சிறுகதை

சிக்கு முடி | ராஜா செல்லமுத்து

பாரதியார் தெருவில் அன்று வந்த செய்தி புதிதாக இருந்தது.

பதிவு செய்யப்பட்ட ஒரு விளம்பரம் வீட்டுக்குள் இருந்தவர்களை எல்லாம் வெளியில் வரச் செய்தது.

இதென்ன கூத்தா இருக்கு? இப்படி ஒரு விளம்பரமா? நிஜமா இப்படியும் செய்வாங்களா? இப்படியும் கேப்பாங்களா? இது நடக்குமா? என்று ஒருவரை ஒருவர் கேட்டபடியே வீட்டுக்குள் இருந்தவர்கள் எல்லாம் வெளியில் வந்து பார்த்தார்கள்.

அது ஒரு ஆணின் குரலாக இருந்தது. இதை யார் பேசி இருப்பார்கள் என்று வீட்டு வாசலிலும் மொட்டை மாடியிலும் நின்று பாரதியார் தெரு மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த விளம்பரம் வந்து கொண்டிருந்தது. அந்த விளம்பரம் வரும் ஒலி பெருக்கி ஒரு பெண்மணி தன் இடது கை மணிக்கட்டில் தொங்கவிட்டு போய்க்கொண்டிருந்தார் .

அவள் பார்ப்பதற்கு ஊசி பாசி விற்கும் இனத்தை சேர்ந்தவள் போலிருந்தது. அவள் குரலில் பேசினால் வசீகரமாக இருக்காது என்பதை அறிந்து கொண்டாளோ என்னவோ ஒரு ஆண் குரலில் பதிவு செய்து அதை வீதி வழியே ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்.

அந்தக் குரலை கேட்டு அது வந்த திசையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் சிரித்துக் கொண்டார்கள் . ஒருவருக்கு ஒருவர் முணுமுணுத்துக் கொண்டார்கள் . அப்போது இடைவிடாமல் மறுபடியும் ஒலிக்க ஆரம்பித்தது அந்த விளம்பரக் குரல்.

சிக்கு முடி இருக்கா சிக்கு முடி. 10 கிராம் 10 ரூபா. 20 கிராம் இருபது ரூபாய். 30 கிராம் 30 ரூபாய் என்று அந்த விளம்பர குரல் சொல்லிக் கொண்டிருந்தது. உங்கள் முடியை ஒதுக்கி நீங்கள் தினமும் தலை சீவும் உதிரும் முடியை கீழே போடாதீர்கள். அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் பணம் பார்க்கலாம் என்று 10 கிராம் 10 ரூபாய் 20 கிராம் இருபது ரூபாய் என்று வசீகரமான குரலில் அந்த விளம்பரம் வந்து கொண்டிருந்தது . அந்தப் பெண்மணி இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த ஒலிபெருக்கியை இடது கை மணிக்கட்டில் தொங்க விட்டவாறு போய்க் கொண்டே இருந்தார்.

பாரதியார் தெருவில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். என்ன இது சிக்கு முடிக்கு 10 ரூபாய் தராங்க. கீழ முடி விழுந்தா அதை வச்சு எப்படி எல்லாம் மனுஷங்க தொழில் பண்றாங்க பாருங்க. அதான் சும்மாவா சொன்னாங்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு. இங்க வல்லவனுக்கு முடி ஆயுதம் ஆயிருக்கு.

‘‘இங்க முடியாதது எதுவுமே இல்லை. எதை வேணாலும் விற்று பணம் பார்க்கலாம் . எதை வைத்து வேணாலும் தொழில் செய்யலாம்’’ என்று இவர்களை பார்த்து சொல்கிறார்கள், இதுவரை எதுவும் செய்ய முடியல என்று இருந்தவர்கள்.

அவங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று முணுமுணுத்துக் கொண்டார்கள் பாரதியார் தெரு மக்கள் .

யாரிடமும் 10கிராம் கூட முடி இல்லை. ஆனால் கீழே போடும் முடிக்கு பணம் தருவதாக அந்தப் பெண்மணி சுமந்து சென்ற ஒலிபெருக்கி சொன்னபோது /அன்று தான் தெரிந்தது/.

சீவி எரியும் தலை சீவி எரியும் சிக்கு முடிக்கு இவ்வளவு பணமா? என்று.

அதிலிருந்து அந்த தெரு பெண்மணிகள். யாரும் தங்கள் தலையை சீவும் போது உதிரும் முடியை கீழே போடுவதில்லை. எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் பத்திரப் படுத்திக் கொண்டே வந்தார்கள் . அது அவர்களின் பொறுப்பை காட்டியது. கீழே போடும் முடியைக் கூட பணமாக்க முடியும் அதைக்கொண்டு வேறு ஒரு தலை முடியை செய்ய முடியும் என்ற உண்மையை சிக்கு முடி கேட்டு போன அந்தப் பெண்மணியின் உழைப்பையும் நம்பிக்கையும் காட்டியது.

அந்தத் தெருவில் வேலை இல்லை என்று சமூகத்தையும் பொழுதையும் கழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் அன்று முதல் வெளியே கிளம்பினார்கள்.

அந்தப் பெண்மணி ஒவ்வொரு நாளும் சிக்கு முடி இருக்கா சிக்கு முடி 10 கிராம் 10 ரூபாய் 20 கிராம் இருபது ரூபாய் 30 கிராம் 30 ரூபாய் உங்கள் தலைமுடியை கீழே போடாதீர்கள்; சேமித்து வையுங்கள் என்று சொன்ன வார்த்தையை பாரதியார் தெரு பெண்மணிகள் அப்படியே காப்பி அடித்ததுபோல் செய்தார்கள். ஒரு மாதம் இரண்டு மாத காலங்கள் கழித்தது. ஒவ்வொரு வீட்டிலும் 30 கிராமிலிருந்து ஐம்பது கிராம் வரைக்கும் முடி இருந்தது.

கூவி கேட்கும் நாளெல்லாம் மூடி கிடைக்கவில்லை என்று முடி கேட்கும் பெண்மணி ஓய்ந்து விட இல்லை. 10 கிராம், 20 கிராம், 30 கிராம் எடைக்கல் இருக்கு எவ்வளவு முடி சேர்ப்பது என்று இல்லத்தரசிகளும் ஓயவில்லை.

இந்த நம்பிக்கைதான் அந்த தெருவில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை இல்லா மனிதர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

இன்று பாரதியார் தெருவில் நிறைய பேர் பணிக்கு செல்கிறார்கள் என்றால் அதற்கு உத்வேகம் கொடுத்தது அந்த சிக்கு முடி தான்.

சிக்கு முடி கேட்டு வெளியே வந்த பெண்மணி தான் தனக்கு உத்வேகம் கொடுத்தது என்று யாரும் வெளியே சொல்ல வெட்கப்பட்டார்கள்

ஆனால் அவர் தான் இவர்களுக்கு உந்து சக்தி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் . இன்று பாரதியார் தெருவில் ஒவ்வொரு வீட்டிலும் முடியை சேகரித்துக்கொண்டு கொண்டிருந்தாள் சிக்கு முடி கேட்டபெண்.

அவளின் பை முடிகளால் நிரம்பி வழிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *