மீண்டும் பிரதமராகிறார் லாரன்ஸ் வோங்
சிங்கப்பூர், மே 5-
சிங்கப்பூரில் 14-வது முறையாக ஆளும் கட்சி வெற்றி வாகை சூடி உள்ளது. இதன் மூலம் லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி பிரதமர் வேட்பாளராக லாரன்ஸ் வோங் மீண்டும் களம் இறங்கினார்.
எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தம்சிங் அவரை எதிர்த்து போட்டியிட்டார். 97 தொகுதிகள் கொண்ட இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கைச் செலுத்தினர்.
இந்த தேர்தலில் மொத்தம் 92.47 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் கட்சி 87 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 4 இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.
பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெறும் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த நாட்டை பொறுத்தவரை கடந்த 1965-ம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து 14-வது முறையாக அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வாழ்த்து
சிங்கப்பூர் பிரதமராக தேர்வாகியுள்ள லாரன்சுக்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது `எக்ஸ்’ தள பதிவில், மீண்டும் பிரதமராக தேர்வான லாரன்சுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவும், சிங்கப்பூரும் ஏற்கனவே வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த வெற்றியின் மூலம் இதனை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில், மக்கள் செயல் கட்சியை அதன் 14வது தொடர்ச்சியான வெற்றிக்கு வழிநடத்திச் சென்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு எனது வாழ்த்துகள். தமிழ் மக்களுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கும் அவரது முயற்சிகள் அனைவரையும் அரவணைக்கும் சிங்கப்பூரின் தன்மையை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.