டிரினிடாட், ஆக. 2–
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை குவித்தது. இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதமடித்தனர். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:
இது ஒரு சிறப்பான வெற்றி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கேப்டனாக இதுபோன்ற விளையாட்டுகளை நான் எதிர்நோக்குகிறேன். நாங்கள் தோற்றால் நிறைய ஏமாற்றம் இருக்கும். வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தினார்கள்.
அழுத்தமான சூழ்நிலைகளில் அதை எதிர்கொள்வது முக்கியம். விராட் கோலி மற்றும் ரோகித் அணியின் ஒருங்கிணைந்த அங்கம். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.
ஆட்டத்திற்கு முன் விராட் கோலியுடன் பேசினேன். 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவது குறித்து அவரது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்கு உண்மையிலேயே நன்றி. 350 ரன்கள் எடுப்பது எப்போதும் முக்கியமானது. வெஸ்ட் இண்டீஸ் மிகவும் தாமதமாக சரிவில் இருந்து மீள முயன்றது. அந்த பார்ட்னர்ஷிப் அவர்களை 36-வது ஓவர் வரை கொண்டு சென்றது. பவர் பிளேயிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. அடுத்த முறை வெஸ்ட் இண்டீசுக்கு வரும்போது இது சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.