செய்திகள்

சின்னம் பறிபோகும் அபாயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கேரள முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

திருவனந்தபுரம், மார்ச் 29–

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் பறிபோகும் நிலையில் உள்ளது என்றும், கடுமையாக உழைத்து சின்னத்தை காக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு, அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பாலன் எச்சரித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பாலன், கேரள நிதி நிறுவன அலுவலர்கள் சங்கத்தின் பயிற்சி பட்டறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:–

2024 நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்து, தேர்தலில் வெற்றியை பெற வேண்டும். தவறினால், நமது சின்னமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தை நாம் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். அதன் பின்னர், எறும்புண்ணி அல்லது ஆக்டோபஸ் போன்ற சுயேச்சை சின்னங்களில்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

தேசிய கட்சி என்ற நிலையில், குறிப்பிடத்தக்க சதவீத ஓட்டுக்களை பெற வேண்டும். அதற்கு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாம் வெற்றியை பெறுவதுடன் வாக்கு சதவீதத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் ஏதாவது ஒரு சின்னத்தில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கே. பாலன் தொண்டர்களை எச்சரித்தார்.

தேசிய கட்சிக்கான தகுதி

தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படவோ, அங்கீகாரம் தொடரவோ, இந்தியாவில் மொத்தமுள்ள (மொத்தம் 543) நாடாளுமன்ற மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதில் இரண்டு உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இருந்தும், ஒரு உறுப்பினர் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் அந்த கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலில் 1.77 சதவீத வாக்குகளை பெற்றது. இப்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சி மொத்தமுள்ள 140 இடங்களில் 62 இடங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *