முத்து ஆண்டாள் அலங்காரத்தில் காட்சி
திருச்சி, டிச. 26–
திருச்சி சிறீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 4 ஆம் நாளான இன்று அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. பகல்பத்து விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ரத்தின நீள்முடி மகுடம், ரத்தின அடைக்கல முத்திரை, நிலையங்கி, அடுக்குப் பதக்கம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்டுகளித்தனர்.
2 வது நாளான சனிக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து சர்வ அலங்காரத்துடன் சிறீ நம்பெருமாள் எழுந்தருளினார். மூன்றாவது நாளான நேற்று அர்ச்சுன மண்டபத்தில் சாய்வு சவுரி கொண்டை, ரத்தின அடைக்கல முத்திரை, ரத்தினகிளி, பவள மாலை, முத்துச்சரம் பஞ்சாயுத மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சிறீ நம்பெருமாள் காட்சியளித்தார்.
4 ஆம் நாள் காட்சி
பகல் பத்து 4 ஆம் நாளான இன்று அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், மகரி, சந்திர ஹாரம், வைர 3 அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வைர அடைக்கல முத்திரையுடன், செந்தூர வண்ண பட்டாடை, தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சிறீ நம்பெருமாள்.
இன்று மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய சிறீ நம்பெருமாள். பகல் பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறார். அதனைத் தொடர்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நடைபெறவுள்ளது.