ஐதரபாத், ஏப்.13–
சிங்கப்பூரில் இருந்து மகனுடன் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வீடு திரும்பினார்.
ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சில நாட்களுக்குகு முன்பு அங்கு நடைபெற்ற தீ விபத்து ஒன்றில் அவர் காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். விபத்து நடந்த பின், பவன் கல்யாண், அவரது அண்ணன் சிரஞ்சீவியுடன் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இது குறித்து சிரஞ்சீவி கூறுகையில், “எங்கள் குழந்தை மார்ச் சங்கர் வீடு திரும்பியுள்ளார். ஆனால், அவர் இன்னும் குணமடைய வேண்டும். எங்கள் குல தெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் அருளாலும் கருணையாலும் அவர் விரைவில் முழுமையாக ஆரோக்கியமாகி இயல்பு நிலைக்குத் திரும்புவார்\” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தனது மகனை அழைத்துக்கொண்டு பவன் கல்யாண் ஆந்திராவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். மகன் மார்க் சங்கரை கையில் தூக்கி வைத்துக்கொண்டு பவன் கல்யாண் ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மார்க் சங்கர் நலமாக வீடு திரும்பியிருப்பது பவன் கல்யாணின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.