சினிமா

சிகரம் தொட்டிருக்கிறாள் ‘தங்கமீன்கள்’ சாதனா: இதயம் நனைத்திருக்கிறார் ‘மெகா ஸ்டார்’ மம்முட்டி!

தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருதுகளைக் குவிக்கும் இயக்குனர் ராமின் ‘பேரன்பு’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லலாம், ஜனவரி 31ந் தேதி வரை ரிலீசாகி இருக்கும் படங்களின் நிலவரப்படி.

* சிறந்த குழந்தை நட்சத்திரம் ‘தங்கமீன்கள்’ சாதனா.

* சிறந்த இணை நடிகர் – மம்முட்டி

* சிறந்த ஒளிப்பதிவாளர் ‘தேனீ’ ஈஸ்வர்

* சிறந்த டைரக்டர் – ராம்

மூளை முடக்குவாதம் (SPASTIC) காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுமியின் (தங்கமீன்கள் சாதனா) அவஸ்வதையும், அவளைக் கோழிக் குஞ்சு மாதிரி பொத்திப் பொத்தி பாதுகாக்கும் அப்பா மெகா ஸ்டார் மம்முட்டியின் பிரணாவஸ்தையும் தான் ‘பேரன்பு’ கதை.

மூளை வளர்ச்சி குன்றி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அக்குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் தான் பிரச்சனையே என்று வாழ்வியல் யதார்த்தத்தை மம்முட்டி வாய்வழி சொல்லியிருக்கிறார் ராம்.

* படம் பார்த்துவிட்டு வந்து கிட்டத்தட்ட 18 மணி நேரம் ஆன நிலையிலும் வெள்ளித் திரையில் பார்த்த சாதனாவின் அதே உருவம் (மேலுதடு – கீழுதடு விரிந்து நாக்கை இடப்பக்கம் திருப்பிய நிலையில், இரு கை விரல்களும் மடிந்து, காலை உயர்த்தி விரல்களை தரையில் அழுத்தி விந்தி விந்தி நடக்கும் அந்த பக்கவாட்டு நடையோடு கூடிய தோற்றம்) மனத் திரையில் இன்னமும் நிழலாடிக் கொண்டிருக்கிறதே?! அது சாமான்யத்தில் நடக்கிற காரியமா?

* ‘பாப்பா – பாப்பா…’ என்று அடிக்கொருதரம் குரல் கொடுத்து அவளோடு நிழலாகவே இருக்கும் அப்பா மம்முட்டியின் பாச அணைப்பும், ஆதங்கமும்… அவரின் வேதனை கவ்விய குரலும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறதே காதுகளில். அதுவும் லேசில் வரக்கூடியதா?

தூக்கத்தைக் கெடுத்து விட்டாள் குட்டி சாதனா

தூக்கி நிறுத்தி இருக்கிறார் மெகா ஸ்டார் மம்முட்டி.

தன்னுடைய வாழ்க்கையை ப்ளாஷ்பேக்கில் சொல்வது போல – ஒரு சுயசரிதை எழுதியதைப் போல மம்முட்டியின் வசீகரக் குரல் வேதனையில் தவிக்க காட்சிகள் நகர ஆரம்பிக்கிறது.

துபாயில் டிரைவராக வேலைக்குப் போகிறவன் 4 காசு சம்பாதித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் போது அதிர்ச்சி. மூளைமுடக்குவாத குழந்தையை புகுந்த வீட்டிலேயே விட்டுவிட்டு மனசுக்குப் பிடித்தவனோடு ஓடி விடுகிறாள் மம்முட்டியின் மனைவி. சிறுமியை மம்முட்டியின் குடும்பமே நிராகரிக்க, தனி மரம் ஆகிறான்.

‘மனித நடமாட்டமே இல்லாத இடம் வேண்டும்…’ என்று தீர்மானித்து மூடு பனி ’ கொடைக்கானல் தனிமை பங்களாவில் குடியேறுகிறான். அங்கு போன இடத்தில் மகளும் பூப்பெய்கிறாள். வயசுக்கு வந்த மகளை ‘தாயுமானவன்’ நிலையில் ‘சுத்தப்படுத்தும்’ சோதனை – சிக்கல் – வன்முறைத் தாக்குதல் – சொகுசு பங்களாவிலிருந்து வெளியேற்றம்… என்று அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள். பொழுது விடிந்து பொழுது போனால்… ஒவ்வொரு பிரச்சனை. இருப்பதை விட இறப்பதே மேல் என்று முடிவுக்கு வரும் நிலையில் மகளோடு கடலில் குளித்து தற்கொலைக்கு முயலும் நேரம் குறுக்கிடும் திருநங்கையின் சந்திப்பில் நடந்தது என்ன? இது தான் ‘பேரன்பு’ கதை.

147 நிமிடம் ஓடும் படம். சோகம். நெஞ்சைக் கவ்விப் பிடிக்கும் சோகம்.

Peranbu Movie Stills Starring Mammootty, Anjali

அஞ்சலியின் ‘திக்’ விஜயம் படத்தில் ஒரு திருப்பம்.

‘சாகறத்துக்கு இல்ல வாழ்க்கை, அது வாழத்தான்…’ அருமை! திருநங்கையின் அட்வைஸ்.

* ‘கல்குவாரி’ வன்முறை கும்பல் அடித்ததில் ரண காயத்துடன் படுத்து தூங்கும் அப்பா மம்முட்டியின் கன்னத்தை மெல்லிய விரல்களால் வருடிப் பார்க்கும் சாதனாவின் அந்த ஒரு காட்சி

* ‘நானே பாத்துக்கிறேன்…’ என்று டாய்லெட்டுக்குள் நுழைந்த மகள் தடாலென்று விழுந்த சத்தம் கேட்டு கதவை ஓங்கி தள்ளி உள்ளே போய் மகளை நெஞ்சோடு அணைத்து மம்முட்டி கண்ணீர் விட்டுக் கதறும் காட்சி

இவ்விரண்டு காட்சிகள் சாதனாவும், மம்முட்டியும் ‘மெகா’ ஸ்டார் என்று சொல்ல சாட்சி!

* * *

மகளின் பருவ வயது கோளாறு – உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடி, விபச்சார இல்லத்துக்குப் போய் ஆணுக்கு ‘அழகி வருவது’ போல பெண்ணுக்கு வரும் ஆண்கள் இருக்கிறார்களா?’ என்று மம்முட்டி வாய் கூசாமல் கேட்கும்போது, ‘அடப்பாவி பெத்த அப்பனா, இவன். அடுக்குமா… இது? சீச்சீ… என்ன கேவலம்..? என்று அரங்கம் முகஞ்சுளிக்கும் வெறுப்பைக் காட்டும். ஆனால் அந்த விபச்சார இல்ல அழகி, மம்முட்டியின் கன்னத்தில் ‘பளார்’ அறை அறைந்ததில் நமக்கு நெஞ்சுக்கு நிம்மதி.

* * *

தேனீ ஈஸ்வரின் காமிரா, யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை: ராமுக்கு வலுவான தூண்கள்.

இதுவரையில் திரையில் யாரும் சொல்ல மறந்த கதை.

தயாரிப்பாளர் தேனப்பனின் 35 ஆண்டு சினிமா அனுபவத்தில் அவர் கலை வாழ்வில் மைல் கல் படைப்பு.

* ஓடும் நேரத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

*‘அவஸ்தைப்படும்’ சாதனாவின் முகத்துக்கு பல தடவை காமிரா நகரும் டைட் க்ளோசப்பை தவிர்த்திருக்கலாம்!

* * *

ராமின் ‘பேரன்பு’:

சர்வதேச பட விழாக்களில் அழுத்தமான அங்கீகாரம்;

‘தங்கமீன்கள்’ சாதனா சிகரம் தொட்டிருக்கிறார்!

‘மெகா ஸ்டார்’ மம்முட்டி இதயம் நனைத்திருக்கிறார்!

 

– வீ.ராம்ஜீ –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *