செங்கல்பட்டு, ஏப். 1?
சிங்கபெருமாள்கோவில் அருகே சிக்னலில் நின்று கொண்டிந்த கார் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பொதும்பூர் சிக்கந்தர் சாவடி ஜானகி நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் கார்த்திக் (40). இவர் சென்னை போரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு தனது மனைவி நந்தினி (32) குழந்தைகளான 7 வயது சிறுமி இளமதி, 1 வயது குழந்தை சாய்வேலன் மற்றும் நந்தினியின் தந்தை அய்யனார் (70), அவரது மனைவி தெய்வ பூஞ்சாரி (52) ஆகியோர் மதுரை நோக்கி ஹூண்டாய் காரில் சென்றனர். காரை சரவணன் (24) என்பவர் ஓட்டி சென்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி அருகே நேற்று இரவு 10:15 மணியளவில் சிக்னலில் கார் நின்றது. அப்பொழுது காரின் பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதனால் அந்த கார் முன்னே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் இரண்டு லாரிகளுக்கும் இடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் சரவணன், நந்தினியின் தந்தை அய்யனார், ஓரு வயது குழந்தை சாய்வேலன், ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து அங்குவந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் ஆகியோர் கிரேன் மூலம் காரில் காயமடைந்தவர்களை மீட்டனர்.
காரில் இருந்த கார்த்திக், நந்தினி, நந்தினியின் தாயார் தெய்வ பூஞ்சாரி மற்றும் 7வயது சிறுமி இளமதி ஆகியோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய செங்கல்பட்டு பாத்திமா நகரை சேர்ந்த லாரி ஓட்டுநர் அந்தோணி ராஜ் (42) காயமடைந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு குடும்பத்துடன் ஊர் திரும்பிய நிலையில் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
![]()





