செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் 2வது ஆண்டாக ரத்து

சிதம்பரம், ஜூலை 14–

கொரோனா பெருந்தொற்றால் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் தொடர்ந்து 2வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக, தேரோட்டத்தை கோவிலுக்கு வெளியேவும், ஆனிதிருமஞ்சன விழாவையும் நடத்த அனுமதி அளிக்கவில்லை. பக்தர்கள் யாரும் இன்றி, கோவில் உள் பகுதியிலேயே தேரோட்டம் மற்றும் ஆனிதிருமஞ்சன விழாவை நடத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நடைபெற இருந்த பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்கமாக தேரோட்டத்தின் போது நடராஜருக்கு நடைபெறும் பூஜைகள் கோவிலுக்கு உள்ளேயே நடந்தது. அதன்படி இன்று அதிகாலை 5 மணிக்கு நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித்சபையில் இருந்து புறப்பட்டனர். உள் பிரகாரத்தை வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சுவாமியை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதி முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

தொடர்ந்து நாளை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு மதியம் 2 மணி அளவில் தரிசன விழா நடைபெறுகிறது. அதில் நடராஜரும் சிவகாம சுந்தரியும் நடனமாடியபடி சன்னதிக்கு செல்வார்கள். அதன்பின்னர் மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆனி திருமஞ்சன விழாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதுடன், ஆனி திருமஞ்சனமும் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *