செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Makkal Kural Official

சென்னை, டிச. 31–

தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நாடகங்களில் நடித்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்தது.

திருவான்மியூர் ராஜாஜி நகரில் மகள் சித்ரா வாங்கிய வீட்டிலேயே மனைவி விஜயா(62), பேத்தி ரேணுகா(19) ஆகிய இருவருடன் வசித்து வந்துள்ளார் காமராஜ். காமராஜ் அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றார். காமராஜின் மகள் சித்ரா இறந்த நாள் முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, காமராஜ் மகள் சித்ரா இறந்ததிலிருந்து அவரது படுக்கை அறையில் தினமும் தனியாகப் படுத்துத் தூங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தூக்கிட்டு தற்கொலை

காமராஜ் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து மகளின் போட்டோவை பார்த்து சற்று நேரம் கண்ணீர் சிந்தி விட்டு அதன் பிறகு தேநீர் அல்லது பால் அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஆனால், சித்ராவின் தாயார் இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து வந்து, சித்ராவின் அறையிலிருந்த காமராஜிடம் குடிப்பதற்குப் பால் கொண்டு வரவா எனக் கேட்டதாகவும், அதற்கு காமராஜ் எனக்கு ஒரு மாதிரி உள்ளது, அதனால் பால் வேண்டாம் என மனைவியிடம் கூறியதாகவும், ஆகையால் விஜயா அவரது படுக்கையறைக்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இன்று காலை 7 மணி ஆகியும் காமராஜ் படுக்கை அறையில் இருந்து வெளியே வராததால், அவரது படுக்கை அறைக்கு சென்று அவரது மனைவி விஜயா பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தனது மகளான நடிகை சித்ரா தற்கொலை செய்த நிலையில் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருவான்மியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. காமராஜ் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 9–ந் தேதி தான் சித்ராவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. அதனால், மகளின் பிரிவைத் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *