டெல்லி, மே 12–
சித்ரவதை செய்து கொல்லப்பட்ட டெல்லி டாக்டர் கொலையில் துப்பு கிடைத்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜங்புரா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் யோகேஷ் சந்திரபால் (வயது 63). யோகேஷ் மனைவியும் டாக்டர். அவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். டாக்டர் யோகேஷ் தனது வீட்டில் கிளினிக் நடத்தி வந்தார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்ததோடு மருந்தும் இலவசமாக கொடுத்து வந்ததால், அவர் அப்பகுதியில் பிரபலமாக விளங்கினார்.
இந்த நிலையில், அண்மையில் டாக்டர் யோகேஷ் மனைவி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது யோகேஷ் சேர் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டு தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவர்களது வீட்டில் இருந்த இரண்டு நாய்களையும் கொலையாளிகள் பாத் ரூமில் போட்டு அடைத்திருந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து யோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையில் துப்பு
இதில் கொலையாளிகள் யோகேஷை சேர் ஒன்றில் வைத்து கை, கால்களை கட்டி சேரை அப்படியே சமையல் அறைக்கு இழுத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு வைத்து கூரிய ஆயுதத்தால் யோகேஷ் தலையில் அடித்ததோடு கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தியோ கூறுகையில், “டாக்டர் கொலையில் முக்கிய துப்பு கிடைத்து இருக்கிறது. இந்த கொலையில் 4 பேர் தொடர்பு கொண்டு இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஒருவர் வீட்டிற்கு வெளியில் நின்று பார்த்துக்கொண்ட நிலையில், 3 பேர் உள்ளே சென்று கொலை செய்துவிட்டு கொள்ளையடித்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க பல இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது. கொலையில் டாக்டருக்கு தெரிந்த ஒருவருக்கு தொடர்பு இருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறோம் என்றார்.