சிறுகதை

சிறப்பு தண்டனை – ராஜா செல்லமுத்து

கோபால் ஒரு நிறுவனத்தின் முதலாளி. அவருக்கு தமிழ்நாட்டில் நிறைய கிளைகள் இருக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம் என்பதால் எப்போதும் அலுவலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் .

கோபால் பணம் படைத்தவராக இருந்தாலும் அவருக்குள் இருக்கும் குணம் மற்றவர்களை முகம் சுளிக்க வைத்தது.

நிறுவனத்தில் யாராவது தவறு செய்தால் தவறு செய்பவர்களை அத்தனை பேர் முன்னாலும் பேசி அவமானப்படுத்துவது அவரின் குணமாக இருந்தது.

யாராவது அவரைத் தேடி வந்தால் வேண்டுமென்றே பணி புரியும் ஆட்களை தன் இருப்பிடத்திற்கு அழைத்து அத்தனை பேர் முன்னால் அவர்களைப் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் காேபால்.

அது ஒன்றுக்காகவே நிறைய பேர் தவறு செய்வதை தவிர்த்து வந்தார்கள் .

கோபாலைப் பார்ப்பதற்கு 10, 15 பேர் அவரின் அறைக்குள் வந்து இருந்தார்கள்.

இன்று யாரைக் கூப்பிட்டுத் திட்டப் போகிறாராே என்று பயந்து கொண்டு இருந்தார்கள் ஊழியர்கள்.

அன்றும் அவரைப் பார்க்க வந்த ஆட்கள் முன்னால் யாரைக் கூப்பிட்டு திட்ட போகிறாரோ? என்று அத்தனை பேருக்கும் பயம்.

அப்போது பசரை அழுத்தினார் காேபால். கிர் என்று சத்தம் கேட்டதும் அந்தச் சத்தத்தை கேட்டு ஓடிப்போய் கதவைத் திறந்தான் அலுவலக உதவியாளர்,

சார் என்றான் பவ்வியமாக

கனகலிங்கத்த வர சொல்லு என்றார் காேபால் கணீர் குரலில்.

அய்யய்யோ இன்னிக்கி கனகலிங்கம் மாட்டுனாரா? என்ன செய்யப் போறாரோ? கனகலிங்கம் என்று நினைத்தபடி ஓடினான் உதவியாளர்.

தன் வேலையில் மூழ்கி இருந்த கனக லிங்கத்தைபார்த்து

சார் என்றான்

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தார் கனகலிங்கம்

உங்கள முதலாளி கூப்பிடுறார் என்று உதவியாளர் சொன்னபோது

கனக லிங்கத்திற்கு ஒரு மாதிரியானது. என்ன எதுக்கு கூப்பிடுறார். அதான் வேலை பாத்துட்டு இருக்கேன்ல என்று நினைத்த கனகலிங்கம்

அவர் கூட யாராவது இருக்காங்களா?

என்று உதவியாளரிடம் கேட்டார்.

ஆமா சார் நிறைய பேரு வந்திருக்காங்க

என்று உதவியாளர் சொன்னார்.

இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு .யாரையாவது கூப்பிட்டு உட்கார வச்சு அவங்க முன்னாடி வேலை செய்கிற ஆளுகள அசிங்கப்படுத்துறது. இன்னைக்கும் அதை செய்யப் போறாரோ என்னவோ ?

தனக்குள் பேசிய கனகலிங்கம் என்ன நடக்குதுன்னு பாப்போம். அப்படியே ஏதும் தப்பா பேசினா போயா நீயாச்சு உன் வேலையாச்சுனு சொல்லிட்டு எடத்தை காலி பண்ண வேண்டியது தான் என்ற முடிவோடு உள்ளே நுழைந்தார் கனகலிங்கம்

முதலாளி அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த கனகலிங்கத்தை

வாங்க கனகலிங்கம் என்று கோபால் வரவேற்று கூப்பிடுவதே கனகலிங்கத்திற்கு ஒரு மாதிரியா இருந்தது.

அவரைச் சுற்றி அமர்ந்து இருந்தவர்கள் எல்லாம் கனகலிங்கத்தை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். .அவர்களை கனகலிங்கமும் நோட்டமிட்டார்.

எப்படியும் நம்மள கேவலமா இத்தனை பேர் முன்னாடி பேச போறார் ; என்ன பண்றாருன்னு பாக்கலாம்

என்று பொறுமையை கையில் பிடித்து நின்றிருந்தார் கனகலிங்கம்.

நான் சொன்னேல்ல இவர்தான் கனகலிங்கம். இந்த நிறுவனத்துக்கு முதுகெலும்பு மாதிரி. நான் ஒன்னு சொன்னா அத பத்தா செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர் . . இந்த மாதிரி வேலை செய்ற மனுசன்க இருக்கிறதுனால தான் நம்மள மாதிரி முதலாளிகள் வாழ முடியுது. உங்களையெல்லாம் நான் ஏன் வரச் சொன்னேன்னா அத்தனை பேருக்கு முன்னாடியும் அவருக்கு நான் ஒரு பரிசு கொடுக்கப் போறேன் என்று கூறி வந்திருந்தவர்களை கனகலிங்கத்திற்கு பரிசளிக்க கூப்பிட்டார் கோபால் .

அதுவரையில் அத்தனை பேர் முன்னால் அவமானப்படுத்திவிடுவாரோ என்று கோபாலைத் தவறாக நினைத்துக் கொண்டிருந்த கனக லிங்கத்துக்கு என்னவோ பாேலானது.

வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

பணி செய்து கொண்ட அத்தனை பேரையும் பார்த்து பேசினார் காேபால்

எல்லாருக்கும் வணக்கம். நான் உங்களை எல்லார் முன்னாடியும் திட்டுவேன் ; ஏதாவது பேசுவேன்; அப்படின்னு நீங்க என்ன தப்பா நினைச்சுட்டு இருப்பீங்க. அது தப்பு. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் 10 பேர் முன்னாடி ஒரு விசயத்தை சொல்லும் போது அது உங்களுக்கு ஒரு உத்வேகத்த ஏற்படுத்தும் . தப்பு செய்யக் கூடாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். அதனாலதான் உங்ககிட்ட அப்படி நடந்து இருப்பேன்.

மத்தபடி உங்கள அவமானப்படுத்தணும் அசிங்கப்படுத்தனும் அப்பிடிங்கிறது என் நோக்கமில்ல.

இப்பப் பாருங்க இந்த நிறுவனத்தில கனகலிங்கம் எப்படி வேலை செய்வார்ன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். இங்க வந்திருக்கிற சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் தொழிலதிபர்கள். அவங்க முன்னாடி ககைலிங்கத்தை வாழ்த்துறதுல நான் பெருமைப்படுறேன் என்று கோபால் சொன்னபோது நிறுவனத்தில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

சிறப்பு விருந்தினர்கள் கனகலிங்கத்திற்கு பரிசு கொடுத்தார்கள்.

அதுவரையில் கோபால் ஒரு சுயநலவாதி. நாகரிகம் அறியாதவர் என்று நினைத்துக் கொண்டிருந்த ஊழியர்கள் மனதில் கோபாலைப் பற்றி உயர்ந்த எண்ணம் மேலாேங்கியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *