செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

Makkal Kural Official

சிதம்பரம், ஜன.4–

கடலூர் மாவட்டம், உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நாளை (5-–ம் தேதி), வெள்ளி சந்திர பிரபை வாகன வீதியுலா, 6–ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத் தில் வீதியுலா, 7-–ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி யுலா உள்ளிட்டவை நடைபெறுகிறது.

இதையடுத்து, முக்கிய திருவிழாவான 12-–ம் தேதி தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13–ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும். இதைத் தொடர்ந்து, 14–ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15–ம் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலர் சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியர் சிவராஜதீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் செய்து வந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *