செய்திகள்

சிப்பிக் காளான் வளர்ப்பில் அதிக மகசூல் தரும் புதிய முறை

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.13–

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலை பேராசிரியர் இரா. கண்ணன், வேளாண்மைத் துறை மாணவர்களுடன் இணைந்து இயற்கை முறையில் சிப்பிக்காளான் வளர்ப்பில் ஈடுபட்டு, அதிக மகசூல் தர விவசாயிகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.

அவர் கூறுகையில், காளான் வளர்ப்பிற்கு தேவையான முதலீடு மற்றும் அதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு. அதனால் காளான் வளர்ப்பு மிகவும் லாபம் தரக்கூடிய தொழில், காளான் வளர்ப்பிற்க குறைந்த அளவிலான இடமே போதுமானது. காளான் உற்பத்தியில் வைக்கோல், காளான் வித்துக்கள் மற்றும் மக்கும் பை தேவைப்படுகின்றன.

முதலில் வைக்கோல் நுண்ணுயிர் நீக்கம் செய்ய மிதமான சுடுநீரில் குறிப்பிட்ட நேரம் வேக வைக்கப்பட்டு பின் வைக்கோலை உலர்த்தி காளான் படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக, 1 காளான் படுக்கை தயார்படுத்த 500 கிராம் வைக்கோல் மற்றும் 170 கிராம் தாய் காளான் வித்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காளான் படுக்கை தயார்படுத்த 8 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. குறுகிய நாட்களில், அதாவது 20 முதல் 25 நாட்களில் ஒரு காளான் படுக்கையில் இருந்து சுமார் 1 கிலோ காளான் வரை அறுவடை செய்யலாம்.

பல்கலையில் 20க்கு15க்கு இடத்தில் அதாவது 300 சதுர அடி அளவில் 70 காளான் படுக்கைகள் கொண்டு இயற்கை முறையில் காளான் உற்பத்தி செய்து வருகிறார். இதற்கு 30 கிலோ வைக்கோல், 10 கிலோ தாய்வித்துக்கள் மற்றும் ஒரு நபர் வேலைக்கூலி என, மொத்தம் ரூ.1,980 செலவாகின்றன. இப்பொழுது, சந்தையில் சிப்பிக்காளான்கள் 1 கிலோ ரூ.200 என்று மொத்தம் ரூ.14,000 வரை வருமானம் வரும் என்று கூறுகிறார் பேராசிரியர் கண்ணன்.

மேலும் இயற்கை முறையில் புதிய யுக்தியில் சிப்பிக்காளானை உற்பத்தி செய்து எளிதாக வருமானம் பெற விவசாயிகளுக்கு ஆலோசனையும் வழங்குகிறார். அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 8838773797. நாமும் ஒரு முறை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பாராட்டி ஆலோசனை பெற்று பயன் பெறலாமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *