சினிமா

சிங்கத்தின் கால்கள், பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ…? சூர்யா!

Spread the love

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிபர்கள் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு சகோதரர்கள் போல ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு இயக்குனர் செல்வராகவன் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். சுமார் 900 நாட்கள் அதாவது சுமார் 2½ ஆண்டுகள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாகக் காத்திருந்து இருக்கிறார்கள் சூர்யாவின் NGK படம் தயாராகி வெளி வருவதற்கு. பூமாதேவியை விட பொறுமையான தயாரிப்பாளர் இப்படி இனிமேலும் செல்வராகவனுக்குக் கிடைப்பார்களா? அது குதிரைக் கொம்பு தான்.
NGK (நந்தகோபாலன் குமரன் என்னும் பெயரின் சுருக்கம்) வேடத்தில் சூர்யா. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிராமத்தில் இருந்து பட்டணப் பிரவேசம் செய்யும் ஒரு பட்டதாரி இளைஞன். சாமானியன் அரசியல் சாணக்கியனாகி முடிவில் NGK தலைமையில் ஆட்சி அமைவதாக முடியும் கதையை திரையில் சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
வலுவான திரைக்கதையும், சம்பவக் கோர்வைகளும் இல்லாமல் சூர்யா எனும் நடிகன் பலத்திலேயே களம் இறங்கி இருக்கிறார் செல்வராகவன். (கோட்டையைப் பிடிக்கும் கதையில் சூடு பிடிக்கும் அரசியல் சம்பவங்களை விறுவிறுப்பாக்குவதில் கோட்டைவிட்டு விட்டாரே…)
எந்தக் காட்சியில் குறை வைத்திருக்கிறார் சூர்யா?
இயற்கை விஞ்ஞானம் செய்வதால் தன்னுடைய கூட்டாளிகளின் அரசியல் ஆதாயம் பாதிக்கப்படுகிறது என்பதால் அவரையும், அவரது நண்பர்களையும், குடும்பத்தையும் பழிவாங்க எம்எல்ஏ இளவரசனின் வக்கிரத்தோடு படம் ஆரம்பமாகிறது.
* முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்றதன் ரகசியத்தைப் புரிந்து கொண்டிருக்கும் சூர்யா, இளவரசனின் எடுபிடியாக அவனது அரசியல் முகாமுக்குள் நுழையும்போது அப்பாவித்தனமான முகபாவத்தோடு… அந்த நடிப்பை சொல்வதா?
* அமைதிப்படையில் அமாவாசையாக வந்த சத்யராஜின் அதே ஸ்டைலில், தன் கைகளை தோல் பட்டையில் குறுக்கும் நெடுக்குமாக வைத்துக்கொண்டு பம்முவதை சொல்வதா?
* ‘‘அரசியல் ஒரு சுடுகாடு, உள்ளே போனவன் பிணமாத்தான்டா வருவான்’’ என்று அம்மா (உமா பத்மநாபன்) எச்சரித்தும், அதை உதாசீனப்படுத்தும் காட்சியில்… நடிப்பைச் சொல்வதா?
* ‘‘அரசியல் ஒரு சாக்கடை, அதை சுத்தம் செய்ய உன்னை மாதிரிஆட்கள் தான் வர வேண்டும், துணிந்து இறங்கு’’ என்று தூண்டிவிடும் மனைவியின் (சாய் பல்லவி) பேச்சைக் கேட்டு, அரசியலில் குதிக்க தயாராகும் அந்தக் காட்சியில் காட்டும் பரபரப்பைச் சொல்வதா?
* தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் கிங் மேக்கர்ஸ் – கார்ப்பரேட் கம்பெனிகள். அதன் மூளையாக செயல்படும் ரகுல் ப்ரீத் சிங்கோடு இணைந்து புதிய அரசியல் மாற்றத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் (வி)வேகத்தைச் சொல்வதா?
* தங்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட அடியாட்களின் தாக்குதலில் இருந்து தப்பித்து, தண்ணீரில் குதித்து தப்பி, ஒரு நாள் தலைமறைவுக்குப் பின் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிட, கட்டியணைத்து வரவேற்று எதிரிகளுக்கு எதிராக புறப்படு…’ என்று தூபம் போடும் கிராமத்து மக்களின் உணர்வை மதித்து புயலென புறப்படுவதைச் சொல்வதா?
* ஆளும்கட்சி – எதிர்க்கட்சி இரண்டின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டி, இளையதலைமுறையைத் தன் பக்கம் திருப்பி, அவர்களுக்கு தலைமை தாங்கி ஆட்சி மாற்றத்திற்கு வழி காணுவதைச் சொல்வதா?
* தன்னைப் பழி வாங்குவதற்காக தன்னோடு சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தையே பழி வாங்கியதைக் கண்டு குமுறும் காட்சியில் எரிமலையாய் வெடித்துச் சிதறுவதை சொல்வதா?
* தான் சொன்னதை கேட்க வேண்டும் என்ற மமதையில் கழிவறையை சுத்தப்படுத்து’ என்று கட்டளை இட்டதும் அதை சகித்துக் கொண்டு தான் தலையெடுக்கும் வரை அமைதியாக இருந்து பிறகு இளவரசனை உண்டு … இல்லை… என்று பழி வாங்கும் உணர்வைச் சொல்வதா?
* கழிவறையில் எதிரிகள் அனுப்பிய குண்டர்களை அடித்து துவம்சம் பண்ணும் காட்சியிலும், காய்கறி பழ மார்கெட் பகுதியில் பதுங்கி வந்து தாக்குதல் நடத்தும் பத்து அடியாட்களை கையில் பிடித்திருக்கும் கத்தியால் சரக் சரக் சரக் சரக்கென்று குத்தி ரணகாயப்படுத்திவிட்டு ரத்தக்கறை படிந்த சட்டையுடன் மேடை ஏறி, கண்ணெதிரில் திரண்டு இருக்கும் இளைஞர் பட்டாளத்தின் முன் ஆவேச உரையாற்றி, அவர்களுக்கு(ம்) தவறை தட்டிக் கேட்கும் ‘வெறி’ உணர்வை ஊட்டும் காட்சியை சொல்வதா?….
இப்படி அடுக்கிக் கொண்டே போகும் காட்சிகளின் பட்டியலில் எந்த இடத்தில் எதிர்பார்ப்புக்கு குறைந்து இருக்கிறார் சூர்யா? அவர் கேமரா முன் தோன்றும் காட்சிகளில் குறை சொல்ல முடியாத நடிப்பு. காட்சிகளில் அழுத்தமும், திரைக்கதையில் விறுவிறுப்பும் இல்லாமல் போனதற்கு… பாவம், சூர்யா என்ன செய்வார்? தவறு செல்வராகவன் மீதுதானே தவிர…. சூர்யாவை குறை சொல்வதில் எந்த ஒரு நியாயமும் இருக்க முடியாது!
‘மாஸ் ஹீரோவான’ சூர்யாவை ஒரு எதிர்பார்ப்போடு, பரபரக்கும் காட்சியில் என்ஜிகேவாக அறிமுகப்படுத்தி இருக்கலாம். சென்சார் சர்டிபிகேட் ஓடி முடிந்து, டைட்டிலை காட்டி அடுத்த நிமிடமே மண்வெட்டியும் கையுமாக சூர்யாவை அறிமுகப்படுத்துவதை ஏற்க முடியவில்லை (நம்மாலேயே, பாவம் ரசிகர்கள் கொதித்துப் போயிருப்பார்களே!)
இளம் அழகி சாய்பல்லவியை மனைவியாகக் காட்டி டூயட் இல்லாமல் விட்டிருப்பது சூர்யாவின் ரசிகர்களுக்கு சப்பென்று ஆகி இருக்கும்.
பெயரளவுக்கு கூட நகைச்சுவை இல்லாதது, பொன்வண்ணன், வேலா ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், கன்னட நடிகர் தேவராஜ் ஆகிய மூத்த நடிகர்கள் – அனுபவசாலிகள் இருந்தும் அவர்களுக்கு சரியான தீனி இல்லாமல் போனது(ம்) ஒரு குறையே.
ரகுல் ப்ரீத்தி சிங் அழகு. அவரோடு ஒரு டூயட். அவுட்டோர் அழகு – ரசிக்கலாம்.
யுவன் சங்கர் ராஜா என்றாலே பின்னணி இசை பிரமாதம் என்று சொல்ல வைப்பவர். அது தொடர்கதை ஆகியிருக்கிறது, இங்கேயும். அதிரடி ஆக்ஷன் சண்டைக்கு அனல் அரசு. ஒளிப்பதிவுக்கு சிவகுமார் விஜயன். படத்தொகுப்புக்கு பிரவீன்; வலுவான கூட்டணி அமைந்து இருந்தாலும்…
செல்வராகவன் நல்ல படைப்பாளி, வித்தியாசமான படம் தருவார் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்பு. அதோடு இரண்டரை ஆண்டுகள் நீட்டித்துக் கொண்டிருந்ததால் செல்வராகவன் + சூர்யா இருவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் என்று திரும்பிய பக்கமெல்லாம் நம்பிக்கை பேச்சும் எழுந்ததே!
எஸ். ஆர். பிரகாஷ் பாபு,
எஸ்ஆர் பிரபு சகோதரர்களின்
NGK:
செல்வராகவனை
சூர்யா நம்பினார்,
சூர்யாவை ரசிகர்கள்
நம்பினார்கள்,
எக்கச்சக்க எதிர்பார்ப்பில்
எதிர்பாராத மாற்றம்!
ஆனாலும் சூர்யா, குறையில்லை!
யானை படுத்தாலும்
குதிரை மட்டம், சூர்யா!
–வீ.ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *