கிறேன்னு சொன்னேன்ல. அது உங்களுக்கு தான். நீங்களே கண்ணாடிய வச்சுக்கங்க. இந்த ஐயாயிரம் ரூபாயும் வச்சுக்கோங்க”

என்று வந்தவர்கள் சொல்ல

” என்னைய்யா உலகத்துல யாருமே செய்யாத ஒரு செயலை செய்றீங்க. நெசமாத்தான் சொல்றீங்களா?”

என்று பெரியசாமி கண்ணீர் மல்க கேட்டபோது

‘ ஆமாங்கய்யா.. பணமும் கண்ணாடியும் உங்களுக்கு தான்”

என்று சொல்ல பெரியசாமிக்கு அழுகை தாங்க முடியவில்லை.

கேவிக் கேவி அழுது கொண்டிருந்தார். அவருக்கு தோளைத் கொடுத்தவர்கள்

காளியம்மாளின் இளநீர் கடைக்குச் சென்றார்கள்

“அம்மா இளநீர் வெட்டுங்க”

என்று வந்தவர்கள் கேட்க

பட்டுப் பட்டென அந்த வயதிலும் இளநீரை வெட்டி வந்தவர்களிடம் கொடுத்தாள் காளியம்மாள்.

இளநீரைக் குடித்தவர்கள் ஐயாயிரம் ரூபாயைக் காளியம்மாளிடம் கொடுக்க

” ஐயா அஞ்சு இளநீருக்கு ஐயாயிரம் இல்லைய்யா? இருநூற்று ஐம்பது தான் “

என்று காளியம்மாள் சொல்ல

” மொத்தப் பணமும் உங்களுக்கு தான் “

என்று வந்தவர்கள் சொல்ல காளியம்மாளுக்கு என்னவோ போலானது.

” என்னடா இது? இதுபோல மனுசங்க இந்த உலகத்தில இருக்காங்களா ?”

என்று பெரியசாமியும் காளியம்மாளும் அழுது கொண்டே நின்று கொண்டிருந்தார்கள். இருவருக்கும் வணக்கம் செலுத்தியவர்கள் தங்கள் காரை எடுத்துக் கொண்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்தார்கள்

‘ அங்கே கடலைப்பருப்பை வறுத்துக் கொண்டு இருந்தார், ஒரு பெரியவர் .

கார் அந்தப் பெரியவரிடம் போய் நின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *