செய்திகள்

சின்ன தம்பியை காட்டுக்குள் ஏன் திரும்ப அனுப்ப கூடாது?

சென்னை, பிப். 12

இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவை சின்ன தடாகத்தில் கடந்த 28-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் ஊடுருவி வந்துவிட்டது.

இந்த நிலையில் சின்னதம்பியை கும்கியாக மாற்ற போவதாக தமிழக வனத்துறை அறிவித்திருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். மேலும் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அருண் பிரசாத் முக்கிய கோரிக்கையாக விடுத்திருந்தார்.

இதையடுத்து, சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கும் இல்லை, வனத்துறைக்கும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில், சின்னத் தம்பியை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்கிறது. காட்டுக்குள் அனுப்புவதற்கான சூழலும் இல்லை.

யானை நிபுணர், சின்னதம்பி சாதுவாகி விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே சின்னதம்பி யானையை முகாமிலேயே வைத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது சம்பந்தமான வழக்கின் விசாரணையை இன்று ஐகோர்ட் ஒத்தி வைத்தது.

அதன்படி இன்று காலை இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. சின்னதம்பியின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் சின்னத்தம்பியை முகாமுக்கு அனுப்புவது தொடர்பான அறிக்கையை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *