சென்னை, அக்.4–
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் இருந்தது.
இதையடுத்து முதுநிலை டாக்டர்கள் குழுவினர், ரத்த நாளத்தில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும் வகையில் ‘ஸ்டென்ட்’ பொருத்தினர். ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேறியதை தொடர்ந்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவக்குழு அவரை கண்கானித்து வந்தது.
தொடர் சிகிச்சையில் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், டாக்டர்கள் ஆலோசனைகளின்படி சில வாரங்கள் அவர் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.