சின்னச்சாமி கொடுத்துப் போன பத்திரிகையை வீசி எறிந்தார் பெருமாள். தூரப் போய் விழுந்த பத்திரிகையைத் தேடி எடுத்து பெருமாளிடமே கொண்டு வந்து கொடுத்தாள் மனைவி அலமேலு.
” ஒரு பெரிய மனுசன் கறி விருந்து வச்சிருக்கோம்னு பத்திரிகை குடுத்திட்டு போயிருக்காரு. அதப் போயி இப்படி தூக்கி எறியிறீங்களே?.இது தப்பு இல்லையா? இது அந்த பெரிய மனுசனுக்கு செய்ற துரோகம் இல்லையா ?” என்று கணவன் பெருமாளிடமே வாதாடினாள் அலமேலு.
” எது துரோகம். அவர் செஞ்சது தப்பு இல்லையா? பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்பக் கறி விருந்து விழா வச்சிருக்கேன்னு பத்திரிகை குடுத்திட்டுப் போறது எவ்வளவு பெரிய வஞ்சகம் ? அதுவும் நான் இல்லாத நேரம் உன்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கிறார் நான் மட்டும் வீட்ல இருந்தேன்னா, இந்த பத்திரிகைய நான் வாங்கியிருக்கவே மாட்டேன். நாக்கப் புடுங்கிட்டுச் சாகிற மாதிரி நாலு வார்த்தை கேட்டிருப்பேன்;
தப்பிச்சிட்டார்” என்று கோபம் கொப்பளிக்கக் கொப்பளிக்கப் பேசினார் பெருமாள்.
“செஞ்ச தப்ப உணர்ந்து, அந்தப் பெரிய மனுசனே நம்ம வீடு தேடி வந்து பத்திரிகை கொடுத்துட்டு போயிருக்காரு அதை மன்னிச்சு நாம அங்க போறதுதான் மனுசத் தனம். அதை விட்டுட்டு வீராப்பா பேசிட்டு இருக்கிறது நல்லா இல்ல. கொஞ்சம் விட்டுப் பிடிங்க. கடைசியிலே இங்க மனுசன் எதையும் எடுத்திட்டுப் போறதில்ல “
என்று தத்துவம் பேசினாள் அலமேலு. அவள் பேசுவதைக் கேட்ட பெருமாள் சன்னமாகச் சிரித்துக் கொண்டார்.
***
“சின்னச்சாமி கறி விருந்து வச்சிருக்கான்னா நான் போகணுமா? என்னால அங்க எல்லாம் வர முடியாது. அவன் கறிச் சோறச் சாப்பிடுறதுக்கு நான் ஒன்னும் நாக்கத் தொங்கப் போட்டுட்டு அலையல. நான் வர முடியாது “
என்றான் முனியாண்டி.
” நம்ம வீடு தேடி வந்து பத்திரிகை குடுத்துட்டு போறாரு. நம்ம மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தா நமக்கு பத்திரிகை குடுத்துட்டு போவாரு. நீங்க இவ்வளவு உதாசீனப்படுத்துறது நல்லா இல்ல” என்று முனியாண்டியின் மனைவி ராஜம்மாள் சொல்ல,
” இது என்ன கல்யாணம் காது குத்தா ? கறி விருந்து விழான்னு புதுசா ஒன்னு ஆரம்பிச்சு, அதுக்கு பத்திரிகை வேற அடிச்சுக் குடுத்திருக்கான். இத எதுக்காகப் பண்றான்?” என்று இன்னும் கொஞ்சம் முறுக்கினார் முனியாண்டி.
” எனக்கென்ன தெரியும். எல்லாம் உங்க சினேகிதர் செய்ற வேல ” என்று ராஜம்மாள் சொல்ல
” இதுல ஏதாவது ஒரு சூட்சுமம் இருக்கும். அவன் ஒரு காரியம் பண்றார்ன்னா, அதுல நல்லது இல்லாம பண்ண மாட்டார். இதுல ஏதோ இருக்குன்னு நினைக்கிறேன்” என்று முனியாண்டி சொல்ல
” ஆமாங்க , போய் தான் பாக்கலாமே ? ” என்று நம்பிக்கை சொன்னாள் ராஜம்மாள்.
***
“எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்துட்டு போயிருப்பார், இந்தச் சின்னச்சாமி அவருடைய கறி விருந்து விழாவுக்கு எல்லாம் நான் வர முடியாது. எப்படி அவர் முகத்துல நான் முழிப்பேன். எப்படி அவர் குடுக்கிற கறி விருந்த நான் சாப்பிடுவேன். என்னால எல்லாம் அங்க வர முடியாது”
என்று சின்னச்சாமி கொடுத்துப் போன கறி விருந்து பத்திரிகையை மறுபடியும் மறுபடியும் வாசித்தபடியே பேசிக்கொண்டு இருந்தார் அவரின் உறவினர் பூமிநாதன்.
***
” தப்பு இல்லைங்க .நீங்களும் தப்பு செஞ்சு இருக்கீங்க .அவரு அத மன்னிச்சுட்டாரு. அதெல்லாம் மறந்துட்டு ,அந்தப் பெரிய மனு சன் கறி விருந்து வச்சிருக்கேன் வந்து வயிறாரச் சாப்பிட்டுப் போங்கன்னு சொல்றது, எவ்வளவு பெரிய விசயம். நாம எல்லாம் வஞ்சகத்த மனசுல வச்சுட்டு எதுவும் பேசாம இருக்காேம். ஆனா, அந்தப் பெரிய மனுசன் நெஞ்சில எந்த வஞ்சகமும் துரோகமும் இல்லாம பத்திரிகை குடுத்துட்டு போறாருன்னா , அவர் நம்மள விட ஒசந்த மனுசன். ஒரு எட்டுப் போயிட்டு தான் வருமே ? “
என்று பூமிநாதனின் மனைவி கோசலை சொன்னாள்.
அவள் பேசுவதைச் செவிமடுத்த பூமிநாதன் எதுவும் பேசாமல் இருந்தான். இப்படியாக உறவினர்கள் ஒவ்வொருவரும் சின்னச்சாமி கறி விருந்தைக் கேலி செய்வதும் கிண்டல் செய்வதும் அங்கெல்லாம் போக முடியாது என்றும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
***
” ஏம்மா, இவ்வளவு செலவு பண்ணி கறி விருந்து வச்சிருக்கோம். ஆளுக வருவாங்களா? ” என்று தன் மனைவி தனலட்சுமியிடம் கேட்டார் சின்னச்சாமி
” நீங்க ஒண்ணும் வருத்தப்படாதிங்க : கண்டிப்பா ஆளுக வருவாங்க” ஆறுதல் சொன்னாள் தனலட்சுமி.
சின்னச்சாமி நினைத்தபடியே கறி விருந்து விழா தடபுடலாக ஆரம்பமானது. பந்தல் அலங்காரம் கொட்டு மேளம் ,வாண வேடிக்கை என்று அமர்க்களமாக ஆரம்பமானது.
திட்டியவர்கள் , திட்டாதவர்கள் வஞ்சகத்தை மனதில் வைத்தவர்கள், துரோகம் செய்தவர்கள் என்று அத்தனை பேரும் கறி விருந்து விழாவில் கூடினார்கள். வந்த அத்தனை பேரையும் சின்னச்சாமி தன் குடும்பத்துடன் நின்று வரவேற்றார்.
” வாங்க … வாங்க… எல்லாம் நல்லா சாப்பிட்டு தான் போகணும்” என்று அன்பு கட்டளையிட்டார்கள்.
” கல்யாணம் ,காதுகுத்து, சடங்குன்னா, இன்னாருக்கு இந்த விழான்னு தெரிஞ்சுக்கலாம். இது என்ன கறி விருந்து விழா ? என்ன செய்யப் போறார் இந்தச் சின்னச்சாமி ? ” என்று இது பற்றித் தெரியாத சிலர் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேடை ஏறிய சின்னச்சாமி
தான் தவறு செய்ததாக நினைத்த பெருமாளை மேடைக்குக் கூப்பிட்டு, அவருக்கு சால்வையும் பரிசுப் பொருளும் கொடுத்தார்.
பூமிநாதன் தவறு செய்ததை மறந்து அவரையும் கூப்பிட்டு சால்வை, பரிசுப் பொருள் கொடுத்தார். இப்படிச் சண்டை இட்டவர்கள், கோபித்துக் கொண்டு போனவர்கள். உறவினர்கள், நண்பர்கள் ,தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று அத்தனை பேரையும் அந்த விழாவிற்கு அழைத்து வந்து கறி விருந்து கொடுத்தார் சின்னச்சாமி. ஒரு பக்கம் தடபுடலாக மணக்க மணக்கக் கறி விருந்து நடக்க ஏற்பாடு ஆனது. கண்கள் கலங்கியபடியே சின்னச்சாமி பேச ஆரம்பித்தார்.
” எல்லாருக்கும் வணக்கம். இந்த கறி விருந்து விழா எதுக்கு ? இப்படி ஒரு விழா இருக்கா? இத செய்யலாமா? இதனால என்ன பலன்னு? ” நீங்க எல்லாரும் யோசிக்கலாம். இது எதுக்குன்னு நீங்க கூடப் பேசி இருக்கலாம். ஆனா, இந்தக் கறி விருந்து விழாவுல நான் இனிமே பாக்கவே கூடாதுன்னு நெனச்ச ஆளுக இங்க வந்திருக்காங்க. இனிமே என்னையப் பாக்கக் கூடாதுன்னு நினைச்சவங்க இங்க வந்திருக்காங்க.
என்ன வெறுத்து போன சொந்தக்காரங்க வந்திருக்காங்க. இந்தச் சின்னச்சாமி நல்லவன் இல்ல அப்படின்னு சொன்ன என்னுடைய உறவுகள் வந்திருக்காங்க. அவங்க எல்லாரையும் இந்தக் கறி விருந்து திருவிழாவில நான் பாக்குறதுக்கு தான் இந்தக் கறி விருந்து திருவிழாவ வச்சேன். மத்தபடி பணம் வசூலிக்கவோ இல்ல இத வச்சு பணம் சம்பாதிக்கவோ இல்ல. விட்டுப் போன உறவுகளையும் அடிக்கடி சந்திக்க முடியாத நண்பர்களையும் சேர்த்து வச்சு பாக்க ஆசைப்பட்டு ஏற்பாடு செய்தது தான் இந்தக் கறி விருந்து விழா .
சின்னச்சாமி பேசுவதை எல்லோரும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
” இந்த உலகம், ரொம்ப அவசரமான உலகமா போச்சு. ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்க முடியல .செல்போன், வாட்ஸ் அப்பில தான் நாம வாழ்ந்திட்டு இருக்கோம். நம்ம உறவு இப்ப ரொம்ப சுருங்கிப் போச்சு. ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் கொடுத்து பேசி வருசக் கனக்காகுது. உங்களையெல்லாம் ஒன்னு சேத்து வச்சுப் பாக்கணும்ங்கிறதுக்காக தான் இந்த விழா. இந்த விழாவில் உங்களை எல்லாம் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷப்படுகிறேன். இப்படியே என் உசுரு போனாலும் அதப் பத்தி நான் கவலைப்பட மாட்டேன் ” என்று சின்னச்சாமி அழுது கொண்டே சொல்ல
” அப்படியெல்லாம் சொல்லக்கூடாது சின்னசாமி. நீங்க ரொம்ப நல்ல மனுஷன். நாங்கெல்லாம் பணம் காசு சம்பாதிச்சு. அதப் பாதுகாத்து வச்சு அடுத்த தலைமுறைக்கு சேத்து வச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா, நீங்க இவ்ளோ பெரிய மண்டபத்தப் பிடிச்சு எங்கெங்கோ இருந்த சொந்த பந்தங்களை எல்லாம் ஒன்னு சேத்து ஒரே இடத்தில பாக்க வச்சத நினைக்கும் போது, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு .” என்று விழாவிற்கு வந்த ஒருவர் சொல்ல,
” நான் கூட சின்னச்சாமிய தப்பா நினைச்சுட்டு இருந்தேன். மனுசனா வாழ்றதுக்கு தகுதியான மனுசன் நீங்கதான் சின்னச்சாமி. தவறா பேசுன உறவினர்கள், நண்பர்கள் நிறைய சொந்தக்காரங்கன்னு இங்க வந்திருக்காங்க .அவங்கள எல்லாம் ஒரே எடத்தில சந்திச்சது பாக்க வச்சது. அவங்க கூட பேச வச்சது ரொம்ப சந்தோசம்” என்று விழாவிற்கு வந்த இன்னொருவர் சொல்ல, எல்லோரும் இதை ஆமோதித்தார்கள். அத்தனை பேருக்கும் கறி விருந்துத் திருவிழா ரொம்பவே பிடித்துப் போனது.
சின்னச்சாமி மாதிரி நாமளும் ஏன்? விட்டுப் போன சொந்த பந்தங்களையும், உற்றார், உறவினர்களையும், நட்புகளையும் இப்படியொரு கறி விருந்து திருவிழா வச்சு ஒன்று கூட்டக் கூடாது ? என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். கறி விருந்துத் திருவிழாவிற்கு வந்தவர்கள்.