சிறுகதை

சிட்டுக்குருவி – ராஜா செல்லமுத்து

தொண்டை வறளும் வெப்ப வெளியில் நீண்ட தூரப் பயணம் செய்து களைத்து ஓய்ந்திருந்தன சிட்டுக் குருவிகள். மறுபடியும் தம் சின்னச் சிறகுகள் படபடக்க வெளி முழுதும் அலைந்து திரிந்தன.

தாகம்;அலகு தொட்டு ஈரப்படுத்த எங்கும் தண்ணீர் இல்லாமல் இருந்தது. தண்ணீர் தேடி வட்டமடித்த சிட்டுக் குருவிகள் தம் சொந்த மொழியில் கீச்… கீச்… என்று கத்திக் கொண்டும் தம் சிறகுகளால் சிலிர்த்துக் கொண்டும் தண்ணீர் வேண்டிப் படபடத்தன.

குஞ்சுக் குருவிகள் தண்ணீரில்லாமல் தவிக்கும் தவிப்பைப் பார்த்துக் கண்ணீர் விட்டன தாய்க்குருவிகள்.

ஈரம் உலர்ந்த வெப்ப நாக்கில் குஞ்சுக் குருவிகளின் அலகு தொட்டு நாக்கை ஈரமாக்க முயற்சி செய்தன தாய்க்குருவிகள்.

தாகம் தீர்க்காத தாய்க் குருவிகளின் நாக்கைக் கொத்திக் கொண்டு கீச்… கீச்.. என்று ஈனக் குரலில் தேம்பின குஞ்சுகள்.

ஈரம் பார்க்காத குஞ்சுகளின் குரல்வளை அறுக்கும் குரலைக் கேட்டு தண்ணீர் தேடிக் காத தூரம் ஓடின தாய்க்குருவிகள்.

வெயில்.. வெப்பம்… வியர்வை…. காய்ந்த சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு தண்ணீர் தடம் தேடிப் பறந்தன தாய்க் குருவிகள்.

வெட்ட வெளியெங்கும் தக தகத்து நின்றது கானல் நீர். தன் அலகு தொட்டுக் கானல் நீரைக் கொத்தின தாய்க்குருவிகள். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

வானில் வழக்கத்தை விட அதிகமாகப் பறந்தன சிட்டுக் குருவிகள்.

என்ன இது? என்னைக்குமில்லாம இன்னைக்கு சிட்டுக் குருவிக இவ்வளவு அதிகமா பறந்திட்டு இருக்குக. ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? என்று கந்தன் சொல்ல,

எல்லாம் வெயில். வெப்பம். தண்ணி இல்லாம தவிக்குதுக போல என்று கணேஷ் சொல்ல

ஆமா, நீங்க சொல்றது நிஜந்தான். தண்ணி இல்லாம தான் இப்பிடிப் பறக்குதுக என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார் கணேஷ்.

அதுவரையில் வறண்ட நாக்கோடு பறந்து கொண்டிருந்த குருவிகள் தண்ணீர் இருக்கும் இடம் தேடித் தாவி வந்து, தம் உலர்ந்த அலகால் உர்… உர்…. என உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தன. தண்ணீரைத் தான் குடித்தது மட்டுமில்லாமல், தன் அலகில் உறிஞ்சி எடுத்துக் கொண்டு குஞ்சுகள் இருக்கும் இடம் தேடிப் பறந்தன.

முன்னாடியெல்லாம் சிட்டுக் குருவிக நெறயா இருக்கும். இப்ப அப்படி எதுவும் சரியா இல்லையே?

வேற ஏதும் காரணமா இருக்குமாே?

என்று கணேஷ் கேட்க,

என்னங்க விஷயம் தெரியாம பேசிட்டு இருக்கிங்க. இதுக்கு எல்லாம் நாம தான் காரணம். நாம பயன்படுத்துற செல்பாேன். அதுல இருந்து வர்ற கதிர்வீச்சு. இதுகனால தான் சிட்டுக் குருவி இனமே அழிஞ்சு போச்சுன்னு சொல்றாங்க என்று கந்தன் சொல்ல

அப்பிடியா ?

ஆமாங்க. அப்பிடித் தான் சொல்றாங்க. இந்த பூமி, வானம், இயற்கை எல்லாத்தையும் அழிச்சுப்புடுச்சு இந்த விஞ்ஞானம்.

அதுல முதல் பலிகடா இந்தச் சிட்டுக்குருவிகள் தான்

என்று கந்தன் விஞ்ஞான அறிவை விரித்து வைத்துப் பேசினான்.

தன் நாக்கில் ஈரம் சுமந்து பாேன சிட்டுக்குருவிகள், தன் குஞ்சுகளைத் தேடியலைந்தன. புறப்பட்ட இடத்தில் குஞ்சுகள் இல்லை, புதர், மரங்கள், சுற்றியிருந்த காடுகளில் தேடின அங்கும் இல்லை.

கீச்… கீச்… என்று வட்டமடித்து அந்தப் பகுதியையே அமர்க்களப் படுத்தின , தாய்க்குருவிகள். எங்கும் இல்லை என்று களைத்து ஓய்ந்த பின் தன் வெப்பச் சிறகுகளை வெட்ட வெளியில் பரப்பிப் பறந்து பறந்து தேடின.

கதிர்வீச்சு வீசும் செல்பாேன் கோபுரத்தில் அமர்ந்திருந்தன, குஞ்சுகள். ஈரம் சுமந்த பாசத்தோடு தன் குஞ்சுகளுக்கு தண்ணீர் கொடுக்க, செல்போன் கோபுரம் நோக்கிப் பறந்த தாய்ச் சிட்டுக் குருவிகள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *