சிறுகதை

சிந்து ஏன் சிரித்தாள்? – ஆவடி ரமேஷ்குமார்

உள்ளே நுழைந்த சிந்துவை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற அனைவரும் பரிதாபமாய் பார்த்தனர்.

மூன்று நாட்களாக தினமும் ஏதாவது ஒரு தவறுக்காக மேனேஜர் சிந்துவை அழைத்து திட்டி வந்திருக்கிறார்.

மேனேஜரின் இந்த ‘ஹாட்ரிக்’ சாதனை இன்று இருக்காது என்று நினைத்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.

காரணம் அனுமதி கேட்காமல் இன்று ஒரு மணி நேரம் கால தாமதமாய் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள் சிந்து. மேனேஜரின் அறைக்குள் தயங்கியபடி நுழைந்தாள் சிந்து.

சிறிது நேரத்தில் கடுகு போல் ஆரம்பித்த மேனேஜரின் குரல் இப்போது எல்லோருக்கும் கேட்கும்படி அணுகுண்டாய் வெடித்தது.

‘அழாத குறையாய் சோகத்துடன் மேனேஜரின் அறையை விட்டு சிந்து வெளியே வருவாள்’ என்று எதிர்பார்த்த மற்றவர்களுக்கு அதிர்ச்சி! ஆச்சரியம்!

சிரித்தபடி வந்தாள் சிந்து.

உணவு இடைவேளை.

பிருந்தா கேட்டாள்.

“என்ன சிந்து… மேனேஜர் உன்னை அப்படி திட்டின பிறகு வாடிப்போய் வராம பதிலுக்கு சிரிச்சிட்டே வந்தியே…உள்ள என்ன தான் நடந்தது?” என்று பிருந்தா கேட்க…….

அதற்கு சிந்து “பிருந்தா உனக்கு ஆபீஸ் மேட்டர் மட்டும் தான் தெரியும். எனக்கு மேனேஜரோட பேமிலி மேட்டரும் தெரியும். அதை நினைச்சேன். சிரிச்சேன்” என்றாள்.

“என்னடி சொல்ற… அவரோட பேமிலி மேட்டர் உனக்கெப்படி தெரியும்?”

“அப்படி கேளு. மேனேஜரோட ஒய்ப் என்னோட கல்லூரித் தோழி. இது அவருக்குத் தெரியாது. அவரோட பேமிலி மேட்டர் ஒன்னு என் தோழி மூலமா எனக்கு தெரிஞ்சிது”

ராஜி குறுக்கிட்டாள்.

“அவங்க உன் தோழியா இருக்கிறதுக்கும் நீ சிரிஞ்சிட்டு வர்றதுக்கும் என்னடி சம்பந்தம்?”

“அவரோட ஒய்ப் சொன்ன ஒரு ரகசிய விஷயம் இது. போன வாரம் நம்ம மேனேஜர் கொடைக்கானலுக்கு பேமிலி டூர் போய் வந்தாரே… தெரியுமில்ல?”

“தெரியும்….. தெரியும்……”

“டூர் போறதுக்கு முன்னால வீட்ல இருந்த நூறு பவுன் நகைகளை எங்க மறைச்சு வச்சிட்டு போலாம்கிறதுல ஒரு குழப்பம் வந்திருக்கு மேனேஜருக்கு. அதுக்கு என் தோழி ‘காஞ்சிபுரத்துல இருக்கிற என் அக்காகிட்ட கொடுத்துட்டு வரும் போது திரும்ப வாங்கிக்கலாம்’ னு யோசனை சொல்லியிருக்கா.

‘நம்மகிட்ட இவ்வளவு நகைகள் இருக்குங்கிற விஷயம் அவங்களுக்கு தெரியனுமா’ னு கேட்டுட்டு தன் வீட்டிலேயே நூதனமான முறையில மறைச்சு வைக்கிறேனுட்டு எப்படியோ மறைச்சு வச்சிட்டார்.

கொடைக்கானல் டூர் முடிஞ்சு வீடு திரும்பினவங்களுக்கு அதிர்ச்சி! வீட்ல திருட்டு நடந்திருக்கு. மேனேஜர் உடனே ஓடிப்போய் வீட்ல இருந்த சீலிங் பேனை பார்த்திருக்கிறார். பேனில் இருந்த கப்பெல்லாம் கழண்டு கெடக்கு. அந்த பேன் கப்புக்குள்ள தான் நூதனமான முறையில நகைகளை மறைச்சு வச்சிருந்தார். திருடனுக எப்படி மோப்பம் புடிச்சாங்கனு தெரியல. அப்புறம் அரிசி டின்னுக்குள்ள கீழே நகைகளைப் போட்டு அதுக்கு மேல அரிசியை போட்டிருந்தார். இப்ப போய் பார்த்தா அரிசியெல்லாம் கொட்டிக்கிடக்கு. அதுக்குள்ள இருந்த இருபது பவுன் நகைகளை காணோம். போலீஸ்க்கு கம்ப்ளைன்ட் பண்ணினா இன்கம்டாக்ஸ் பிராப்ளம் வரும்னு அமைதியா இருந்திட்டாராம். என் தோழி இவரோட புத்திசாலித்தனத்தை நினைச்சு தலை தலையா அடிச்சிக்கிட்டாளாம். இப்ப சொல்லுங்க….இந்த நாலு நாள் என்னை அவர் திட்டினதை நீங்க நல்லா கேட்டிருப்பீங்க. அவர் என்னோட சின்ன சின்ன தப்புக்களை எவ்வளவு நுணுக்கமா ஆராய்ச்சி பண்ணி கவனிச்சு அதுக்கு எவ்வளவு தூரம் விளக்கம் கொடுத்துப் பேசினார்? இப்ப அவரோட மனைவி பேச்சை அவர் கேட்காததால எவ்வளவு பெரிய இழப்பைச் சந்திச்சிருக்கார். தான் ஒரு பெரிய புத்திசாலிங்கிற அந்த ஆணவம் இன்னும் அடங்கலை பாரு. அதை நினைச்சா சிரிப்பு வருமா வராதா?”

“பரிதாபம் தான் வருது!” என்றாள் பிருந்தா.

” மேனேஜருக்குப் பின்னால இப்படி ஒரு ப்ளாஷ் பேக்கா?” என்று ஆச்சரியப்பட்டாள் ராஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *