செய்திகள்

சிப்காட் தொழிற்பூங்காவில் நில ஒதுக்கீடு, சலுகைகள் பெற ஆன்லைன் சேவை

Spread the love

சென்னை, ஜூன்.19–

சிப்காட் தொழிற்பூங்காக்களில் இடத்துக்காக விண்ணப்பிக்கவும், சிறப்பு சலுகைகள் பற்றி அறியவும், தடையின்மை சான்று பெறவும் ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிப்காட் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) ‘www.sipcot.in’ என்ற ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சேவைகளை வழங்கவும் அனைத்து சேவைகளையும் எவ்வித தடையுமின்றி ஆன்லைன் மூலமாக பெறவும் இந்த இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்குவோருக்கு தேவையான சேவைகளை ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கு இது உதவும். குறிப்பாக தொழிற்பேட்டைகள், தொழிற்பூங்காக்களில் இடம் ஒதுக்கித் தருவதற்கான விண்ணப்பம், சிப்காட்டின் சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு விண்ணப்பித்தல், தடையின்மை சான்று பெறுவதற்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களை இந்த ஆன்லைன் போர்ட்டலில் ஒரு பயனாளியாக பதிவு செய்யலாம். தேவையான விண்ணப்பத்தை தேர்வு செய்து பூர்த்தி செய்யலாம். ஆதார ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யலாம்.

தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு…

தேவையான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டபின், விண்ணப்பதாரரின் பயனாளர் நுழைவில் (user login) விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான ஆவணம் கிடைக்கும். இதன்மூலம், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். பயனாளர்களுக்கு சிப்காட் தெரிவிக்கும் தகவல்களும் அதன் மூலமே தெரிவிக்கப்படும்.

இதுதவிர சிப்காட் நிறுவனம் சார்பில், ஒவ்வொரு தொழிற்பூங்காவிலும் எவ்வளவு நிலம் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது. அவற்றின் விலை, காலியாக உள்ள நிலத்தின் புல எண் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்படும். எனவே, தொழில் தொடங்க விரும்புவோருக்கு அந்த தொழிற்பேட்டையில் தேவையான நிலம் இருக்கிறதா என்ற விவரங்கள் முதலிலேயே கிடைத்துவிடும். அதில் அவர் உகந்த நிலத்தை தேர்வு செய்ய முடியும்.

தமிழகத்தில் முதலீட்டுக்கான உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையிலும் முதலீட்டாளர்கள் சிறந்த பயன்களை பெறவும், சிப்காட் நிறுவனம் இதுபோன்ற சேவைகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. மேலும், ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இனிமேல் நேரடியாக விண்ணப்பங்களை சிப்காட் நிறுவனம் பெற்றுக் கொள்ளாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *