டமாஸ்கஸ், டிச. 13–
சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில் இதுவரை 2 லட்சம் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு, அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ, ஹோம்ஸ், ஹமா, டமாஸ்கஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இதையடுத்து அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
2 லட்சம் பேர் மாயம்
இந்நிலையில் சிரியா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் விமானப்படை சிரியா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. லதாகியா மற்றும் டார்டஸ் துறைமுகங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலிய தரைப்படைகள் சிரியாவுக்குள் நுழைந்து ஆக்கிரமிப்புகளை விரிவுப்படுத்தி வருகிறது.
இதனிடையே துருக்கிய ஆதரவுப் படைகளுக்கும் குர்திஷ் படைகளுக்கும் இடையிலான சண்டையில் 1,00,000 க்கும் அதிகமான மக்கள் வடகிழக்கு சிரியாவில் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2,00,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.