கதைகள் சிறுகதை

சிறுகதை … ஆற்காடு சாலை 4 ..!. ….. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

” எங்கே கிருஷ்ணனைக் காணோம் ?

என்று நண்பர்கள் கேட்க,

” கிருஷ்ணனா ? இந்நேரம் அவர் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு இருப்பாரு “

என்றார் , கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவரான மூர்த்தி.

” ஆற்காடு சாலையா ? அங்க எதுக்குப் போறாரு ?”

” எந்த வேலையா இருந்தாலும் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு வந்த பிறகு தான் மத்த வேலைகளைப் பார்ப்பாரு. இது எந்த ஒரு நாளும் தவறுனதே இல்ல”

” அப்படியா? ரொம்ப ஆச்சர்யமா இருக்கே ?”

” ஆமா “

” என்னைக்காவது ஒரு நாள் அவர் இங்க இல்லன்னா என்ன பண்ணுவார் ?”

” சரியா கேட்டிங்க. அப்படி அவர் இல்லாமப் போனா அதுக்குத் தகுந்த ஒரு ஆள நியமிச்சிட்டுத் தான் போவாரு “

” சிறப்புங்க . இப்ப அங்க தான் கிருஷ்ணன் போயிட்டு இருப்பாருன்னு சொல்றீங்க. “

” ஆமா, இந்நேரம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். “

” ம்… சரி… ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே ? “

” ம்…. சொல்லுங்க “

” ஆற்காடு சாலை எங்க இருக்குது? என்று அவர் கேட்க

” சென்னையில எவ்வளவு வருஷமா இருக்கீங்க?”

” சென்னையில நான் ரொம்ப வருஷமா இருக்கேன். ஆற்காடு சாலை எங்கே இருக்குன்னு எனக்கு தெரியலையே?”

“அது சரி தான் .நம்ம வாழ்க்கை எல்லாம் வேற வேற திசையில இருக்கிறதுனால தான் எந்த சாலை எங்க இருக்குன்னு நமக்குத் தெரியாமலே போகுது. ஆற்காடு சாலைங்கிறது சென்னையில இரண்டாவது பெரிய சாலை “

” அப்படியா ? “

” ஆமா… இந்த ஆற்காடு சாலை 1940 ஆம் ஆண்டு, ஆற்காடு நவாப் ஆட்சி செய்யும்போது , ஆற்காட்டையும் சென்னையையும் இணைக்கிறதுக்காகப் போடப்பட்ட சாலை, நுங்கம்பாக்கத்தில இருந்து போரூர் வரைக்கும் இந்தச் சாலை இருக்கு. சென்னையோட மேற்குப் பகுதி வளர்ச்சியடையுறதுக்காகப் போடப்பட்ட சாலை தான் இந்த ஆற்காடு சாலை” என்று மூர்த்தி சொல்ல,

” ஓ ஆற்காடு சாலைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கா ? “

” ஆமா, இங்க இருக்கிற ஒவ்வொரு சாலைக்கும் ஒரு வரலாறு இருக்கு.

இது ஆற்காடு சாலையோட வரலாறு”. “ஒவ்வொரு சாலைக்கும் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?”

” ஆமா …இந்நேரம் கிருஷ்ணன் ஆற்காடு சாலைக்குப் போய் இருப்பாருன்னு நினைக்கிறேன் “

என்று மூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணனின் கார் நுங்கம்பாக்கத்தில் இருந்து வள்ளுவர் கோட்டத்தைத் தொட்டு, ஆற்காடு சாலையைத் தொட்டது.

” ஐயா வண்டி வந்திருச்சா? ” என்று அங்கிருந்தவர்கள் கேட்க

” இப்ப வந்திரும் ” என்று கிருஷ்ணனின் காருக்காகக் காத்துக் கிடந்தார்கள்.

கிருஷ்ணனின் கார் ஆற்காடு சாலையில் வந்த போது, அந்தக் காரை நோக்கி அம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஓடி வந்தார்கள். காரை நிறுத்திய கிருஷ்ணன், ஓட்டுனர் இருக்கையிலிருந்து கீழே இறங்க அவரைச் சுற்றி நின்றார்கள், மக்கள்.

“எல்லாரும் எப்படி இருக்கீங்க?

என்று கிருஷ்ணன் கேட்க

” ஐயா , நீங்க இருக்கும் போது, எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல”

என்று அவர்கள் சொல்ல,

“எல்லாருக்கும் வரிசையா நில்லுங்க. ‘

என்று எல்லோரையும் அவரே ஒழுங்கு படுத்தினார், கிருஷ்ணன்.

” ஐயா சொல்றாரு இல்ல. எல்லாரும் வரிசையில நில்லுங்க”

என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு வரிசையில் நின்றார்கள்.

” சரி , எல்லாரும் வந்தாச்சா?”

” வந்திட்டோம் ஐயா ” என்று அங்கிருந்தவர்கள் சொல்ல

காரில் இருந்த உணவுப் பொட்டலங்கள் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்தார், கிருஷ்ணன். அந்த ஒவ்வொரு பொட்டலத்திலும் உணவு, தண்ணீர் பாட்டில் என்று இருந்தது.

கிருஷ்ணன் கையில் இருந்து உணவுப் பொட்டலத்தை வாங்கிய ஒருவர்

” ஐயா, நீங்க நல்லா இருக்கணும். ஒவ்வொரு நாளும் எங்களுக்காக உணவு கொண்டு வந்து கொடுக்குறீங்க. இதனால எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திருச்சு. எப்படியும் நீங்க வருவீங்க. எங்களுக்கு உணவு தருவீங்கன்னு. உங்க குடும்பமே நல்லா இருக்கணும்” என்று கையெடுத்துக் கும்பிட்டார் ஒருவர்.

” ஒரு மனுசனக் கடவுள் நல்லா வச்சிருக்கிறது, அவன் மத்தவங்களுக்கும் உதவணும் அப்படிங்கிறதுக்காகத் தான். என்கிட்ட நிறைய இருக்கு. நான் மத்தவங்களுக்கு உதவுறேன்” என்று கிருஷ்ணன் சொல்ல

“உங்கள மாதிரி சில பேரு இருக்கிறதால தான் இந்த பூமி கொஞ்சமாவது ஈரமா இருக்கு “

என்று கிருஷ்ணனைப் புகழ்ந்து கொண்டே அந்த உணவுப் பொட்டலங்களை ஒருவர் பின் ஒருவராகவாங்கிச் சென்று கொண்டே இருந்தார்கள்.

அவர் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்கள் தீர்ந்த பிறகும் இன்னும் ஐந்து பெண்கள் மூன்று ஆண்கள் என்று மீதமிருந்தார்கள். போதாக்குறைக்கு இரண்டு பெண்களின் இடுப்பில் குழந்தைகள் வேறு இருந்தார்கள்.

“ஐயோ… உணவு தீர்ந்து போச்சே? “

என்றார், கிருஷ்ணன்.

” ஐயா பரவாயில்லைங்கய்யா .. நாங்க சமாளிச்சுக்குறோம். நீங்க போங்க. நாளைக்கு வாங்கிக்கிறோம் “

என்று அவர்கள் சொல்ல

” இருங்க… நான் போய் வாங்கிட்டு வாரேன்”

” ஐயா உங்களுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம்? வேண்டாம்யா. “

” என் உசுரு இருக்கிற வரைக்கும் உங்களுக்கு இதச் செஞ்சிட்டுத் தான் இருப்பேன். நான் இல்லன்னா கூட யாரையாவது வச்சு உங்களுக்கு இதைச் செய்யச் சொல்வேன். நான் குடுக்கிற உணவச் சாப்பிட்டுத் தான் நீங்க வாழணும் அப்படிங்கிறது இல்ல. என்னால முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு உதவி செய்வேன். கவலை வேண்டாம்” என்று சொல்லித் தன் காரை எடுத்தார், கிருஷ்ணன்.

ஆற்காடு சாலையின் கைகாட்டியின் அருகிலே என். எஸ். கிருஷ்ணர் சாலை என்றும் அங்கு இருந்தது.

” பாத்தீங்களா ? என்னவொரு பொருத்தம்ன்னு.

என் எஸ். கிருஷ்ணன் , எம்.ஜி.ஆருக்கு முன்னாடியே ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல். என்.எஸ். கிருஷ்ணனப் பாத்துத் தான் எம்ஜிஆர் கூட தானம், தர்மம் செய்யக் கத்துக்கிட்டார்ன்னு அவரே சொல்லி இருக்காரு. அப்படிப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன் சாலையில நமக்கு உதவி செய்றவர் பேரு கூட கிருஷ்ணன் தான்? என்ன ஒரு சாலப் பொருத்தம்?” என்று பேசிக் கொண்டார்கள், அந்த யாசகர்கள். தன் காரில் பறந்து கொண்டிருந்தார், கிருஷ்ணன்.

ஆற்காடு சாலை என்ற கை காட்டிக்குக் கீழே என்.எஸ். கிருஷ்ணன் சாலை என்றும் எழுதியிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *