செய்திகள்

சிங்கம்புணரியில் அரிய வகை நோயால் அவதிப்பட்ட மகளை கொன்று தாய் தற்கொலை

சிங்கம்புணரி, டிச. 20–

அரிய வகை நோயால் அவதிப்பட்ட மகளை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயராஜ். இவரது மனைவி சங்கீதா (வயது 25). இவர்களது 5 வயது மகள் பிரகன்யா. சிறுமி பிரகன்யா பிறக்கும் போதே ஆசனவாய் துவாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை. மேலும் நாட்கள் செல்லச்செல்ல சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்தார். அதற்கு செலவு அதிகமாக ஆகியுள்ளது. ஆனாலும் பிரகன்யாவின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

தினமும் தங்களின் மகள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயராஜூம், சங்கீதாவும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சங்கீதா தனது மகளை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போதிருந்தே அவர் யாருடனும் பேசாமல் கவலையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜெயராஜ் வேலைக்கு சென்றிருந்ததால் சங்கீதாவும், சிறுமி பிரகன்யாவும் வீட்டில் தனியாக இருந்தனர். இந்த நிலையில் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு ஜெயராஜ் வந்தார். அவர் வீட்டு கதவை தட்டிய போதிலும் சங்கீதா திறக்கவில்லை. நீண்ட நேரமாக தட்டியும் கதவை மனைவி திறக்காததால் சந்தேகமடைந்த ஜெயராஜ், கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவரது மனைவி சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் மகள் பிரகன்யா துண்டால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரிய வகை நோயால் அவதிப்பட்ட மகள் பிரகன்யாவை, தாய் சங்கீதா துண்டால் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியவகை நோயால் அவதிப்பட்ட 5 வயது மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கம்புணரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *