நகராட்சி தலைவர் எச்சரிக்கை
சிதம்பரம், ஜன.29:-
சிதம்பரம் நகராட்சியில் பொது மக்களை அலைகழிக்கும் விதமாக பணியின் போது அலட்சியமாக செயல்படும் அதிகாரியின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி சார்பில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கான நிதியை பெற்றுத்தந்த வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் தலைவர் செந்தில்குமார் பேசியதாவது:
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா மற்றும் தெப்ப உற்சவ விழா, பொங்கல் விழா காலங்களில் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்த நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன், இந்த சிறப்பான பணி பொதுமக்கள் மற்றும் பக்தர் பாராட்டும் விதத்தில் நடைபெற்றது.
நகராட்சியில் சுமார் 400 கோடிக்கு மேல் நிதிபெற்று பல அரிய திட்டங்களை செயலாற்றியும், சில அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் அலை கழிக்கப்படும் நிலை உள்ளதாக தகவல் அறிந்தேன். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிறப்பு மற்றும் இறப்பு, வரிவசூல் உள்ளிட்ட இனங்களுக்கான பணியின் போது பொதுமக்களை அலை கழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியலிடப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து மற்றும் ப்ளீசிங் பவுடர் அடிக்கப்படும், மன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், சாலையில் சுற்றி தெரியும் நாய் மற்றும் பன்றிகள் பிடிக்க விதிமுறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஆணையாளர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் மணிகண்டன், அறிவழகன், சுதாகர், சரவணன், புகழேந்தி, இந்துமதி அருள், கவிதா சரவணன், வளர்மதி, லதா, ஷகிலா, தஸ்லிமா , சுனிதா மாரியப்பன், பூங்கொடி, விஜயலட்சுமி, சித்ரா, குணசுந்தரி, மஞ்சுளா மற்றும் சிதம்பரம் நகர வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.