பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நூலகத்தில் அன்று இடமே இல்லாமல் இருந்தது. ஆட்கள் அவ்வளவு நெருக்கடியாக அமர்ந்திருந்தார்கள். ஏதாவது இடம் கிடைக்குமா? என்று தேடிப் பார்த்தான் குபேரன். எங்கும் இடம் கிடைக்கவில்லை. அவன் வழக்கமாக அமரும் இடத்தைத் தேடிச் சென்றான். அங்கும் இடமில்லாமல் இருந்தது. ஏற்கனவே சில டேபிள்களில் புத்தகம் ,தண்ணீர் பாட்டில் என்று தன் உடமைகளை வைத்துப் பாேயிருந்தார்கள்.
நாங்கள் வரும் வரைக்கும் இந்த இடத்தை யாரும் அபகரிக்கக் கூடாது. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் வருவோம். எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரிவாேம். எங்களை யாரும் கேட்கக் கூடாது. இது நாங்கள் ரிசர்வ் செய்த இடம்
என்று அந்த இருக்கைகளை ரிசர்வ் செய்துவிட்டு போய்விடுவார்கள், முன்னால் அந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள். அவர்கள் வரும் வரையில் அந்த இடத்தில் யாரும் அமரக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. தனக்கு இடம் கிடைக்குமா ? என்று குபேரன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். ஒரு இடம் மட்டும் இருந்தது. அந்த இடத்தில் அமர போன போது,
” அங்கே அமர்ந்திருந்த ஒருவர்
“சார் ஏற்கனவே இங்கே ஆள் இருக்காங்க”
என்றார்.
“அவர் போய் எவ்வளவு நேரம் ஆச்சு?”
என்று குபேரன் கேட்க
“ஒரு மணி நேரம் ஆகும். என்னதுஒரு மணி நேரமாச்சா? இவ்வளவு நேரம் வரல. அவருக்காக இந்த இடம் காத்துக்கிட்டு இருக்குமா? மத்தவங்க எல்லாம் படிக்க வேணாம். இங்க படிக்க வாரேன்ங்கிற பேர்ல ஜோடி ஜோடியா வர்றது தேவையில்லாமல் உட்கார்ந்துக் கிறது .அரட்டை அடிக்கிறது .அப்பா அம்மா கிட்ட படிக்கப் போறேன்னு பொய் சொல்லிட்டு இங்க வந்து சுத்திக்கிட்டு இருக்கிறது. இந்த லைப்ரரி இன்னொரு காலேஜ் மாதிரி ஆகிப் போச்சு .இல்ல… இல்ல பீச் மாதிரி போச்சு… இல்ல பார்க் மாதிரி ஆயிப்போச்சு. இல்ல வேற ஏதாவது சொல்லிருவேன்”
என்று கோபத்தில் கத்தினான் குபேரன் .அங்கு இருந்தவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.
” அவர் சொல்றதும் நியாயம் தான். இந்த லைப்ரேரிக்கு யாரு படிக்க வாராங்க . இங்க படிச்சிட்டு இருக்கிறவங்க எல்லாம் பாஸ் ஆகுறது மாதிரி தெரியல. போட்டித் தேர்வில படிச்சு பாஸாகி , அரசாங்க வேலை பாக்கணும்னு தானே இங்க படிக்க வாராங்க .ஆனா இங்க வர்ற அதிகமான பேர் அரட்டை அடிக்கிறதுக்கு தான் வாராங்க. படிக்கும் போது எதுக்குங்க ஜோடி சேர்ந்து உக்காரணும். ஆணும் பெண்ணும் ஒன்னா உக்காந்தா தான் படிப்பு வருமா? இது என்ன அசட்டுத் தனமான நாகரீகம் ? இது தப்பு?”
என்று குபேரன் கத்தினான். அங்கு ஏற்கனவே ஜோடியாக அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு மாதிரியா இருந்தது .
“அவர் சொல்றதும் கரெக்ட்டு தான் இங்கு யாரும் படிக்க வர்ற மாதிரி தெரியலங்க லவ் பண்ண வாராங்க போல “
என்று அவரும் சொல்ல
“குபேரன் வாங்க இந்த இடத்தில உட்காருங்க”
என்று ராமானுஜம் குபேரனைக் கூப்பிட்டார்.
” இந்த இடத்தில ஆள் இருக்காங்க பாேல. நான் உட்காரல. வேண்டாம் “
என்றான் குபேரன்.
“நீங்க உட்காருங்க. இங்க உட்காந்து இருக்கிறவரு. நம்ம நண்பர் தான் .அவர்கிட்ட நான் சொல்லியிருக்கிறேன். நீங்க உட்காருங்க “
என்று ராமானுஜம் சொல்ல, மேஜையின் மீதிருந்த புத்தகங்களைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு அமர்ந்தான் குபேரன்.
சிறிது நேரத்திற்கு எல்லாம் ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்த ஆலன் வந்தார். தன் இடம் பறி போய் விட்டதை நினைத்துத் திரு திருவென விழித்தார் .
” நம்ம இடத்தில ஒக்காந்திருக்கிறது யாரு ?”
என்று குபேரனைப் பார்த்தவருக்கு உச்சந்தலையில் கோபம் வந்திருக்க வேண்டும். இதைப் பார்த்து அருகில் இருந்த ராமானுஜம்
” இவரு நம்மாேட பிரண்டு தான் உட்காரட்டுமேன்னு நான் தான் சொன்னேன் ” என்று ராமானுஜம் சொல்ல
“ம்… நம்ம இடத்தை பிடித்துக் கொண்டானே ?”
என்று மனதுக்குள் வருத்தம் கொண்ட ஆலன் எதுவும் பேசமால் இடம் மாறி அமர்ந்தார் .
” இவர் என்னுடைய நண்பர். பேரு குபேரன் “
என்று ராமானுஜம் அறிமுகப்படுத்த
” ஹலோ… நான் , ஆலன் “
என்று ஆலனும் சொல்ல
இருவரும் பரஸ்பரம்
ஹலோ என்று அறிமுகம் செய்து கொண்டார்கள்.
” நீங்க என்ன செய்றீங்க? “
என்று குபேரன் கேட்க
“என்னங்க படிச்ச படிப்புக்கு சரியான வேலை கிடைக்கல. சும்மா இருக்க வேண்டாம்னு இந்த லைப்ரலில வந்து படிச்சிட்டு இருக்கேன்”
என்றார் ஆலன்.
“அப்படியா , நானும் அப்படித் தாங்க “
என்று இருவரும் அந்த நூலகத்தில் சன்னமாகப் பேசினார்கள்.
” சரி நாம வெளியில போய் பேசலாமா ? “
என்று இருவரும் பேசிக் கொண்டார்கள்.
அதற்குள் அந்த லைப்ரரியில் ஏதாே வேலை செய்து கொண்டிருப்பார்கள் போல
“.. டமால்… டமால் …..”என்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
சரி இதற்கு மேல் இங்கு அமர்ந்து படிக்க முடியாது. ரொம்ப தொந்தரவாக இருக்கு.
“வெளிய பாேகலாமா?”
என்று குபேரனும் ஆலனும் வெளியே வந்து தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஆலனின் தொழில், குபேரன் தொழில் இரண்டும் ஒன்றாகவே இருந்தன
“அட என்ன ஆச்சர்யம் ? இதுக்கு முன்னால உங்களைப் பத்தி எனக்கு தெரியாது? என்னைப் பத்தி உங்களுக்கும் தெரியாது .நம் நண்பர் ராமானுஜம் இடம் மாறி அமரச் சொன்னதால ஒரு அழகிய நட்பு நமக்கு கிடச்சிருக்கு. சில நேரங்கள்ல பிரச்சனைகள் கூட பிரியத்துக்கு வழி வகுக்குது. உங்களுக்கும் எனக்கும் அப்பிடித் தான் போல. உங்க எடத்தில நான் உட்காரலன்னா உங்களைப் பத்தி எனக்கு தெரியாம போயிருக்கும். நீங்களும் என்னையப் பத்தி தெரிஞ்சுக்கிற வாய்ப்பு இருந்திருக்காது . நம்ம ரெண்டு பேரையும் ஒருவரை ஒருவர் சந்திக்க வச்சு இப்பிடி நெருக்கமான உறவை ஏற்படுத்தியது இந்தப் பிரச்சனை தான். பிரச்சனைகளைக் கொண்டாடுவோம். சில நேரங்கள்ல பிரச்சனைகள் தான் சில மனிதர்களை சேர்த்து வைக்கிது “
என்று இருவரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
” ஆமா நண்பரே . என் இடத்த நீங்க பிடிச்சுக்கிட்டீங்கன்னு எனக்கு கொஞ்சம் வருத்தமா தான் இருந்துச்சு. ஆனா, அந்த வருத்தம் இப்ப சந்தோஷத்தில முடிஞ்சிருக்கு. கண்டிப்பா நாம சேர்ந்து வேலை செய்யலாம் “
என்று சொன்னார் ஆலன்.
“நிச்சயமாக இரண்டு பேரும் சேர்ந்து பயணிப்போம்”
என்று இருவரும் வெளியில் பேசிவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.
” சார் நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க. இந்த லைப்ரேரிக்கு வர்றவங்க எல்லாம் எதுக்காக வராங்க ?
” படிக்கிறதுக்கு “
” போட்டித் தேர்வுக்கு படிக்கிறேன்னு சொல்லிட்டு, இவங்க பண்ற கூத்து ரொம்ப கொடுமையா இருக்கு “
” ஐயையோ, அதை ஏன் கேக்குறீங்க? அது பெரிய கொடுமைங்க. பத்து வருஷமா இங்க போட்டித் தேர்வுக்கு படிக்கிறேன்னு சொல்லிட்டு வர்ற ஆளுக சிலர் இது வரைக்கும் பாஸ் ஆன மாதிரித் தெரியல. பொழுது போக்குறதுக்கு வேற இடம் இல்லன்னு சொல்லிட்டு இங்க வாராங்க”
” நீங்க சொல்றது கரெக்ட் . ஏ/சி ஃபேன் . இவ்வளவு சவுரியம் கொடுத்து காலையில எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரைக்கும் யாருங்க சும்மா உட்கார வைப்பாங்க. அதான் இங்க வந்து ரொம்ப சந்தோஷமா படுத்து தூங்கிட்டுப் போறாங்க. எனக்கு தெரிஞ்சு இங்க வர்றவங்க படிச்சு முன்னேறதுக்கு வர்ற மாதிரி தெரியல .அப்பா அம்மாவ ஏமாத்திட்டு அவங்களையும் ஏமாத்திக்கிட்டு இங்க வந்து பொழுதக் கழிச்சுட்டு போறது மாதிரி தான் எனக்கு தெரியுது”
என்று இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் அமர்ந்திருந்த தளத்திற்கு சென்றார்கள்.
அங்கே ஒரு ஜோடி ” …. குசு … குசு … ” என்று பேசிக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் இருந்த இரண்டு நபர்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்; இன்னொருவர் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்.
இதை எல்லாம் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வந்தது.
” பாத்திங்களா ? இவங்க எல்லாம் காம்படிஷன் எக்ஸாமுக்கு படிக்க வந்திருக்காங்களாம்? “
என்று குபேரன் சொல்ல
“கொள்” என்று சிரித்தார் ஆலன்.
தூங்கிக் கொண்டிருந்தவன் பட்டென்று எழுந்தான். அவன் முகத்தில் கோபம் இருந்தது
” பாத்தீங்களா அவருடைய தூக்கத்துக்கு நாம கெடுத்திட்டமாம். அவர் கோவத்துல நம்மள பாக்குறாரு “
என்று ஆலன் சொல்ல மேலும் இருவரும் சிரித்தார்கள்.
அறிவாளிகளையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய அந்த நூலகத்தினர் இப்போது, போட்டித் தேர்வுகள் என்ற பெயரில் பொழுதுபோக்கும் நபர்கள் வந்து கொண்டிருப்பதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார்கள் இருவரும்.
பிரச்சனையில் ஆரம்பித்த இவர்களது பிரியம்.இப்போது நெருங்கிய நண்பர்களானார்கள் ஆலனும் குபேரனும்.