சிறுகதை

சிறப்பு விருந்து- பா.சக்திவேல்

அவசரமாகச் சீறிப் பாய்ந்த வாகனங்களை சிறப்பு போக்குவரத்து காவல் துறை ஆணையர் சமிக்கை மூலம் தடுத்து நிறுத்தினார்.

அலைபோல் திரண்ட வாகனங்கள் அவரின் சிக்னலுக்காக சிலை போல் நின்றன.

முக்கிய சாலையின் ஒவ்வொரு பிரிவுச் சாலையிலும் சந்திப்பிலும் கால் கடுக்கக் காத்து காய்ந்து நின்றனர் காவலர்கள்.

பனிக்குள் ஒளிக்கீற்று புகுந்தது போல பல பெரிய மனிதர்களின் மகிழ்வுந்துகள், மெய்காப்பாளர்களின் வாகனங்கள் புடை சூழ அணிவகுத்து வரிசையாய்ப் பறந்து வந்தது.

சிக்னலில் நின்ற ஒருவர் கேட்டார், “என்ன விசேசம், அவர்கள் எங்கே போறார்கள்?” என்று….

அருகிலிருந்தவர் இங்கிருந்து சரியா 10 கி.மீ தொலைவில் உள்ள நல்லமங்கலத்துக்கு நல உதவிகள் வழங்க பெரியவர் குழுவே போகுது ….

இதுல சிறப்பு என்னென்னா இந்த விழாவில் கலந்துக்குற அத்தனை பேருக்கும் சிறப்பு விருந்து கொடுக்க ஊர் மக்கள் முடிவு செஞ்சிருக்காங்களாம்….

இது என்னண்ணே புதுசா இருக்கு… வாங்கத்தான நம்ம ஊர் மக்கள் ஒன்று கூடுவாங்க, முதன் முதலா கொடுக்கவும் போறாங்கன்னு சொல்றீங்களே!

நல்லமங்கலத்து மக்கள் இவ்வளவு நல்ல வெள்ளை உள்ளம் படைச்சவங்களா இருக்காங்களே !

சாரை சாரையாய் வாகனங்கள் நல்ல மங்கலம் ஊரில் நுழைந்து. புதிதாய் செப்பணிடப்பட்டு சிங்காரிக்கப்பட்ட சாலையின் வழியாக விழாப்பந்தல் அருகே வந்து நின்றன.

உள்ளூர் உருமி மேளம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டமென களை கட்டியது.

காவலுக்கு நின்ற ஆயிரக்கணக்கான காவலர்கள், மக்கள் பணியாளர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு அந்தத் தொகுதி அலுவலர்களின் பங்களிப்பில் பல லட்சம் மதிப்பில் உணவு தயார் நிலையில் இருந்தது.

விழா மேடையில் தோன்றியவர்களில் ஒருவர் அருகே நின்ற மாவட்ட தலைவரை ஒரு பார்வை பார்த்தார், அந்தப் பார்வை மாவட்ட அதிகாரி வழியே பலரைச் சென்றடைந்தது.

விழா துவங்கியதும் எழுதி கொண்டு வந்திருந்த துண்டு சீட்டைப் பார்த்து தலா 10 நிமிடம் ஒவ்வொருவரும் பேசினர். பல லட்சக்கணக்கான நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

நன்றி தெரிவிக்கும் விதமாக ஊர்த்தலைவர் பேசினார். அனைவரும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

கொலைப் பசியில் பிரியாணியை மனதில் நினைத்துக் கொண்டு உணவு பரிமாறும் கூட்டத்திற்கு எல்லோரும் சென்றனர்.

அவர்கள் வரிசையாய் அமர்ந்தனர்.

கூட்டு, பொறியல், காய்கறிகள் பறிமாறப்பட்டது.

அடுத்ததாக அன்னமிட்ட கையை தடுத்து நிறுத்தி தர்க்கத்தில் ஈடுபட்டார் பிரமுகர் ஒருவர்.

இந்தச் சோத்தை மனுசன் தின்பானா? எனக் கூறிக் கூச்சலிட்டார் இன்னொருவர்.

“வரச் சொல்லுய்யா அவனை!” என ஏகவசனத்தில் தாண்டவம் ஆடினார் மற்றொருவர்.

வெலவெலத்துப் போன ஊர் மக்கள், தலைவரோடு ஒரு பக்கமாகக் கூடி நின்றனர்.

மன்னிக்க வேண்டும் விருந்தினர்களே! ரேசனில் வழங்கிய பொருள்களைக் கொண்டு அரசின் பிரதிநிதிகளுக்கு உணவு தயாரித்து விருந்து படைத்த தவறுக்கு வருந்துகிறோம்.

மனுசன் தின்பானா என்று நீங்க உதறியடித்த இந்தச் சோத்தைத்தான் எங்க ஊரு சனம் தின்னு உயிர ஓட்டிக்கிட்டுருக்கு…

நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கிய துவரம் பருப்பை சாம்பாரில் கலந்ததற்கு துச்சமென ஒருவர் தூக்கி வீசினார். இது போன்ற உணவுகளை உங்களது குழந்தைகள் சாப்பிடுவாங்களா என உணர்ந்து பாருங்கள்…

எவ்வளவு காலம் தான் நீங்கள் வழங்கும் இலவசப் பொருள்களை ஓடி வந்து வாங்கும் அடிமட்ட மக்களாகவே எங்களை வைத்திருப்பீர்கள்? எங்கள் வாழ்வதாரத்தை உயர்த்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றாவது யோசித்தீர்களா?

குத்திக் காட்ட வேண்டும் என்று நாங்கள் இப்படிச் செய்யவில்லை…. உரிமையில்தான் பேசுகிறோம்.

ஓட்டு வாங்க ஓயாமல் ஓடி வரும் நீங்கள் வெற்றி பெற்றவுடன் எங்களை ஓரங்கட்டி விடுகின்றீர்.

எங்கள் ஊருக்கு வந்தவங்களை பட்டினியோடு அனுப்பிய பாவம் எங்களுக்கு வந்து சேர வேண்டாம்…

உங்களுக்கு பிடித்த மட்டன் பிரியாணி, சிக்கன் சிக்ச்ட்டி ஃபைவ், மீன் வறுவல் தயாரா ஏற்பாடு ஆகி இருக்குது…

எல்லாரும் சாப்பிடுங்கள் என மூச்சு விடாம பேசி முடித்தார் ஊர் தலைவர்.

உங்கள் உணர்வு புரிகிறது; உரிமைகளை உடனே வழங்குவோம் என்றார் பெரியவர்.

கணிசமான ஓட்டு உள்ள ஊராச்சே என விருந்தினர்கள் யாவரும் கோபிச்சுக்காம சாப்பிடப் போனாங்க….

சாப்பிட்ட போது தண்ணீர் தண்ணீர் என்று ஒருவர் அலறினார்,

பக்கத்தில் நின்ற உள்ளூர்க்காரர் மீன் முள் குத்தி விட்டதாம்…என்று சொல்லிக்கொண்டே தண்ணீருடன் ஓடினார்.

அனைவரும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *