செய்திகள்

சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை, பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை, ஜூலை 8–

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

2022–23ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் கடந்த 22–ந்தேதி முதல் தொடங்கியது.

ஏற்கனவே அறிவித்தபடி, அரசு கலைக் கல்லூரிகளில் சேர நேற்றுடன் கடைசி நாள் ஆகும். அதன்படி, நேற்று மாலை நேர தகவலின் அடிப்படையில் கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 3 லட்சத்து 65 ஆயிரத்து 40 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் 17–ந் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கும் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா? என கேள்வி எழுந்த நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1000 உதவி தொகைக்கு 2 லட்சம் பேர் மனு

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என தெரியவில்லை. அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு 5 நாள் வரை கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த கால நீட்டிப்பு என்பது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்.

கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலைக் கல்லூரிகளில் சேர 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பித்திருப்பதால், ஏற்கெனவே இருந்த இடங்களைவிட 25 சதவீதம் அதிகமாக உயர்த்தப்படும். முன்னதாக 15 சதவீதமாக இருந்தது. கொரோனா காலமாக இருந்ததால், கடந்தஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது, இந்த ஆண்டும் இது தொடரும். ஆசிரியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில்தான், மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.

அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிற அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.