ராஜாத்தி தொண்டியில் ராஜேந்திரனை கல்யாணம் செய்து கொண்டு வந்து இத்துடன் நான்கு வருடங்கள் கரைந்து விட்டன.
இவர்களுக்கு ஒரே ஒரு பையன். அந்த பையன் பெயர் மோகன்; அவன் எப்போதும் அப்பாவிடமே தான் இருப்பான். சாப்பிட மட்டும் அம்மாவிடம் செல்வான்.
சரியான அப்பா பயல் என்றே ராஜாத்தி கூறுவாள்.
அவன் அப்பா ஊருக்கு சென்றால் கூடவே செல்வேன் என அடம் பிடிப்பான். ஆனால் அம்மா வெளியே சென்றால் நீ சென்று வா என்று பாட்டியிடம் ஒட்டிக் கொள்வான். திருவிழா காலங்களில் ஊருக்குச் செல்லும் போது மட்டும் அம்மாவை விட்டு அகல மாட்டான்.
அப்பா அழைத்தால் கூட வரமாட்டேன் என்பான். ஏனெனில் அப்பா பல இடங்களுக்குச் செல்வார். அவருடன் சென்றால் கால் வலிக்கும் என்பான்.
அம்மாவிடம் நைசாக காதில் பேசி அப்பா நான் கேட்கும் பொருட்கள் வாங்கித் தர மாட்டார் என்பான். ஒரு சிரிப்பை மட்டும் உதிர்ப்பாள் அம்மா ராஜாத்தி.
பையன் மோகனை பள்ளியில் சேர்த்ததும் அவன் முரண்டு பிடிக்காமல் சென்றது கண்டு ராஜேந்திரன் வியப்படைந்தார். தாத்தா பாட்டி என்றால் மோகனுக்கு அலாதி பிரியம். அவர்களுடன் அமர்ந்து நிறைய சங்கதிகள் பேசுவான். தாத்தா படித்திருந்ததால் மோகனுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பார். பாட்டி நிறைய கதைகள் சொல்லுவார். ஊரிலிருந்து இன்று வந்த அம்மா வழி தாத்தா பாட்டி மோகனிடம் இனிப்புகள் மற்றும் பொம்மைகள் தந்தார்கள். மோகன் மிகவும் மகிழ்வுடன் நன்றி சொன்னான். தாத்தாவிடம் நீங்கள் அடுத்து நல்ல அறிவு பூர்வமான விளையாட்டு பொருட்கள் வாங்கி வாருங்கள் என்றதும் தாத்தா சரி உன் மாமனிடம் சொல்லி வாங்கி வருகிறேன் என்றார்.
ராஜாத்தி எல்லோரையும் உணவு அருந்த அழைத்தாள். ராஜாத்தி அம்மா ‘‘ஊரிலே இருக்கிற நிலத்தை மேம்படுத்தி விவசாயம் செய்துள்ளோம்’’ என்றார்.
வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் போட்டுள்ளோம். அதில் விளைந்தவைகளைக் கொண்டு வந்துள்ளோம் . இந்தா என்றார்.
ராஜாத்தி புன்னகையுடன் வாங்கிக் கொண்டு மாமரம் எப்படி வளர்ந்தள்ளது என்றாள். நல்ல உயரம் வளர்ந்துள்ளது என்றவுடன் வாழை,தென்னை,கொய்யா எப்படியுள்ளது என்றாள்.
நீ வைத்த சப்போட்டா மரம் நல்ல உயரம் சென்றுள்ளது என்றார் ராஜாத்தியின் அம்மா. அப்போது அங்கு வந்த மோகன் ‘‘ பாட்டி லீவில் வருகிறேன். வந்து பார்க்கிறேன். அப்ப காச்சிருமா ’’ என்றான். உடனே அங்கு சிரிப்பலை தவழ்ந்தது.
ராஜேந்திரனுக்கு அலுவலக நேரம் போக பையன் மோகனுக்காக நேரம் செலவிடுவதிலேயே பொழுது போனது. மோகன் பல விதமான கேள்விகள் எழுப்பி ராஜேந்திரனை திணறடித்தான். மோகனை சாப்பிட வைப்பதே முக்கியமான வேலையாக ராஜேந்திரனுக்கு அமைந்தது.
பள்ளிப் பாடங்கள் படிக்கும் போது மோகன் அப்பாவிடம் அவ்வப்போது நீ எவ்வளவு மார்க் வாங்குவாய் என்பான்.உடனே அவனது தாத்தா நடுத்தர படிப்பு தான் என்று முற்றுப்புள்ளி வைப்பார். .
அன்று ராஜாத்தியின் தோழி கலா வீட்டிற்கு வந்தாள். ராஜாத்தி மற்றும் உள்ளவர்களோடு பேசிவிட்டு தனது வீட்டு சுப நிகழ்வு அழைப்பிதழைத் தந்து விட்டு நமது தோழிகள் நிறையப் பேர் வருகிறார்கள். கட்டாயம் வரணும் என்றாள். அவள் புறப்பட்டுச் சென்றதும் ராஜேந்திரன் கட்டாயம் நீ சென்று வா என்றார். ராஜாத்தி ஏன் நீங்கள் வரவில்லையா என கேட்கவில்லை. மனதிற்குள் சுதந்திரமாக இருக்கலாமென நினைத்தாள். அதுவும் அவள் சொந்த ஊரில் நடப்பதால் இன்னும் செல்ல ஆவலாக இருந்தாள். கல்யாணம் முடிந்து வந்ததிலிருந்து இப்போது தான் தனியாகச் செல்கிறாள். பையனை அழைத்துச் செல்லலாமென நினைத்து அவனை அழைக்கையில் அவன் நான்வரவில்லை, நீ மட்டும் சென்று வா என்றதும் அப்பா குணம் தானே இருக்குமென புலம்பினாள் வெளியில் கேட்காதபடி.
கலா சுப நிகழ்வுக்கு இரண்டு நாள் இருக்கையில் தொடர்பில் வந்தாள். கட்டாயம் வந்து விடு என்றதும் ராஜாத்தி வருகிறேன், பழைய நினைவுகளைப் புதுப்பிக்க என்றாள். ராஜாத்தி சில துணி மணிகளுடன் புறப்பட, ராஜேந்திரன், மோகன் இருவரும் பேருந்து நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார்கள்.
ராஜேந்திரன் கட்டாயம் மூன்றாவது நாள் புறப்பட்டு வந்து விடு என்றார்.
பேருந்தில் ஏறி அமர்ந்ததும் வண்டி புறப்பட ராஜாத்திக்கு தனது ஊருக்குத் தான் போகிறோம் என்றாலும் இவர்களைப் பிரிவதில் ஒரு வித எண்ண ஓட்டம் மனதில் ஓடியது.
பேருந்து நடத்துனர் எங்கே செல்ல வேண்டும் கேட்க ராஜாத்தி ராமேஸ்வரம் என்று கூற ஒரு மாதிரியாக அவளைப் பார்த்த நடத்துனரிடம் ராஜாத்தி பயண சீட்டைக் கொடுங்கள், என்ன ஒரு பார்வை என்று கூற
பயண சீட்டை தந்து நடத்துனர் நகர்ந்தார்.,
ராஜாத்தி என்ன இவன் இப்படிப் பார்க்கிறான் என்று மனதில் நினைத்தாள்.
பேருந்து இராமநாதபுரம் வந்ததும் நடத்துனர் இவள் சீட்டுக் கருகில் வந்து நீங்கள் ராமேஸ்வரம் தானே என்று கேட்டார். ராஜாத்தி அங்கு போகத் தானே பயணச் சீட்டுத் தந்தீர்கள் என்று கூறினாள்.
நடத்துனர் ஏன் கோப்படுகின்றீர்கள் என்று கூறி நகர்ந்தார்.
அந்த பேருந்திலே நன்றாக நேர்த்தியாக எல்லாரையும் கவரும் வண்ணம் ராஜாத்தி அலங்காரம் செய்திருந்தாள். அடிக்கடி பயணிகள் கண்கள் அவள் பக்கமே சென்றது. இதையெல்லாம் அறிந்தும் அறியாதவளாய் ராஜாத்தி பயணித்தாள்.
மண்டபத்திருந்து வண்டி நகர்ந்ததும் ஒரு பாட்டி நடத்துனரிடம் கொஞ்சம் நான் சொல்லும் இடத்தில் இறக்கி விடுங்கள் என்றதும் நடத்துனர் அங்கெல்லாம் நிற்காது என்றார். நடத்துனர் கொஞ்சம் தள்ளி இறக்கி விடுகிறேன் என்றார்.
சரிப்பா என்றார் பாட்டி. வண்டி பாம்பனைக் கடந்ததும் நடத்துனர் ராஜாத்தியிடம் வந்து நீங்கள் எங்கு இறங்க வேண்டுமோ சொல்லுங்கள் அங்கு இறக்கி விடுகிறேன் என்றார். ராஜாத்தி பதில் ஏதும் கூறாமல் இருந்தாள்.
சில மணித்துணிகளில் நடத்துனர் வந்து தங்கச்சி எந்த இடம் என்று கேட்க,
ராஜாத்தி ,‘‘நிறுத்துங்கள் வரும் நிறுத்தமான தங்கச்சி மடம் தான். இறங்கப் போகிறேன் ’’என்றாள்.
நிறுத்தம் வந்ததும் ராஜாத்தி நடத்துனரைப் பார்த்து அந்தப் பாட்டி கேட்ட நிறுத்தத்தில் இறக்கி விடாமல்,கொஞ்சம்அலங்காரம் பண்ணி வந்தால் அவள் கேட்கும் நிறுத்தத்தில் பேருந்து நிற்கிறது.
சரியான ஜொல்லுப் பார்ட்டி என்று நடத்துனர் காது படக் கூறி விட்டு அக்காவை கேட்டதாகச் சொல்லு என்று கூறிவிட்டு இறங்கினாள்.
அப்போது ஓட்டுனர் நடத்துனரை இது உனக்கு தேவையா, எப்படி நெற்றியில் அடித்து விட்டுப் போகிறாள் என்றார். அம்மாடி படு விவரமான பார்ட்டி எனக் கூறிய
நடத்துனர், ஓட்டுனரிடம் இவளைத் தான் எனக்கு முதலில் பார்த்தார்கள். ஆனால் ராஜேந்திரன் தட்டிப் பறித்துக் கொண்டான் என்று சிரிப்புடன் கூறினான்.
ஓட்டுனர் மாற்றான் தோட்டத்து மல்லிகை அது என்றார். இவள் திரும்பிச் செல்லும் போது நம் வண்டியில் வருவாளா என்று நினைத்த நடத்துனர் தனது சீட்டில் அமர்ந்த பிறகு மனைவி ஏதோ வாங்கச் சொன்னாளே மறந்து போச்சே என்று நினைத்தார்.
கடைசி நிறுத்தம் வர எல்லோரும் இறங்குங்கள் என்று கூறினார்.
எல்லோரும் இறங்கினார்கள்.
நடத்துனர் ஏதோ தேடினார்.
ஓட்டுனர் ஒரு பையுடன் வந்தார்.
‘‘என்ன தேடுறே. உனக்கு முதல்ல பாத்த பொண்ணைப் பாத்த மயக்கத்திலே உன் வீடு, மனைவி வாங்கச்சொன்ன
பொருள் ,வச்ச இடம், எல்லாம் மறந்து போச்சா என்று கேட்டுக்கொண்டே வந்த ஓட்டுனர் ,‘‘இந்தா நீ வாங்கி வச்ச சாமான் மறக்காமல் கொண்டு போய் உன் மனைவியிடம் கொடு ’’ என்றார்.
போன உயிர் திரும்பி வந்தது நடத்துனருக்கு,
நடத்துனர் வெட்கத்துடன் சிரித்தார்; ஓட்டுனர் நக்கலுடன் சிரித்தார்.