போஸ்டர் செய்தி

சிகாகோ உரையின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை, செப். 12–

விவேகானந்தர் காட்டிய வழியில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். சிகாகோ உரையின் 125-வது ஆண்டு விழாவையொட்டி சென்னை ராமகிருஷ்ணா மடம் சார்பில் கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா, கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

விழாவில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: விவேகானந்தர் பிறந்தது வங்காளத்தில் என்றாலும், அவரை சிகாகோவுக்கு அனுப்பி வைத்தது தமிழகம் தான். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு, விவேகானந்தரின் உரைகளிலேயே தீர்வு அடங்கியுள்ளது.

இந்தியா அடிமைப்பட்டு, ஏழ்மை நிலையில் இருந்த நிலையில், வேத கருத்துகள் மக்களை நல்வழிப்படுத்தும் என்று அவர் நம்பினார். பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. தொழில்நுட்பத்தில் பெரிதும் வளர்ந்திருந்தாலும், திறன் வாய்ந்த பணியாளர்களால் தொழில் முனைவோர்களாக மாற முடியவில்லை.

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்பதை விவேகானந்தரைப் போலவே, மத்திய அரசும் நம்புகிறது. எனவேதான், `ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம் மூலம் திறமையான தொழில்முனை வோரை உருவாக்க பயிற்சி அளித்து வருகிறோம்.

நாடு முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் திறன் வளர்க்கும் அடல் டிங்கர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். முத்ரா திட்டத்தின்கீழ் 13 கோடி பேருக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமையைப் போக்க, வீடு கட்ட கடனுதவி, இலவச சமையல் கியாஸ், மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். ஏறத்தாழ 10 கோடி குடும்பங்கள் மருத்துவ காப்பீடு உதவியைப் பெற்று வருகின்றன. தமிழக மக்களும் மருத்துவ உதவிகளை முறையாகப் பெறுவது பாராட்டுக்குரியது.

செப்டம்பர் 11ம் தேதி உலகையே அதிர வைத்த பயங்கரவாதம் அமெரிக்காவில் நிகழ்ந்தது. இது போன்ற வன்முறைகளுக்கு, சகிப்புத்தன்மையும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தீர்வாக அமையும் என விவேகானந்தர் தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டுமென்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். விவேகானந்தர் காட்டிய வழியில் நாம் புதிய இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கோவையில் நடந்த விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா பாண்டியராஜன் பேசுகையில், `இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும். கடினமான உழைப்பு மட்டுமின்றி, புத்திக்கூர்மையுடன், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் வெற்றியைத் தேடித்தரும். நமது கலாச்சாரம், பண்பாட்டைப் பாதுகாத்து, உலகமெங்கும் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது’ என்றார்.

ராமகிருஷ்ணா மிஷன் துணைத் தலைவர் கௌதமானந்தர், உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பவைத்த எழுச்சியுரை–அதன் சிறப்பும் இன்றைய அவசியமும்’ என்ற நூலை வெளியிட்டார். விழா ஒருங்கிணைப்பாளர் சுவாமி விமுர்த்தானந்தர் வரவேற்றார்.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாக்குழு பொருளாளர் சி.ஏ.வாசுகி நன்றி கூறினார். பார்வையற்ற சிறுவனான சபரி வெங்கட், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளைப் பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *