சென்னை, அக். 28
சிருங்கேரி சங்கராசாரியர் விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம் செய்தார்.
சிருங்கேரி சங்கராசாரியார் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயில் அருகில் அவருக்கு பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், காஞ்சிபுரம் சாலை தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடத்தின் கிளைக்கு வருகைபுரிந்தார். நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில், அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. காமாட்சி அம்மனை தரிசித்த பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் சுக்ரவார மண்டபத்தில் ஸ்தானீகர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார். சென்னை நவசுஜா வைத்திய சுப்பிரமணியம், தங்கமுலாம் பூசப்பட்ட காமாட்சி அம்மன் உருவப் படத்தை சிருங்கேரி சங்கராசாரியரிடம் சமா்ப்பித்தார்.
பின்னர், உலகளந்த பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். இதையடுத்து, சிருங்கேரி சாரதா மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதையடுத்து, அங்கு சந்திரமெளலீஸ்வரர் பூஜையை நடத்தினார்.
இன்று சிருங்கேரி மடத்தில் 34வது ஆச்சார்ய ஸ்வாமிகளான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகா சுவாமிகளின் ஜெயந்தி பூஜையையொட்டி காஞ்சிபுரத்தில் முகாமிட்டுள்ள விதுசேகர பாரதி சுவாமிகள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சாரதா பீடத்தின் கிளையில் விஜய யாத்திரை குழு தலைவர் ஜெ.எஸ்.பத்மநாபன் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்ததனர்