சென்னை, ஜன.30-
சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்களுடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் இணைந்து, வில்லா – அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறது. இதற்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது.
ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக ஜி ஸ்கொயர் நிறுவனம் திகழ்கிறது. இந்தநிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைகிறது. அதற்காக ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருக்கிறது.
இந்த முதலீட்டை கொண்டு ஜி ஸ்கொயர் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள சிறிய அளவிலான பில்டர்களுடன் கூட்டு சேர விரும்புகிறது. இதன் மூலம் சிறிய கட்டுமான நிறுவனங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனம் நிலத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான வில்லா மற்றும் அடுக்குமாடி வீடுகளை கட்டி கொள்ள வாய்ப்பு தருகிறது.
அந்த வகையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பிரிவை, நிறுவனத்தின் தேசிய விற்பனை தலைவர் சிவகுமார் பெத்தையன், தலைமை இயக்க அதிகாரி ஜூனைத்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது குறித்து ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் பாலா ராமஜெயம் கூறியதாவது:-
வளர்ச்சிப் பாதையின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் இந்தத் தருணம் எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் பெருமையான தருணம் ஆகும். வீட்டு மனை விற்பனை சந்தையில் எங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கட்டுமானத் துறையில் நுழைந்துள்ளோம்.
வாடிக்கையாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பு, வில்லா அல்லது மனைகளை வாங்க விரும்பினால், ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்களின் கனவு இல்லத்தை அவர்கள் விரும்பிய வடிவத்தில் வழங்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல், சிறு நகரங்களிலும் உள்ள மக்கள் தங்கள் கனவு இல்லங்களை எந்தவித தடையும் இல்லாமல் கட்டுவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். கட்டுமான திட்டத்திற்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.