“தாத்தா, உனக்கு முடி நிறைய வளர்ந்திருக்கு. கட் பண்ணனும். முடி வெட்டப் போகலாமா? என்றான் பேரன் சச்சின்.
‘‘ இல்லடா, இன்னும் கொஞ்சம் வளரட்டும். அடுத்த வாரம் வெட்டலாமா?
என்று பேரன் சச்சினிடம் கெஞ்சினார் தாத்தா
” இல்ல தாத்தா … உனக்கு தெரியாது. உன் முடி வளந்து உன் கண்ண மறைக்குது பாரு. அதுவும் நீ பங்ஷன் எல்லாம் போற: பின்னாடி சட்டைக் காலர்ல அழுக்கு
சேர்ந்திருக்கு” என்று தாத்தாவின் சட்டைக் காலரை எடுத்துக் காட்டினான் சச்சின்.
“ம் “
“சரி வா போகலாம்” என்று தாத்தாவை விடாப் பிடியாகக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக முடி திருத்தும் கடைக்குக் கூப்பிட்டுச் சென்றான் சச்சின்.
அது குளிரூட்டப்பட்ட ஒரு முடிதிருத்தும் இடம். அந்த இடத்தை முடிதிருத்தும் இடம் என்று சொல்ல முடியாது. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. நான்கு பக்கச் சுவர்களில் முகம் பார்க்கும் கண்ணாடிகள். சன்னமான ஒலியில் ஒலிக்கும் திரைப்படப் பாடல். முன்னூற்று அறுபது டிகிரியும் சுற்றும் வீல் சேர். மருந்துக்குக் கூட தரையில் விழுந்து கிடக்காத தலைமுடி என்று இருந்தது அந்த முடி திருத்தும் இடம். குளிர்த் தரையில் சச்சினும் தாத்தாவும் கால்பதித்து நடந்து வந்தார்கள்.
” சார் வாங்க … உட்காருங்க. தம்பிக்கா ? உங்களுக்கா ? கட்டிங்கா? சேவிங்கா?
என்று கடைக்காரன் கேட்க,
” எங்க தாத்தாவுக்கு கட்டிங் வித் பிரஞ்ச் பியர்டு “
என்று சச்சின் சொல்ல
” என்னது பிரஞ்ச் பியர்டா ?” டேய்… அப்படின்னா என்னடா?”
என்று தாத்தா கேட்க,
” தாடிய நாடிக்கிட்ட மட்டும் வைக்கிறது தாத்தா. இப்ப இது தான் ஃபேஷன் தாத்தா”
” எனக்கு ஃ பேஷனும் வேணாம். கூசனும் வேணாம். முடிய வெட்டிட்டு சேவிங் பண்ணுங்க அது போதும்”
என்று தாத்தா சொல்ல காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர வைக்கப்பட்டார். தாத்தா. அவரின் கழுத்தைச் சேர்த்து துணியை மூடிய ஒரு ஆள்; அந்த இருக்கையை மேலும் கீழும் சரி செய்து,.
” சார் கொஞ்சம் தள்ளி உட்காருங்க..
” ம்”
கிரிக்.. கிரிக்.. கிரிக்.. தாத்தாவின் தலையில் கத்திரிக் கோல் பேச ஆரம்பித்தது. .தாத்தாவின் தலையிலிருந்த முடிகள் கொஞ்சங் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தன. தாத்தாவிற்கு முடி வெட்டுவதையே உற்றுப் பார்த்துக் கொண்டும் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான் சச்சின்.
சிறிது நேரத்திற்கெல்லாம். தாத்தாவின் தலையிலிருந்த முடி சன்னமாகக் குறைந்திருந்தது.
” சார் சரியா இருக்கா பாருங்க. “
என்று முடிதிருத்துபவர் கேட்க இடது, வலது என்று தன் தலையைத் திருப்பிய தாத்தா
” ஓகே… பெர்பெக்ட் “
என்றபடியே தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டுக் கீழே இறங்கினார்.
” எவ்வளவு “
” முன்னூறு ரூபா “
என்று பதில் வர, தன் பாக்கெட்டில் பணத்தைத் தேடினார் தாத்தா.
” தாத்தா என்ன பண்ற ? “
” பணத்த எங்க வச்சேன்னு தெரியல அதான் “
என்று சச்சினுடன் பேசியபடியே தேடிக் கொண்டிருந்தார்.
” தாத்தா உன் போனக் குடு”
என்று வாங்கிய சச்சின்
” எவ்வளவு ? “
” முன்னூறு ரூபாய் ” என்று முடிதிருத்துபவர் சொல்ல,அங்கிருந்த கியூ ஆர் கோட்டில் ஸ்கேன் செய்து, பணத்தைச் செலுத்தினான்
” ஓகே.. போகலமா தாத்தா ?”
என்று சச்சின் சொல்ல,
“ம்… போகலாம் “
என்று சச்சினுடன் நடந்த தாத்தாவிற்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் வியப்பாகவும் இருந்தது.
‘சச்சின், சின்ன வயதாக இருந்த போது , அவனைத் தோளில் தூக்கி வந்தது, அவன் கையைப் பிடித்துக் கூட்டி வந்தது. அவனுக்கு முடி வெட்டுவதற்கு பத்து ரூபாய், இருபது ரூபாய் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வந்தது. இன்று அவன் நமக்கு சிகையலங்காரம் பற்றிச் சொல்கிறான். முடி வெட்டிய கட்டணத்தை கூகுள் பே யில் போடுகிறான். உலகம் வளர்ந்து விட்டது. சச்சினும் வளர்ந்து விட்டான் “
என்று ஆச்சர்யத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார் தாத்தா
” தாத்தா, அடுத்து உனக்கு முடி வெட்ட வரும் போது ஒன்னைய டூவீலர்ல தான் கூட்டிட்டு வருவேன் “
என்று சச்சின் சொல்ல, தன் இரு கண்களை அகலத் திறந்து, பேரனைப் பார்த்தார் தாத்தா.
காலம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இதில் நம் பேரன் மட்டும் என்ன விதிவிலக்கா? நேற்று நாம் அவனைக் கூப்பிட்டுப் போனோம். இன்று அவன் நம்மைக் கூப்பிட்டுப் போகிறான். நாளை சச்சினை அவன் மகன் கூப்பிட்டு போவான். சுழன்று கொண்டே இருக்கும் காலம்’ என்று நினைத்தபடியே பேரனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார் தாத்தா.
![]()





