செய்திகள்

சிபிஎஸ்இ +2 மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி, ஜூன் 4–

சிபிஎஸ்இ மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திடீரென பிரதமர் மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கடந்த 1-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய கல்வித் துறை சார்பில் சிபிஎஸ்இ மாணவ, மாணவியர், பெற்றோருடன் நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திடீரென மோடி பங்கேற்று மாணவ, மாணவியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். கலந்துரையாடலின் போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

குவாகட்டியை சேர்ந்த ஒரு மாணவர் கூறும்போது, “நான் 10-ம் வகுப்பு படிக்கிறேன். பயணம் செய்வதை அதிகம் விரும்புவேன். எனது பயணத்தின்போது ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் பிரதமர் மோடியின் அறிவுரைகள் இடம் பெற்றிருந்தன. பொதுத் தேர்வை திருவிழா போன்று கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார். இந்த கருத்து என் மனதில் ஆழமாக பதிந்தது. இப்போது பொதுத்தேர்வு குறித்து அச்சப்படுவது கிடையாது” என்றார்.

ஒரு மாணவியின் பெற்றோர் கூறும்போது, “பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் எங்களது மகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை உள்ளது” என்றார். இதற்கு மோடி பதில் அளித்த போது, “தலை இருந்தால்தான் தலைப்பாகை அணிய முடியும். மாணவ, மாணவியர் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும். தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து கவலைப்பட கூடாது” என்றார். ஓய்வு நேரத்தில் மாணவர்கள் ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக், விரைவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கலாம் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *