அகமதாபாத், ஜூலை 1–
பசுவின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சிங்கத்தின் மீது செங்கல்லை எறிந்து, விவசாயி ஒருவர் பசுவை காப்பாற்றி உள்ளார்.
குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் கிர் தேசிய பூங்கா உள்ளது. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசிய பூங்காவாகும். இந்நிலையில், கிர் காட்டில் சிங்கம் ஒன்று பசுவை வேட்டையாட முயன்றது. அதை பார்த்த பசு மாட்டின் உரிமையாளர், தனது பசுவை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பசுவை காத்த விவசாயி
இது தொடர்பான வீடியோவை விவேக் கோட்டாடியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை சிங்கம் ஒன்று தாக்குகிறது. சிங்கம் பசுவின் கழுத்தைப் பிடித்து இழுக்க முயல்கிறது.
அப்போது மாட்டின் உரிமையாளரான விவசாயி, திடீரென ஒரு செங்கல்லை எடுத்து சிங்கத்தின் மீது வீசினார். இதைப் பார்த்த சிங்கம் தன் பிடியைத் தளர்த்தி காட்டுக்குள் ஓடுகிறது. பசுவும் பிழைக்கிறது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பசுவை காப்பாற்றிய விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.