செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம், டிச. 26–

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தேரோட்டத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளை ஆயிரம் கால் மண்டபத்திற்க்கு கொண்டு வந்து இன்று அதிகாலை தீட்சிதர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்து அருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

அதனையடுத்து திருத்தேர்கள், சிதம்பரத்தை சுற்றியுள்ள கீழ வீதி வழியாக வலம் வந்து இன்று மாலை சுமார் 5 மணியளவில் கீழ் வீதியில் உள்ள நிலையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவசிவ முழக்கங்களோடு ஆடல் பாடலுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த திருவிழாவையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி செய்து தரப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர், மருத்துவ துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது.

மேலும் நாளை நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கலெக்டர் உத்தரவின் பேரில் நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *