சென்னை, மார்ச் 12–
சிஎஸ்கே போட்டிக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.
சென்னை அணியின் கேப்டன் தோனியின் ஆட்டத்தை காண பல ரசிகர்கள் டிக்கெட் வாங்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதன் காரணமாக, கடந்த ஆண்டு நேரடியாக கவுண்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் பல ஆயிரங்கள் அதிகமாக வைத்து டிக்கெட்டுகளை விநோயோகித்தனர். அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.