சமூக நீதியை நிலைநாட்டுகின்ற அரசாக தி.மு.க. திராவிட மாடல் அரசு திகழ்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை, ஜூலை 10–
இன்றைக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். சமூக நீதி மறுக்கப்படுகின்ற பல்வேறு மாநிலங்களில், திராவிட மாடல் ஆட்சியானது தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனக சபை மீது பக்தர்களை அனுமதிக்காத நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் நீதிமன்றத்தின் மூலம் கனக சபையில் மீதேறி தரிசனம் செய்வதற்குண்டான உரிமையை பெற்று தந்தோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
திருமஞ்சனம் என்று காரணம் காட்டி, விழாக் காலங்களில் யாரையும் கனகசபையில் ஏற்றாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் திருமஞ்சனத்திற்கு கூட கனகசபையில் பக்தர்களை சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் பக்தர்கள் மகிழ்ச்சியோடு கனகசபை மீதேறி சுவாமியை தரிசித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து திராவிட மாடல் ஆட்சியிலே சமூக நீதி நிலைநாட்டப்படுகிறது என்பதற்கு இதை ஒரு உதாரணமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளையும், மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப் பெருமாள் கோயிலில் ரூ.59.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், மேற்கு மாம்பலத்தில் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 97 கோயில்களுக்கு ரூ.58.82 கோடி மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணிகளும், ரூ.13.38 கோடி மதிப்பீட்டில் 50 மரத்தேர்களில் மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு வரை 3 புதிய தங்கத்தேர்களும், 5 வெள்ளித் தேர்களும் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருத்தணி வெள்ளித்தேர் நிறைவுற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தாண்டு 2 புதிய தங்கத்தேர்களும், 4 வெள்ளித்தேர்களும் உருவாக்கப்பட உள்ளன.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான், ஆட்சியின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக உபயதாரர்கள் இதுவரை 920 கோடி ரூபாயை வழங்கி இருக்கின்றார்கள். திருக்கோயில் வாடகை நிலுவைத் தொகை 720 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசு மானியமாக ரூ.900 கோடியை முதலமைச்சர் இதுவரையில் வழங்கி இருக்கின்றார். அதில் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாக்க மட்டும் ரூ.300 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
1,855 கோயில்களில்
குடமுழுக்கு
இன்றைய தினம் வரை 1,855 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி மாவட்டம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் கோயிலுக்கும், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலுக்கும் வருகிற 12–ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இப்படி எண்ணற்ற திருப்பணிகளை மேற்கொண்டு பணியாற்றி வருகின்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.ஸ்ரீதர், சி.ஆனந்தி, கோயில் செயல் அலுவலர் கே.செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.