செய்திகள்

சிஎஸ்கே அணியில் புதிய ரோல்: தோனி வெளியிட்ட சர்ப்ரைஸ்

சென்னை, மார்ச் 5–

சிஎஸ்கே அணியில் ‘புதிய ரோல்’ என்று தோனி வெளியிட்ட அறிவிப்பு ரசிர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி வரும் புதிய ஐபிஎல் சீசனில் தனது புதிய பாத்திரம் பற்றிய முக்கிய அறிவிப்பை சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புதிரான அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“புதிய சீசன் மற்றும் புதிய ரோல்… காத்திருங்கள்!” என்று தோனி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு வரவிருக்கும் ஐபிஎல்லில் தோனி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

‘புதிய சீசன்’ பற்றிய குறிப்பு 2024 ஐபிஎல் தொடரைத்தான் குறிக்கிறதா என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், ரசிகர்களிடையே பரவலான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கி இருப்பது தோனியின் ‘புதிய ரோல்’ என்ன என்பதுதான்.

கடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியனான சிஎஸ்கே மார்ச் 22ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியுடன் ஐபிஎல் 2024 சீசனைத் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஐந்து முறை சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த கேப்டன் தோனி, கடந்த ஆண்டு பெற்ற வெற்றிக்குப் பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.அடுத்த சீசனுக்காக சென்னையில் சிஎஸ்கே அணியின் முகாம் மார்ச் 2ஆம் தேதி தொடங்கியுள்ளது. முகாமில் கேப்டன் தோனி எப்போது இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் அவரது புதிரான அறிவிப்பு வந்துள்ளது.

2023இல் ஐபிஎல் கோப்பையை வென்ற உடனேயே தோனி, இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மும்பையில் உள்ள அம்பானி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *