சிறுகதை விழாக்கள்

சிறுகதை …ஒட்டகத் திருவிழா..! விழா 34 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது, சூறைக்காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் வெளி. மருந்துக்குக் கூட ஈரமில்லாத பாலைவனம் போன்ற பகுதி. அசையும் சிறு சிறு மலைகளாக அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தன, பாலைவனக் கப்பலான ஒட்டகங்கள். தன் நீண்ட கழுத்தை அப்படியும் இப்படியுமாய் நீட்டி நீட்டி நடந்து வந்து கொண்டிருந்த ஒட்டகங்களை ஓரமாக ஓட்டிப் போய்க் கொண்டிருந்தான், வீர். நீண்ட கால் குளம்படிகள் மண்வெளியில் பதியப் பதிய நடந்து வந்த ஒட்டங்களை

“த்தே …. த்தே..” என்று அதட்டியபடியே வந்து கொண்டிருந்த வீரைப் பார்த்து

” என்ன வீர் சந்தைக்கா ?” என்று சத்தமாகக் கேட்டான் சஞ்சய்.

” ம்.. ஆமா .!

” நானும் கூட சந்தைக்கு வரணும். என் ஒட்டகம் இப்ப மேஞ்சிட்டு இருக்கு”

” சரி…. நீ அப்புறமா வா.. நான் இப்ப போறேன்”

” “சரி.. நீ முன்னாடி போ”

என்று சஞ்சய் சொல்லியபடியே தன் ஒட்டகத்தைத் தேடிச் சென்றான்.

திமு திமுவெனப் போன ஒட்டகங்களை எல்லாம் ஒரு சேரப் பார்த்த வீருக்கு கண்ணீர் பெருகியது.

‘இந்த ஒட்டகங்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில என்னைய விட்டுட்டுப் போகப் போகுதா? என்ன செய்ய ? எப்படி எல்லாம் எங்கூட இருந்துச்சு இந்த ஒட்டகங்கள் ‘ என்று நினைத்த வீரின் கண்களில் கண்ணீர் பெருகியது.

வண்ண வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, உடல் முழுவதும் பல நிறங்களில் சாயப் பொடிகள் பூசப்பட்டு, ஊர்வலமாகக் கூட்டி வரப்பட்ட ஒட்டகங்களைப் பார்த்து ஊரே கண் வைத்தது.

” வீர்… ஒன்னோட ஒட்டகங்கள் ரொம்ப அழகா இருக்கு. கண்டிப்பா உன் ஒட்டகங்கள் தான் அத்தனை பரிசுகளையும் வாங்கப் போகுது.”

“நிஜமாவா ? “

” நிச்சயமா “

” கண்டிப்பா … நீ தான் எல்லா பரிசுகளையும் அள்ளிட்டு வரப் போற ? “

என்று ஒட்டகத் திருவிழாவிற்கு வந்த ஆட்கள் எல்லாம் சொல்ல, வீருக்கு ரொம்பவே சந்தோசம்.

வீருக்கு தன் ஒட்டகங்களை எல்லாம் தட்டிக் கொடுத்தான். அதன் கீழ் வாயைத் தொட்டுத் தடவி,

” உங்களால தான் எனக்குப் பேரும் புகழும் வரப் போகுது. எல்லாம் நல்லா செய்யணும் நீங்க சரியா ?”

என்று ஒவ்வொரு ஒட்டகமாகத் தொட்டுத் தடவி அதன் காதுகளில் ரகசியம் சொன்னான், வீர்

அதை எல்லாம் ஆமோதித்தது போலவே தன் நீண்ட தலையை ஆட்டி ஆட்டி வீர்க்கு விடை சொன்னது, ஒட்டகங்கள்.

” நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத் திருவிழா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பமாகும்” என்ற அறிவிப்பு குழாய் ரேடியாவிலிருந்து வந்து கொண்டிருந்தது .வீர் தன் ஒட்டகங்களை எல்லாம் திருவிழாவின் உள்ளே விட்டான்.

ஒட்டகங்களின் அணிவகுப்பு. ஒட்டகங்களின் நடனம். ஒட்டகப்பந்தயம் என்று வெகு சிறப்பாக நடைபெற்றது, அந்த ஒட்டகத் திருவிழா. உறவினர்களும் மக்களும் சொன்னது போலவே அந்த ஒட்டகத் திருவிழாவில் ஒட்டுமொத்த பரிசுகளையும் வீரின் ஒட்டகங்களே அத்தனை பரிசுகளையும் பெற்றன. அந்தத் திருவிழாவில் வீர்ருக்கு அவ்வளவு பெரிய மரியாதை வாங்கித் தந்தன அவன் வளர்த்த ஒட்டகங்கள்.இந்த திருவிழாவில் வீருக்கு ஏகப்பட்ட மாலை, மரியாதை வழங்கப்பட்டன தன்னுடைய ஒட்டகங்களை எல்லாம் ஆரத்தழுவி சந்தோஷம் கொண்டான், வீர்

அந்தத் திருவிழா நினைவுகள் எல்லாம் வீர் முன்னால் கண்ணில் விழ , அவன் மனது வலித்தது. அத்தனை பெருமைகளைத் தேடித் தந்த ஒட்டகங்களை எல்லாம் சந்தைக்குக் கூட்டி சென்று கொண்டிருந்தான், வீர். ஏற்கனவே கூடியிருந்தது, சந்தை.வரும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆடு, மாடு , ஒட்டகங்களை அந்தச் சந்தையில் விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள். அந்தச் சந்தையில் வீரின் ஒட்டகங்களும் வந்து சேர்ந்தன.

இன்னும் சிறிது நேரத்தில் இந்த ஒட்டகங்கள் எல்லாம் நம்மை விட்டுச் சென்றுவிடும் என்று அழுது கொண்டே நின்று கொண்டிருந்தவனிடம் வந்த தரகர்

“இந்த ஒட்டகங்கள் எல்லாம் விற்பனைக்கா ?”

” ஆமா” என்று வீர் சொல்ல,

” சரி, விலையைச் சொல்லுங்க “

என்று தரகர் கேட்க, ஒட்டகங்களின் விலையைச் சொன்னான், வீர்.

வீர் சொன்ன விலை தரகனுக்குக் கிட்டவில்லை. தரகன் சொன்ன விலை வீர்க்குக் கிட்டவில்லை. இருவருக்குமான வாதங்கள் ஒரு கட்டத்தில் சமாதானமாகி ஒட்டகங்கள் விற்பனை செய்யப்பட்டன. விற்பனை செய்யப்பட்ட ஒட்டகங்களை எல்லாம் தரகன் கையில் கொடுத்துவிட்டு வீர் திரும்பி வரும்போது, ஏதோ அவனை நோக்கி வருவது போன்ற சத்தம் கேட்கத் திரும்பி பார்த்தான், வீர்.

மொத்த ஒட்டகங்களும் வீரை நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தன.

“என்ன இது? அத்தனை ஒட்டகங்களையும் வித்துட்டோம்.

ஆனா, ஒட்டகங்கள் எல்லாம் நம்மை நோக்கித் திரும்பி வருதே ? “

என்று பதறிப் போன வீர், ஓடி வரும் ஒட்டகங்களைப் பார்த்து வீர் அப்படியே நின்றான்.

ஓடி வந்த ஒட்டகங்கள் தன் கால்களைத் தூக்கி வீரின் மேலே போட்டு, தன் வாயால் வீரைத் தொட்டுத் தடவி தன் மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. அதன் மொழியை புரிந்து கொண்ட வீரால், என்ன செய்வதன்று தெரியவில்லை.

” கடன் தொல்லையால தான ஒங்கள நான் வித்தேன். இல்லன்னா உங்கள நான் ஏன் விக்கப் போறேன் ? “

என்று வீர் கத்திக் கதற, அவனோடு சேர்ந்து ஒட்டகங்களும் அழுதன. கீழே படுத்து, மண்டியிட்டுத் தன்னை விற்க வேண்டாம் .என்னை உன்னுடன் அழைத்துச் செல் என்று அத்தனை ஒட்டகங்களும் வீரிடம் மன்றாடின

இதைப் பார்த்த மக்களுக்கு எல்லாம் என்னவோ போலானது.

” மனுசனுக்கும் மிருகத்துக்கும் இவ்வளவு பாசமா ? இந்த ஒட்டகங்களை எல்லாம் கூட்டிட்டு போங்க”

என்று ஒருவர் சொல்ல

” இல்லங்க . கடன் பிரச்சனை. குடும்ப செலவு, இதுக்கு எல்லாம் பணம் வேணுமே ? என்ன செய்றது அதுதான் இந்த ஒட்டகங்களை எல்லாம் வித்தேன் “

என்று வீர் அழுது கொண்டே எதிர் பதில் சொல்ல,

” இந்தப் பாசத்துக்கு மேல பணம் பெரிய விசயமா என்ன? கூட்டிட்டுப் போங்க. தியாகத் திருநாள் கூட ஒரு விதமான இரக்கம் சார்ந்த விழா தான். நபிகள் நாயகம் பிறக்கிறதுக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி இப்ராஹிம் நபி மனைவி ஹாஜிராவுக்கு குழந்தை இல்லாம இருந்திருக்கு.அல்லா கிட்ட வேண்டியிருக்காரு இப்ராஹிம் ரொம்ப வயசானதுக்கப்புறம் தான் இப்ராஹிமுக்கு இஸ்மாயில்ங்கிற ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கு

ஆனா ,இஸ்மாயில அல்லாவுக்கு பலி குடுக்கிற மாதிரி கனவு கண்டு இருக்காரு இப்ராஹிம். அல்லாவின் கட்டளையை மீறாத இப்ராஹிம் நபி, தன்னுடைய மகன் இஸ்மாயில் கழுத்தில கத்தி வச்சு அறுத்திருக்காரு .கழுத்து அறுபடல. அப்போதான் அல்லாஹ் சொல்லி இருக்கார். உன்னுடைய நேர்மையும் தியாகத்தையும் நான் கண்டுபிடிச்சிட்டேன். நீ உன்னோட பிள்ளைய பலி கொடுக்க வேணாம். அதுக்குப் பதிலா இந்த ஆட்டப் பலி கொடுன்னு சொல்லியிருக்கார்.

அல்லாவ வேண்டிக்கிட்டு ஆட்டப் பலி குடுத்திருக்காரு, இப்ராஹிம் நபி. அதுக்கு முன்னாடி வரைக்கும் மனுசங்களைப் பலி கொடுத்திட்டு இருந்த இந்த மனுசங்க , அதுக்கு அப்புறம் ,ஆடு ,மாடு , ஒட்டகங்களைப் பலி கொடுத்து தான் ஈகைத் திருநாள் அதாவது தியாகத்திருநாளக் கொண்டாடுறாங்க.ஆனா, அந்தத் தியாகத் திருநாள விட இந்த ஒட்டகங்களோட பாசம் என்னைய உலுக்கிருச்சு. இந்த ஒட்டகங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போ “

என்று அங்கிருந்த மக்கள் எல்லாம் ஒரு சேரச் சொல்ல, ஒட்டகங்கள் விற்ற அத்தனை பணத்தையும் தரகனிடம் கொடுத்துவிட்டு ,தன் ஒட்டகங்களை எல்லாம் கூட்டி வந்தான், வீர்.

முன்னைவிடச் சந்தோசமாய் ஆடிப்பாடி மகிழ்ந்தபடியே வீர் பின்னால் முன்னால் என்று ஓடி வந்து கொண்டிருந்தன, ஒட்டகங்கள்.

வீரின் மனதில் அடுக்கடுக்காய் ஓடியது, அடுத்த வருடத்திற்கான, ஒட்டகத் திருவிழா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *