சிறுகதை

சிரிக்கும் வாழ்க்கை |ராஜா செல்லமுத்து

பெரிய பொழுதுபோக்கு வளாகத்தில் காமராசு சிரிக்காமல் இருக்க வேண்டும். வரும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு சிரிப்பு காட்டினாலும் எவ்வளவு தொந்தரவு செய்தாலும் காமராசு வை சிரிக்க வைக்க எவ்வளவு பிரச்சினைகள் கொடுத்தாலும் சிரிக்கவே கூடாது என்பதுதான் காமராஜுக்கு இட்ட கட்டளை. வேலை.

ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வந்து அந்த பிரதான உடையை அணிந்துகொண்டு ஒரு சிப்பாயை போல் நின்று கொண்டிருக்கும் ஒரு சிலையைப் போல் நின்று கொண்டிருக்கும் காமராசுவை அந்த பிரதான வளாகத்திற்குள் வரும் அத்தனை பேரும் சிரிப்பு காட்டுவார்கள். ஆனால் காமராசு கொஞ்சம்கூட சிரித்தது இல்லை சிரிக்க கூடாது என்பதுதான் கட்டளை.

அதற்குத்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அவரை சிரிக்க வைத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று கூட அறிவித்திருந்தார்கள்.

பத்தாயிரம் ரூபாய் பரிசு போகிறதோ? இல்லையோ? சிரித்தால் தன் வேலை போய்விடும் என்பதுதான் காமராஜரின் நிலை.

அதனால் காமராசர் சிரிக்கவே மாட்டார். எவ்வளவோ சிரிப்புகள் கட்டுப்பாடற்று கடல் அலைகள் போல உள்ளத்தில் பொங்கி வந்தாலும் அதை உதட்டுக்குள்ளே ஒளித்து வைத்துக் கொள்வார் காமராசு. ஏனென்றால் சிரித்தால் வேலை போய்விடும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் அவர் தொண்டை வரைக்கும் வரும் சிரிப்பை பற்களில் போட்டு மென்று அதை துப்பி விடுவார்.

சிரிக்கவே மாட்டார் எத்தனையோ மனிதர்கள் எவ்வளவோ சிரிப்பு காட்டியும் சிரிப்பதற்கான சீன்களை சொல்லியும் சைகை காட்டியும் அவர் சிரிப்பதே இல்லை. அவர் அந்த வேலையில் இருக்கும்போது மட்டும்தான் சிரிக்காமல் இருப்பாரே தவிர வீட்டிற்கு வந்தாலோ அல்லது அவர் வசிக்கும் தெருவில் இருந்தாலும் அவர் இருக்குமிடம் ரொம்பவே கலகலப்பாக இருக்கும்.

காமராசு இந்த ஒரு ஜோக் சொல்லேன் என்று ஒருவர் ஒரு காமெடி சொல்ல விழுந்து விழுந்து சிரிப்பார்கள்… காலையில் 8 மணிக்கு ஏற்கும் வேலை இரவு 10 மணி வரை தொடரும்.

அவர் முகத்தில் கோபமும் மௌனமும் தான் முகாமிட்டு இருக்குமே தவிர சிரிப்பு வருவதே இல்லை… உதடு பிரிவதில்லை அந்த அடிப்படையில்தான் காமராசர் நின்று கொண்டிருப்பார்…

வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுடன் விளையாடுவது, மனைவி மக்களுடன் பேசுவது என்று இத்தனை சிரிப்பு சிரிக்கும் காமராசர் வேலைக்காக மட்டுமே சிரிப்புக்கு கட்டுப்பட்டு இருந்தார்.

அன்று ஒரு கூட்டம் அந்த வளாகத்திற்குள் வந்து காமராசரை கிச்சு கிச்சு மூட்டுவது போல் சிரிப்பு காட்டியது. ஆனால் அவர் கொஞ்சம் கூட சிரிக்காமல் மௌனமாகவே இருந்தார்…

அந்த கூட்டம் செய்யும் செயல் அவருக்கு பிடித்து இருந்தாலும் சிரிக்கக் கூடாது என்ற கட்டளையில் அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தார். காரணம் அதில் வரும் வருமானத்தில்தான் அவர் வாழ்க்கையை நடந்தது. அதில் வரும் வருமானம்தான் கடன்களை அடைத்தது. அதில் வரும் வருமானம் தான் தன் சுயத்தை காப்பாற்றுகிறது என்பது காமராசருக்கு தெரியும். அந்த மாதத்தின் கடைசி இன்னும் சம்பளத்திற்கு இரண்டு நாட்களே இருந்தன….. காமராசர் நின்று கொண்டிருந்தார்….. ஒரு கூட்டம் அவரை சிரிப்பு காட்டியது…. அதை மறந்து, அவருடைய வாழ்க்கை பின்னோக்கிப் போனது.

காமராசு பணத்தை வாங்கிவிட்டு இப்பத்தாரேன் பிறகு தாரேன் சொல்லி பணத்தை கொடுக்காமல் இருக்கீங்க. தப்பு காமராசு. வட்டிக்கு மேல் வட்டி ஏறி, ரொம்ப காசாகி போச்சு.பணத்தைப் பார்த்து கொடுக்க பாருங்க ,இல்லன்னா இன்னும் வட்டி ஏறி நீங்க ரொம்ப கஷ்டப்படுவீங்க என்று வட்டிக்கு பணம் கொடுத்தவன் சொன்னது தான் காமராசு ஞாபகம் வந்ததே ஒழிய சிரிப்பு ஞாபகத்திற்கு வரவில்லை.

இந்த மாதிரியான கசப்பான நிகழ்வுகளை, அவர் நெஞ்சில் சுமந்து கொண்டு எவ்வளவு பெரிய சிரிப்பு வந்தாலும் அவரால் சிரிக்கவே முடியாது.

அவர் அப்படித்தான் அந்த வளாகத்தில் நின்று கொண்டிருக்கும்போது சிரிப்பிற்கு பதிலாக தன் வாழ்க்கை வறுமை பிரச்சனை இதுவரை இவைகளை நினைத்துக்கொண்டே நின்று கொண்டிருப்பார்.

அதனால் சிரிப்பு அவரை விட்டு தள்ளியே நிற்கும்.

காமராசு தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களை நினைத்து நினைத்து சிரிப்பை மறந்து போயிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் காலையிலிருந்து மாலை வரை சிரிக்காமல் இருக்கும் அந்தச் சிரிப்பே தொடர்ந்தது. ஆனால் அந்த சிரிப்புக்குப் பின்னால் அதில் வரும் சம்பளமும் அதில் வரும் வருமானமும் தான் அவர் குடும்பத்தை காப்பாற்றியது என்பதை நினைத்துத்தான் அவர் சிரிக்காமல் இருந்தார். ஆனால் இயல்பில் அவர் ரொம்ப நகைச்சுவை மிகுந்தவர். நகைச்சுவை பேசுபவர் நகைச்சுவைகார் தான் என்று அவர்களை சொல்வார்கள்.

ஆனால் அவருக்கு இட்ட கட்டளை கிடைத்த வேலையும் சிரிக்காமல் இருப்பதுதான்.

இந்த மனிதர்கள் தன் வாழ்க்கையை தன் குடும்பத்தை பார்த்து சிரித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் சிரிக்காமல் வழி செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச் சோகம் எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்று காமராஜருக்குத் தெரியாது. அவரின் கடனும் அவரின் வாழ்க்கையும் அவர் வயிறு பசிக்கும் வரை அவருக்கு வேற அலுவல் கிடைக்கும் வரை இந்த சிரிக்காமல் இருக்கும் வேலைதான் அவருக்கு இப்போது நிரந்தரம்.

அவ்வளவையும் தன் மனதில் இருத்திக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார் காமராசு.

அவரைப் பார்த்து ஒரு கூட்டம் சிரித்துக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *