சிறுகதை

சித்து விளையாட்டு – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ன்று முழுநிலா வானில் முழுமையாக வளர்ந்து நின்றிருந்தது. சோலார் பவரைப் போல பூமியில் வெளிச்சம் தந்தது.

நிறைந்த அந்தப் பௌர்ணமி திருநாளில் சுருளி சித்தர் வீற்றிருக்கும் சுருளி மலைக் குடியிருப்புக்கு சென்றார்கள் ஆனந்தும் முத்துவும்.

அந்த இடம் முழுவதும் தெய்வீகம் கமழும் இடமாக இருந்தது. ஜவ்வாதும் பன்னீரும் கமகமவென்று மணம் வீசியது. திருநீறு வாசம் அந்தத் திசையெல்லாம் வீசியது .

ஆனந்தும் முத்துவும் சித்தருக்குத் தேவையான விசயங்களை வாங்கிக் கொண்டார்கள்.

“புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடானது “என்ற வாசகம் எல்லாம் சித்தர்களுக்கு கிடையாது . பீடியும் தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டார் ஆனந்த்.

மாம்பழச்சாறு அடைக்கப்பட்ட ஒரு புட்டியை வாங்கிக் கொண்டான் முத்து.

சித்தர் அருள்பாலித்திற்கும் இடத்திற்கு இருவரும் சென்றார்கள். இவர்கள் வருவதற்கு முன்பும் வந்த பிறகும் காலியாக இருந்தது அவரின் வரம் தரும் இருக்கை. சுருளிச் சித்தர் அமரும் இடத்திற்கு வலது புறம் அன்னதானம் செய்பவர்கள் பணம் செலுத்தி விட்டு ரசீத்தைப் பெற்றுக் கொள்ளவும் என்று எழுதப்பட்டிருந்த இடத்திற்கு கீழே ஒரு பெண்மணி நன்கொடை தருபவர்களின் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ரசீதும் விபூதியும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

வலது புற ஓரத்தில் அன்ன தானம் நடந்து கொண்டிருந்தது. அன்னதானத்தின் வாசனை அந்த ஆசிரமத்தை நிறைத்திருந்தது. ஆட்கள் நிறைந்த அந்த வெட்ட வெளியில் ஆனந்தும் முத்துவும் போகும்போது ஒருவர் வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ சமையலுக்குத் தான் அவர் உரித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான் முத்து. சிறிது நேரத்திற்கு எல்லாம் இன்னொருவர் வெங்காயத்தை உரித்து கொண்டிருந்தார். அதையும் கவனித்தான் முத்து. அடுத்த சில நிமிடங்களில் இன்னொருவர் வெங்காயம் உரிக்க வந்தார்.

என்ன இது ? இவ்வளவு பேர் இங்க வேலை செய்கிறார்களா? என்று முத்து நினைத்தபோது

இல்ல முத்து இந்த வெங்காயம் உரிக்கிறது ஒரு குறியீடு. வெங்காயத்துக்கு மேல இருக்கிற தோல உரிக்கும் பாேது , நமக்குள்ள இருக்கிற குரோதம், , கோபம், பிரச்சனை, இயலாமை எல்லாமே நம்மள விட்டு போறத இங்க நம்புறதுனால தான் இவ்வளவு பேர் வெங்காயத்தை உரிக்கிறாங்க.

நம்பிக்கையோட நாம இந்த வெங்காயத்தை உரிச்சோம்னா நம்ம மனசுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் நம்ம விட்டு போறதா நம்பப்படுது. அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போதே சுருளிச் சித்தர் தன் இருக்கைக்கு வந்தார்.

அவரின் உருவமே விகாரமாக இருந்தது.

தலையில் சுற்றி வைக்கப்பட்ட நீண்ட ஜடை முடி. தீட்சண்யமான கண்கள் .பச்சை வேட்டி . சிவப்புச் சட்டை என்று வந்து அமர்ந்தார் சுருளிச் சித்தர். அவர் யாரிடமும் பேசவில்லை. மௌனச் சித்தர் அவர் பேசி எத்தனை ஆண்டுகள் ஆனது? என்பது யாருக்கும் தெரியாது. அவரின் பெயரும் தெரியாது. பிறப்பும் தெரியாது என்று சொன்னார் ஆனந்த்.

சுருளிச் சித்தர் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த அத்தனை பக்தர்களுக்கும் பார்வையாலே ஆசி வழங்கினார். அவரின் இடதுகைப்புறம் பக்தர்கள் வாங்கி வைத்த மாம்பழச் சாறு. பீடி ,சிகரெட் பிஸ்கட் என்று நிறைய இருந்தன. அதைப் பார்த்தவர் அவைகளை ஏதோ சோதனை செய்வது போல பார்த்துவிட்டு ஆனந்த் வாங்கிப் போன பீடியை மட்டும் எடுத்துக் கிழித்து அதைத் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

ஆனந்த் நீங்க வாங்கி வச்ச பீடிய சித்தர் எடுத்துகிட்டார்

என்று முத்து சொன்னபோது அதற்கும் விளக்கம் சொன்னார் ஆனந்த்.

நாம வாங்கி வைக்கிற பொருளை சித்தர் எடுத்துகிட்டா நமக்கு அவருடைய அருள் நேரடியாக கிடைக்குதுன்னு அர்த்தம் என்று சொன்னபோது முத்துவிற்குள் சித்தர் வாசம் சிறகடித்தது.

சாமியக் கும்பிடுங்க போங்க என்று நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்த பெண்மணி சொல்ல அங்கிருந்தவர்கள் வரிசையாகச் சாமியைத் தரிசனம் செய்யப் போனார்கள்.

சாமிய யாரும் தொடாதீங்க. தொடாம சாமி கும்பிடுங்க

என்று அந்தப் பெண்மணி சொன்னதைத் தட்டாமல் செய்தார்கள் பக்தர்கள்.

அத்தனை பேரும் சாமியை தரிசனம் செய்துவிட்டு வந்த போது முத்துவும் ஆனந்தும் தரிசனம் செய்து வந்தார்கள்.

அதுவரையில் அமர்ந்திருந்த சித்தர் அதன் பின் அறைக்குக் கிளம்பி விட்டார்.

இது கூட நமக்கு அவர் காட்சி தருவதற்கு தான் இங்க வந்திருக்கார். இல்லன்னா ரொம்ப நேரம் ஆகும்

என்று ஆனந்த் சொல்ல

அப்படியா ? என்று கேட்டான் முத்து.

எஸ் என்றார் ஆனந்த்.

சரி சாப்பிட போலாமா? என்று இருவரும் அன்னதானக் கூடத்திற்குள் நுழைந்தார்கள். தலைவாழை இலை, அப்பளம் பொரியலாேடு சாப்பாடு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்கள்.

அதுவரையில் சித்தரைப் பற்றிய சித்தம் தெரியாமல் இருந்த முத்துவுக்கு சித்தர் பற்றிய ஒரு சிறப்பான புரிதல் ஏற்பட்டது.

மனிதர்கள் மனிதர்களுக்காக வாழ்கிறார்கள். சித்தர்கள் மற்ற மனிதர்கள் இந்த பூமி சிறக்க வேண்டும் என்பதற்காக வாழ்கிறார்கள்.

அவர்கள் தனக்காக எதையும் சேர்த்துக் கொள்வதில்லை. தன் குடும்பம், தன் வாரிசு என்று இருப்பதில்லை என்று நினைத்துக் கொண்டு இருவரும் வெளியே வந்தார்கள்

சித்தர்களின் வாழ்க்கை சிறப்பான வாழ்க்கை. அவர்கள் இந்த மனித குலம், இந்த பூமி நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறார்கள். இவர்கள்தான் உண்மையாக நடமாடும் தெய்வங்கள் என்று உணர்ந்து இருவரும் வெளியே வந்த போது

உங்கள் தொண்டன், நம்பிக்கை நாயகன் இந்த நாட்டைக் காப்பாற்ற வந்திருக்கும் இந்தத் தொகுதி வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

மக்களைக் காக்க வந்த உண்மைத் தொண்டன் . உங்கள் ஊழியன். உங்களைக் காப்பதற்காகவே படைக்கப்பட்ட ஜீவன் என்று ஒலிபெருக்கியில் ஒருவன் கத்திக்கொண்டு வந்த போது ஆனந்தும் முத்துவும் சிரித்துக் கொண்டார்கள்.

சித்தர்களும் இந்த பூமி வாழ்வதற்கு தங்கள அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்களும் மக்கள் வாழ்றதுக்காக தங்கள் வாழ்க்கைய வாழ்க்கைய அர்ப்பணிக்கிறதா சொல்றாங்க.

இதில எது நிஜம்? என்று இருவரும் பேசிப் பேசிச் சிரித்து நடந்து வந்தார்கள்.

தூரமாக அந்த தலைவரின் பெருமை, அருமைகளைப் பேசிக்கொண்டே சென்றது அந்த தேர்தல் வாகனம்.

தனக்காக எதுவும் சேர்த்துக் கொள்ளாத தன்னலம் மறந்த ஏன் பேசுவதற்கே மறந்து மெளனமாக வாழும் சித்தர்கள். இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

இருவரின் இதயத்திலும் மெளன மொழி பேசும் சுருளிச் சித்தரே நிறைந்திருந்தார்.

Loading

One Reply to “சித்து விளையாட்டு – ராஜா செல்லமுத்து

  1. சித்தர் கதை, சித்தர் மாதிரியே பாதி புரிந்தும், மீதி புரியாமல் இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *