இரவு நேரம்!
‘பெரிவர் தனிமையில் “சாந்தமாக மருந்து எடுத்து ஓய்வில் இருக்கும் நேரம்.
இது தான் சரியான சமயம்! ’என எண்ணிய அவர் உதவியாளர் செல்வராஜ், யாரும் பார்க்கிறார்களா! என்று அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெதுவாக பெரிவர் அருகில் சென்றார்.
பெரிவர் ஈசி சேரில் சாய்ந்து எதோ சிந்தனையில் இருந்தார்.
” ஐயா! ” என்ற சன்னமான் குரல் கொடுத்தார்.
மெல்ல திரும்பி பார்த்தார் பெரிவர்.
“ம்..! சொல்லுங்க..! ” என்றார் நெற்றி சுருக்கி!
இந்நேரம் செல்வராஜ் வந்தால், முக்கியமான செய்தியாக தான் இருக்கும் என பெரிவருக்கு தெரியும்!
சின்னத் தயக்கத்துக்கு பின் ஆரம்பித்தார்,
“சின்னவர்.. ராத்திரி ரொம்ப நேரம் ஏரிக்கரை ஓரமா சோகமா நடந்துக்கிட்டே இருந்தார்..!”
“எரிக்கரையா..! அவன், அங்கெல்லாம் போக மட்டானே! எதாவது சொந்த பிரச்னையா! அல்லது.. ! ”
செல்வராஜை ஏறிட்டு பார்த்தார் பெரிவர்..
“தெரியலை அய்யா! எதோ யோசனையில் இருந்த மாதிரி இருந்தது! ”
“சரி! நிங்க போங்க! நான் விசாரிக்கிறேன்! ” என்றதும் செல்வராஜ் கிளம்பினார்.
அவர் போனதும்…. மகனை அழைத்தார் பெரிவர்.
” என்னப்பா! ராத்திரி முழுவதும் ஏரிக்கரையில் இருந்தாயாமே! எதாவது பிரச்னையா! ஏன் சோகமா இருக்கிற!”
” அந்த ஏரியை நினைச்சு தான் கவலைப்பட்டேன்! சின்ன வயதில் இருந்தே குதித்து குளித்து புரண்ட இடம்ப்பா நம்ம ஏரி! வறண்டு போய் தூர்ந்து கிடக்கு. பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு. ஏதாவது பண்ணனும்ப்பா!”
” செய்யலாம் தான்! ஆனால்…. ரொம்ப செலவாகும். இதெல்லாம் நமக்கு ஏன்..! ஊர் கூடி முடிவெடுக்கணும்” என்று தலைவர் முடிக்கும் முன்
‘‘ அதெல்லாம் தெரியாது! நான் புரண்ட இடம்! வாழ்ந்த இடம்! ஏதாவது பண்ணனும்! இது நடக்கும்! நடத்துவேன்!” என்று உறுதியுடன் சொல்லி விட்டு போகும் மகனை அதிர்ச்சியாக பார்த்து நின்றார்.
ஒரு வாரம் கழித்து ஏரி களை கட்டியது!
” ஊருக்காக சொந்த பணத்தை போட்டு ஏரியை தூர் வாருதே தம்பி..!”
“பெத்தா இப்படி ஒரு மகனை பெக்கணும்..! ’’
”“ஊருக்கு அடுத்த தலை தம்பி தான்…!
”“புலிக்கு பிறந்தது புனை ஆகுமா..!”
ஊராரின் பேச்சை ரசித்தபடி ஏரியில் வலம் வந்த வந்த பெரிவர் , செலவை நினைத்து மலைத்தார்.
மகனுக்கு அருகில் வந்தார்
” இப்படி ஏரியை தூர் வார ஆட்கள், ஜேசிபி லாரினு செலவு பண்றியே! தாங்குமா!” கலங்கிப் போய் கேட்டார்.
மெல்லத் திரும்பி அப்பாவைப் பார்த்தவன் காதுக்கு அருகில் வந்து மெல்லிய குரலில்
” தாங்கும்ப்பா! டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டேன். இந்த ஏரி மணல் – கட்டடிடம் கட்ட தகுதியான மணல்னு சொல்லிட்டாங்க! இது வரை 200 லாரி லோடு போயிருச்சுப்பா! கணக்கு போட்டு பாருங்க!”
என்று இதழோரம் சிரித்த படி சொன்ன மகனைப் பார்த்து அதிர்ந்து பிரமித்த பெரிவரின் கைகள் தானாகவே உயர்ந்து கைகூப்பி கும்பிட்டார் தன்னையும் அறியாமல்!