செய்திகள்

சிரியாவில் அரசுக்கு எதிரான ஆயுதக்குழு அலெப்போ நகரத்தை கைப்பற்றியது

Makkal Kural Official

தமஸ்கஸ், டிச. 03–

சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் அந்நாட்டின் 2 வது பெரிய நகரமான அலெப்போவை ஆயுதக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாகவே இருந்த மன்னராட்சி, சர்வாதிகாரம், ஒரு நபர் ஆட்சி அல்லது ஒற்றைக் கட்சியின் ஆட்சி என ஆட்சிமுறை நடைபெற்று வந்தது. இதற்கு எதிராக துனிசியாவில் தொடங்கிய மக்கள் புரட்சி வெற்றிபெற்று மக்களாட்சி முறைக்கு வழிவகுத்தது. இதனை வரலாற்றாய்வாளர்கள் ‘மல்லிகைப் புரட்சி’ என எழுதினர்.

துனிசியாவில் பற்றி எரிந்த போராத்தின் கணல் அருகருகே வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி மக்கள் புரட்சிக்கு வித்திட்டன. வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள், கட்டுப்பாடுகள், காவல்துறை-ராணுவத்தின் அடக்குமுறைகள் என நெடுங்காலமாக புகைந்து கொண்டிருந்த மக்களின் மனநிலை போராட்டமாக உருமாறி பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ, சிரியா, லிபியா பரவி பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இந்த ஒட்டுமொத்தப் புரட்சியை `அரபு வசந்தம்’ என அழைத்தனர்.

இந்தக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக, சிரியாவிலும் அல்-அஸாத் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டத்தை துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறைகள் மூலம் அல்-அஸாத் அரசு அடக்கியது. அதையடுத்து, அந்தப் போராட்டம் உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அல்-அஸாதின் அரசை அகற்றுவதற்காக, பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் நிதியுதவி அளித்தன.

நகரத்தை கைப்பற்றிய ஆயுதக்குழு

அதே நேரம், அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டது. தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷியா உதவியது. இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா, ஹசாகாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் கிளா்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தச் சூழலில், அலெப்போ மாகாணத்தில் கடந்த வாரம் கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினர். இந்த அதிரடி தாக்குதலை எதிா்பார்க்காத ராணுவம் பின்வாங்கியது. தொடா்ந்து உறுதியாக முன்னேறி வந்த கிளர்ச்சிப் படையினர், அலெப்போ நகரைக் கைப்பற்றினர்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் ரஷிய வான்வழித் தாக்குதலின் உதவியுடன் அரசுப் படையினரால் மீட்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிளர்ச்சியாளா்களிடம் வீழ்ந்துள்ளது. இது தவிர, கிளர்ச்சிப் படையினர் மேலும் தாக்குதல் நடத்தி தலைநகர் டமாஸ்கஸை நோக்கி முன்னேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *