செய்திகள்

சிம்’ இல்லா செல்போனை கொடுத்து விட்டு கோயிலில் 80 வயது தாயை தவிக்கவிட்டுச் சென்ற மகன்

பெங்களூரு, ஆக. 5–

கர்நாடகாவில் கோவிலுக்கு அழைத்துச்செல்வதுபோல் ஏமாற்றி அழைத்துச்சென்று, ‘சிம் கார்டு’ இல்லாத போனை கொடுத்துவிட்டு 80 வயது தாயை தவிக்கவிட்டுச் சென்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்திலுள்ள கோப்பல் மாவட்டத்தின் ஹூலிஜி கிராமத்திலுள்ள, பிரபலமான ஹூலிஜெம்மா கோவிலுக்கு 80 வயது தாயை அழைத்துச் சென்றுள்ளார் மகன். தான் சிறுது நேரத்தில் வந்துவிடுவதாக உறுதியளித்துவிட்டு தாயிடம் ஒரு செல்போனையும் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தனது செல்போன் எண்ணை எழுதியிருப்பதாகக் கூறி ஒரு பேப்பரையும் கொடுத்து கோவிலில் உட்கார வைத்துச் சென்றிருக்கிறார்.

ஏமாற்றிய மகன்

வெகுநேரமாகியும் தனது மகன் திரும்பி வராததால் பயந்துபோன தாய், கோவிலில் ஒரு மூலையில் சென்று அமர்ந்துவிட்டார். அவரை கவனித்த பக்தர்கள் அவரிடம் விசாரித்ததில் நடந்த சம்பவத்தைக் கூறி செல்போனை கொடுத்திருக்கிறார். அதனைப் ஆய்ந்தபோது செல்போனில் சிம்கார்டு போடவில்லை என தெரிந்திருக்கிறது. மேலும் செல்போன் எண் என்று கொடுத்த பேப்பரும் வெற்று தாள் என்று தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து பக்தர்கள் அந்த முதிர்வயது தாயாருக்கு உணவும், போர்வையும் கொடுத்து அமரவைத்தனர்.

மேலும் பக்தர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அங்குவந்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவருடைய பெயர் காசிம்பீ என்பதும், அவர் உஜ்ஜயானி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தவிர, வேறு எந்த விவரமும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தாரை தொடர்புகொண்டு இதுகுறித்து விவரம் எதுவும் கொடுக்க முடியவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் முதியோர் உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, மண்டல அதிகாரி முத்தண்ணா உள்ளிட்ட ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, காசிம்பீயை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் விவரமில்லாத தாயை தனியாக தவிக்கவிட்டுச் சென்ற மகனை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.